பா.ரஞ்சித் மீது ஏன் இத்தனை வன்மம்?

தமிழ் திரையுலகில் மிகக்குறுகிய காலகட்டத்தில் உச்சம் சென்ற இளம் இயக்குனர் பா.ரஞ்சித். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்து பின் படிப்படியாக வளர்ந்து மிகுந்த சிரமங்களுக்கு இடையில் ‘அட்டக்கத்தி’ படத்தை முடித்து வெளியிட்டார். தனது அறிமுகப் படத்திலேயே நல்ல பெயர் வாங்கினார். அதன் பின்னர் வடசென்னை மக்களின் வாழ்க்கை மற்றும் அரசியல் சார்ந்து நடிகர் கார்த்தியை வைத்து அவர் இயக்கிய இரண்டாவது படமான ‘மெட்ராஸ்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற அடுத்து சூர்யாவை வைத்து படம் செய்ய திட்டமிட்டிருந்த வேளையில் தான் அவருக்கு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரிடம் இருந்து அழைப்பு வந்தது.

பின்னர் ரஜினிக்கு ரஞ்சித் சொன்ன கதை பிடித்துப் போக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு இளம் இயக்குனருடன் புது அணியுடன் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியானதுதான் ‘கபாலி’ படமாகும். இதனையடுத்து தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குனர்களில் ஒருவராக மாறினார் பா.ரஞ்சித். ‘கபாலி’ படம் வெளிவரும் முன்னே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. தலித் அரசியல் பேசும் படமென்பதால் ரஞ்சித்துக்கு கடும் எதிர்ப்பும் மிரட்டல்களும் வந்தன. ஆனால் அத்தனை தடைகளையும் மீறி ‘கபாலி’ வசூல் சாதனை செய்தது இங்கே பலருக்கு ரஞ்சித் மீது தீராத கோபத்தை ஏற்படுத்தியது.

சமீபத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித், “பாகுபலி 2 படத்தில் சமுதாய அக்கறை இல்லை” என கருத்து தெரிவித்ததாக வதந்தியை பரப்பி விட்டு சமூக வலைதளங்களில் அவரை கேலி செய்ய ஆரம்பித்து விட்டனர்.

ஒருவரது மிகப்பெரிய வளர்ச்சியை கண்டு எத்தனை பேர் வன்மம் கொண்டிருக்கிறார்கள் என்பது நேற்று சமூக வலைதளத்தை பார்த்த போது தெரிந்தது. எப்பொழுது வாய்ப்பு கிடைக்கும், எப்பொழுது ஒருவர் தப்பு செய்வார், அவரை எப்படி தூற்றலாம் என்ற மனநிலை தான் இன்று பெரும்பாலானோர் மத்தியில் விரவிக் கிடக்கிறது. ஆனால் ஒருவர் செய்யாத செயலை கூறி, அவரை தூற்றுவது ஆரோக்கியமான விஷயமல்ல. அப்படியே ரஞ்சித் கூறியிருந்தாலும் அது உண்மைதான், பாகுபலி திரைப்படம் ஒரு கற்பனை காவியமே தவிர மக்களுக்கான படைப்பு அல்ல.

ஆனால் இதுபோன்ற விமர்சனங்கள் எழும்போது ரஞ்சித், “என் மீதான தனிநபர் விமர்சனமும்,  காழ்ப்புமிக்க வசையும், நான் சரியான பாதையில் தான் செல்கிறேன் என்பதை உணர்த்துகின்றன” என்று தெரிவித்திருந்தார். அவர் இதுபோன்ற எதிர்ப்புகளை துளியும் மதிப்பதில்லை.

6 Comments

  1. அட்டகத்தி-மெட்ராஸ் -மட்டும் சமூகம் சார்ந்த படமா ?

  2. படைப்புகளை மட்டும் பாருங்கள் படைபாளி பற்றி ஆய்ரச்சியில் ஈடுபடாதீர்கள்

  3. சினிமாக்கள் ராஜா காலத்துக் கதைகளையும்பணக்காரர்கள் வீட்டுக் கதைகளையும் படமெடுத்து. இப்போது இளம் இயக்குனர்கள் ஏழைவீட்டுக் கதைகளைச் சொல்ல வருகின்றனர்.வரவேற்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published.


*