கமல்ஹாசன் வழியில் விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக இயங்கி வந்த விஜய் சேதுபதி, கடந்த 2010 ஆம் ஆண்டு சீனு ராமாசாமி இயக்கத்தில் வெளியான `தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாதயை அமைத்துக் கொண்டார். அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரத்தை தேர்வு செய்கிறார்.

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆரஞ்சு மிட்டாய்’. அவரே தயாரித்து முதல் முதலாக வசனம் எழுதிய இந்த படத்தை பிஜு விஸ்வநாத் இயக்கியிருந்தார். வணிக ரீதியாக வெற்றி பெறாத போதிலும் சில விருதுகளை வென்றது இந்த திரைப்படம். விஜய் சேதுபதி நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இந்நிலையில், பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் அவர் மீண்டும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் என மூன்றையும் அவரே எழுதவிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு திரைப்படம் இயக்கும் எண்ணம் இருப்பதாக விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார். அதற்கான அடித்தளமாக இந்த திரைப்படம் அமையும் என எதிர்பார்க்கலாம். கதை, திரைக்கதை, வசனம் என அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு இயக்க வேலையை வேறு நபரிடம் ஒப்படைப்பது கமல்ஹாசன் ஸ்டைல். இதையே விஜய் சேதுபதியும் பின்பற்ற இருக்கிறார் போல, `விக்ரம் வேதா’, `கருப்பன்’, `96′, `அநீதிக்கதைகள்’ உள்ளிட்ட பட வேலைகள் முடிந்த பின் இந்த படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*