எடப்பாடி பழனிசாமிக்கு தண்ணீர் காட்டும் தோப்பு வெங்கடாசலம்!

பன்னீர் அணியுடனான பேச்சுவார்த்தைக்கு எடப்பாடி பழனிசாமி அணியினர் தயாராக இருந்த போதும் பன்னீர் அணியினரின் நிபந்தனைகளால் பேச்சுவார்த்தை முறிந்து போனது.
ஆனால், தனிப்பெரும்பான்மையுடன் எடப்பாடி பழனிசாமி அரசு ஆட்சியில் இருந்தாலும் இந்த அரசு எத்தனை நாளைக்கு நீடிக்கும் எனத் தெரியவில்லை. காரணம் ஒவ்வொரு அமைச்சருக்குள்ளும் முதல்வர் கனவும், ஒவ்வொரு எம்.எல்.ஏக்களுக்குள்ளும் ஒரு அமைச்சர் கனவும் உள்ளது. அதிமுகவின் ஒவ்வொரு உறுப்பினரும் தன்னை அதிமுக தலைவர்களாக கற்பனை செய்து கொண்டிருப்பதன் விளைவு எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆலோசனை குழு அரசியல் என குழம்பிக் கிடக்கிறது அதிமுக அரசு.
பொதுவாகவே கழகங்களின் ஆட்சியில் பிறப்படுத்தப்பட்ட சாதிகளுக்கே அதிக அதிகாரங்கள் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த அதிமுக அரசில் அதிக எம்.எல்.ஏக்களைக் கொண்ட தலித் எம்.எல்.ஏக்கள் 32 பேர் சமீபத்தில் அதிகாரப்பங்கீடு கோருவது பற்றி தனியாக ஆலோசனை நடத்தினார்கள்.
அது முளையிலேயே கிள்ளி எரியப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமியின் சொந்த சாதியைச் சார்ந்த கொங்கு எம்.எல்.ஏக்களில் 13 பேர் தனியாக ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.
பெருந்துரையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக்கூட்டத்தில் ஈரோடு,கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள் ஆலோசனை நடத்தியுள்ளார்கள்.
இவர்கள் ஆலோசனை நடத்திய அதே தினத்தில் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள ஸ்ரீவாசவி கல்லூரி விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். ஆனால் இந்த விழாவை முன்னாள் அமைச்சரும் 13 எம்.எல்.ஏக்களும் புறக்கணித்து விட்டு தனியாக கூட்டம் நடத்தியுள்ளது அதிமுக தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
செங்கோட்டையன் தன்னை அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து சசிகலா நியமனத்தால் அமைச்சர் ஆனது போல கொங்கு மண்டத்தில் சிலருக்கு அமைச்சராகும் ஆசை வந்திருக்கிறது. இப்போதைய சூழலை விட்டால் இனி எப்போதும் இது மாதிரி சூழல் வராது என்பதை புரிந்து கொண்ட தோப்பு வெங்காடச்சல் தன் பங்கிற்கு 13 பேரை தனி அணியாக்கியிருக்கிறார்.
தன்னை கட்சியில் இருந்து எவரும் தனிமைப்படுத்த முடியாது என்பதை தலைமைக்கு உணர்த்தியிருக்கும் தோப்பு வெங்கடாச்சலம் அமைச்சர் பதவியை குறி வைக்கிறார் அல்லது. கட்சியில் முக்கிய பொறுப்பு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*