அவர்கள் மோகினிகள் அல்ல காளிகள்: சா.ஜெ.முகில் தங்கம்

“எனக்கு நாலு புள்ளைங்க இருக்கு, பேரக்குழந்தைங்க கூட இருக்காங்க” என்றார் அந்த வயதான திருநங்கை. பேசிக்கொண்டே இருக்கும்பொழுது பெருத்த குரலெடுத்துப் பாடத்தொடங்குகிறார். அந்த பாடல் கூத்தாண்டவரைப் பற்றிபேசுகிறது. மிகுந்த மூர்ச்சையுடன் அவர் பேசிவிட்டு போனதையே நினைத்துக்கொண்டிருக்கிறேன். “நாங்கலாம் பாவம் செஞ்சிருப்போம் போல போன சென்மத்துல அதன் இப்படி ஒரு பொறப்பு” என்றார் அவர். கூவாகம் வியப்பின் உச்சம்தான்.

அந்த இரண்டு நாட்கள் மட்டும் அவர்கள் கிருஷ்ணரின் அவதாரங்கள். மற்ற எல்லா நாட்களிலும் அவர்கள் பேடிகள், அலிகள், ஓம்போதுகள், அரவாணிகள். பலநேரங்களில் யாரென்றுத் தெரியாத திருநங்கைகளை ஏசிவிட்டும் ஏளனமாய்ப் பார்த்துவிட்டும் போன கண்களும் வாய்களும் அன்று அவர்களை சாமியாகவேப் பார்க்கிறது. கூவாகம் வித்தியாசத்தின் திருவிழா, அன்பின் திருவிழா, சோகத்தின் திருவிழா, என்று அதற்கு பல முகங்கள், நமக்கு அது அரவாணிகளின் திருவிழாவாக மட்டுமே தெரிகிறது. பல நேரங்களில் பல முகங்கள் தெரிவதில்லை.

கூத்தாண்டவர் திருவிழா

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டைக்கு அருகில் இருக்கும் கிராமம் கூவாகம். தமிழகத்தின் எல்லா கிராமங்களை போலவே இருக்கிறது, ஊரும் காலனியுமாக. அந்த சின்ன கிராமத்தில்தான் அத்தனை பெரிய விழா. கூத்தாண்டவர் (அரவான்) கோயில் திருவிழா. சித்திரையின் முழுநிலவைக் கொண்டு 18 நாட்கள் திருவிழா நடக்கிறது. இதில் 15 மற்றும் 16 ஆம் நாள்கள்தான் உச்சபட்ச திருவிழா. அந்த இரண்டு நாட்களும் திருநங்கைளுக்கானது. அவர்கள்தான் விழாவின் மையம்.

அரவானின் புராண கதை

திருநங்கைகளின் கணவராக கூறப்படும் கூத்தாண்டவர் எனும் அரவானின் புராணக்கதை மகாபாரதத்தினை தொட்டுச் செல்கிறது. பாரதப்போர் ஆரம்பம் ஆவதற்கு முன் யுத்ததேவதைக்கு 32 சாமுத்ரிகா இலட்சணமும் பொருந்திய இளைஞனை பலியிட்டால் அவன் சார்ந்த அணி வெற்றி பெரும் என்பது நம்பிக்கை. பாண்டவர்கள் சார்பில் 32 சாமுத்ரிக இலட்சணமும் பொருந்தியவர்கள் அர்ச்சுனனும் கிருஷ்ணனும். அவர்களை பலியிட முடியாது எனவே அர்ச்சுனனுக்கும் நாகக்கன்னிக்கும் பிறந்த அரவானை பலியிட முடிவுசெய்கின்றனர். அவனும் சாமுத்ரிகா இலட்சணம் பொருந்தியவன். பலியிடுவதற்கு முன் அரவான் இரண்டு நிபந்தனைகளை விதிக்கிறான்.

1.திருமணம் செய்துகொண்டு இல்லற இன்பத்தை அடைய வேண்டும்

2.இறந்தபின்னும் மகாபாரத போரை காணும் வண்ணம் என் கண்கள் திறந்தே இருக்க வேண்டும்.

இறக்கப்போகும் அரவானை மணந்துகொள்ள யாரும் முன்வராததால் கிருஷ்ணரே மோகினியாய் மாறி அவரை மணந்து இல்லற சுகத்தை அளிக்கிறார். அதன்பின் அரவான் பலி கொடுக்கப்படுகிறான். இப்படிதான் அவர்கள் இரண்டு நாட்கள் கிருஷ்ணராய் வாழ்கிறார்கள்.

தாலிக்கட்டுதலும் அரவான் ஊர்வலமும்

புராணக்கதையின் படியே விழாவின் 15 ஆவது நாள் திருநங்கைகள் மணக்கோலம் பூண்டு தாலிக்கட்டிக் கொள்கின்றனர். பூசாரிகள் அவர்களுக்குத் தாலி கட்டிவிடுகிறார். அன்று இரவு திருநங்கைகள் அனைவரையும் மணப்பெண்களை மீஞ்சி காட்சியளிப்பார். அவ்ளோ அழகு அத்துனை பேரும். அதே ஊரில் ஆண்களும் தாலிகட்டிக் கொள்கின்றனர். மொட்டை அடிப்பது போல தலிக்கட்டி கொள்ளுதலும் ஒரு நேர்த்திக்கடன் அவ்வூரில்.

