கொடநாடு கொலை சாமியார் கைது!

கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம் பகதூரை கொலை செய்து, பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக கேரளாவை சேர்ந்த சாமியார் மனோஜ் நேற்று கைது செய்யப்பட்டார்

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் மர்ம கும்பலால் கடந்த 24-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். ஜெயலலிதா அறையில் ரூ.200 கோடி பணம் இருப்பதாக கருதியே கொள்ளை கும்பல் இச்சம்பவத்தில் ஈடுபட்டது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சேலம் ஆத்தூரில் நடந்த சாலை விபத்தில் பலியானார். இவரது கூட்டாளியான கோவையை சேர்ந்த சயானும் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருச்சூரை சேர்ந்த சதீசன், தீபு, சந்தோஷ், உதயகுமார் ஆகிய 4 பேரையும் கொடநாடு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கேரள காவல்துறையினர் மலப்புரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது  இவ்வழக்கில் தொடர்புடைய விதித் ஜாய்,ஜம்சீர் அலி, அமிஸ் அனூப் ஆகிய மூவர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை காவல்துறையினர் இன்று நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவுள்ளனர். அனுமதி கிடைத்ததும் இருவரையும் நீலகிரி அழைத்து வந்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

இவ்வழக்கில் மற்றொரு முக்கிய குற்றவாளியான மனோஜ் மற்றும் குட்டி என்கிற ஜிஜின், சங்கனாச்சேரி சாமி ஆகியோரை பிடிக்க தனிப் படையினர் கேரளாவில் முகாமிட்டனர். அப்போது ஹவாலா கும்பல் தலைவன் மனோஜ் வயநாட்டில் பதுங்கி இருப்பது தனிப்படை காவல்துறையினருக்கு  தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று மனோஜை நேற்று கைது செய்தனர். அவரிடம்  ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். கொடநாடு கொலை- கொள்ளை சம்பவத்துக்கு திட்டம் வகுத்து கொடுத்த முக்கிய குற்றவாளியான மனோஜை கொடநாடுக்கு அழைத்து சென்று விசாரிக்கவும் தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர். மனோஜ் ஒரு சாமியார் ஆவார். அவர் மீது ஏற்கனவே ஹவாலா வழக்குகள், மோசடி வழக்குகள் போன்ற பல வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*