பசுக்கள் மீது ஆசிட் வீசும் கிராம மக்கள்!

நெற்களத்தில் தாக்க வந்த புலியை முறத்தால் துரத்திய பெண் பற்றி சங்க இலக்கியத்தில் வாசித்திருக்கிறோம். வயல்வெளிகளில் பசு மாடுகள் மீது ஆசிட் வீசி துரத்தும் கிராம மக்கள் தொடர்பான செய்தி இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காலந்தோறும் இந்தியாவில் பெண் கொடுமை பல வடிவங்களில் பேணப்படுகிறது. காதலிக்கும் பெண் தனக்கே சொந்தம் அப்பெண் கிடைக்கா விட்டால் ஆசிட் வீசி அவரது அழகை சிதைப்பது இந்தியா முழுக்க பல ஆண்டுகள் பெண்களுக்கு எதிராக கையாளும் வன்முறை வடிவங்களில் ஒன்று.
பாலியல் வன்முறை, ஆசிட் வீச்சு போன்ற சம்பவங்களில் பெண்களே பாதிக்கப்படுகிறவர்களாக இருந்த போதிலும் இது தொடர்பான அறிவுரைகளையும் அவர்களே கேட்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில் வயலில் மேய வரும் பசுமாடுகளை துரத்த புதுடெல்லி எல்லையோரப்பகுதியில் அமைந்துள்ள பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள போபானி கிராம மக்கள் வயல் வெளியில் மேய வந்த மாடுகளைத் துரத்த ஆசிட்டை பயன்படுத்தி உள்ளார்கள்.
பசு பாதுகாப்பு எனும் பெயரில் மாட்டுக்கறி உண்கிறவர்கள் மீதும், மாடுகளை விற்பனை செய்ய கொண்டு செல்கிறவர்கள் மீது முதியவர், குழந்தைகள், பெண்கள் என்றவேறுபாடில்லாமல் தாக்குதல்களும் கொலைகளும் நடந்து வரும் நிலையில் ஆளும் பாஜக அரசு தங்கள் ஆளும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு சட்டங்களை இயற்றியுள்ளதோடு, பசுக்களுக்காக ஆம்புலன்ஸ் வசதியையும் செய்துள்ள நேரத்தில் பசுக்கள் மீது ஆசிட் வீச்சு சம்பவம் பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான மாடுகளை பரிசோதித்த டாக்டர்கள், ஒரு மாட்டின் பின்பகுதி முழுவதும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மாட்டின் உள்ளுறுப்புகளும் சேதமடைந்துவிட்டன என்று தெரிவித்துள்ளார்.
அவற்றுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதை அடுத்து, சில மாடுகள் குணமடைந்து வருவதகாவும் விலங்குகள் நல வாரிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். இதுவரை நடந்துள்ள ஆசிட் வீச்சு சம்பவங்கள் தொடர்பாக உயர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*