அன்று இரவு முழுவதும் ஆனந்த கும்மி பாடுகின்றனர் திருநங்கைகள்.வயல்வெளிகள் பக்கம் சென்றால் மோகினியாகவே அவதாரம் எடுத்து நிற்கின்றனர். அன்று இரவு மட்டும் அரவானாக மாற நினைக்கும் இளவட்டங்கள்,என் 18 நாட்கள் திருவிழாக்களிலேயே முக்கியமான இரவு. காவல்துறை கூடஅன்று வசதியாய் தூங்கிப்போகிறது.

அன்று இரவை கடந்தால் அடுத்த நாள் காலை 6 மணிக்கெல்லாம் அரவானின் பாகங்ககள் வெவ்வேறு ஊர்களில் இருந்து எடுத்து வரப்பட்டு அரவான் கட்டி எழுப்பபடுகிறான். அரவான் தேர் மாடவீதிகளில் ஊர்ந்து செல்கிறது. அருகிலிருக்கும் காலனிக்குள் செல்வதில்லை. அங்கிருந்த பெரியவரிடம் இதைப்பற்றி கேட்டபோது, “அங்க ரோடு சரியில்ல தம்பி அதான் தேர் அங்கபோவாது”, என்று சொன்னவரின் கால்களுக்கு கிழே ரோடே இல்லை.

காலனி மக்கள் அனைவரும் ஒரு முச்சந்தியில் வைத்து அரவானை வழிபடுகின்றனர். அவர்கள் மாடவீதிக்குள் வருவதில்லை. கிராமங்களை மாற்ற முடியாதுதான். திருநங்கைகள் எல்லோருக்கும் ஒரு குடும்பம் உண்டு அதில் திருநங்கைகள் மட்டுமே இருப்பார்கள். அவர்களது குடும்பங்களுடன் அரவான் தேரின் முன் தேங்காய் உடைத்து சூடம் கொளுத்தி கும்மி பாடுகின்றனர். அவர்களது பாடல்கள் முழுக்க அரவானையும் திருநங்கைகளையும் பற்றியே இருந்தது. அவர்களது வாழ்நிலை அப்பாடலின் வழியே பிரதிபலிக்கிறது.

தாலி அறுத்தல்

மாடவீதியைச் சுற்றி வந்த அரவான் அழிகளம் நோக்கி புறப்படுகிறார். கூவாகம் அருகில் உள்ள நத்தம் கிராம பந்தலடிதான் அந்த அழிகளம். மணப்பெண்கள் விதவைகளாகும் களம். மணப்பெண் கோலம் அலங்கரித்த திருநங்கைகள் வளையல் உடைத்து தாலி அறுத்து அழுது புலம்புகின்றனர். இனி அடுத்த வருடம்தான் மணப்பெண்ணாய் மாற முடியும் என்ற புலம்பல்களும் உண்டு.அழிகளம் முழுக்க வலியால் உடைந்து சிதறி கிடந்தன. அதன்பின் குளித்து முடித்து வெள்ளை சேலை உடுத்தி விதவைகளாய் ஊர்திரும்பஆயத்தமானார்கள்.

உண்மையில் கூவாகம்

கூவாகம் மிகச்சிறிய கிராமம், இவ்வளவு பெரிய விழாவை தாங்கும் கட்டமைப்பு அதற்கு இல்லை. அதனை ஏற்படுத்த வேண்டியது மாவட்ட நிர்வாகம்தான். பொதுகழிப்பிடம் கூட இல்லாமல்தான் இவ்விழா நடைபெறுகிறது. இரண்டு ம்ன்றூ நாட்கள் தங்கியிருக்கும் திருநங்கைகள் எல்லாவற்றிற்கும் வெட்ட வெளியையே நாட வேண்டிய நிலைமை உள்ளது. உலகமே பார்க்ககூடிய விழாவில் இத்தகைய கட்டமைப்புகள் அதன் சிறப்பை மங்க செய்யும்.

இவ்விழா ஆகப்பெரிய மூடநம்பிக்கையின் ஊற்றுகோல்தான். அந்த மூடநம்பிக்கையை விட திருநங்கைகளுக்கனா வெளி உருவாகுவது என்பது நமது சமூதாயத்தில் இல்லாத ஒன்று. இங்கு அவர்கள் கூடி பேசுகின்றனர்,அவர்களுக்கான மிகப்பெரிய சந்திப்பை இவை ஏற்படுத்துகின்றன. சமூகம் அவர்களை புறந்தள்ள புறந்தள்ள அவர்களுக்கான சமூகம் அங்கே உருவாகிறது. இன்னும் வீட்டுக்கு தெரியாமல் கூத்தாண்டவருக்கு தாலிகாட்டி கொள்ளும் திருநங்கைகள் பதிக்கு பாதி இருக்கின்றனர். ஆரம்பத்தில் பேசிய வயதான திருநங்ககையும் அப்படிதான். இவ்விழாவில் திருநங்கைகளுக்கான பாதுகாப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பது கேள்விக்குறிதான். அங்கிருக்கும் இளவட்டங்கள் திருநங்கைகளுடன் புகைப்படம் எடுத்துகொள்வதாக சொல்லி பண்ணும் பாலியல் சேட்டைகள் கொஞ்சமல்ல. அவர்களை பாலியல் பொம்மைகளாகப் பார்ப்பதால் மட்டுமே இவையெல்லாம் நிகழ்கின்றன.எல்லோரும் அதனைப் பார்த்து கொண்டேதான் இருக்கிறோம். பார்த்துக்கொண்டேதான் இருப்போம். ஏனா அவங்கல்லாம் அரவாணிகள்தானே…………………..


-சா.ஜெ.முகில் தங்கம்

படங்கள் : ராதிகா

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*