மத்திய அரசை அமைச்சர்கள் விமர்சிக்க வேண்டாம் : முதல்வர் பழனிசாமி

அமைச்சர்கள் யாரும் மத்திய அரசை விமர்சிக்க வேண்டாமென்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று  காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் கூடியது. இதில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கும் போது துறை ரீதியாக என்னென்ன அறிவிப்புகள் வெளியிடுவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பேரவை விதி எண்.110-ன் கீழ் முக்கிய அறிவிப்புகள் வெளியிடுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து ஓரிருநாளில் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது. அதில், சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்தெந்த துறையை சார்ந்த மானிய கோரிக்கை விவாதத்தை எந்த நாளில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுடன் மாநில அரசுக்கு இணக்கமான சூழல் உள்ளதால் மத்திய அரசை யாரும் விமர்சிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போதைக்கு அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான சூழல் இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது. மத்திய அரசின் ஆதரவுடன்தான் பன்னீர் செல்வம் அணி செயல்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது. அதனால் மத்திய அரசின் ஆதரவை பழனிசாமி தரப்பு பெறவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது. எனவேதான் இந்த அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மத்திய அரசிடம் நல்ல பெயர் வாங்குவதற்குதான் தனது காரிலிருந்து இந்தியாவிலேயே ஒரு முதலமைச்சர் என்ற முறையில் சிவப்பு சுழல் விளக்கை முதலில் பழனிசாமி அகற்றினார் என்றும் பல்வேறு தரப்பினரால் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*