கொடநாடு கொலை மேலும் ஒருவர் கைது!

கொடநாடு பங்களா காவலாளி கொலை சம்பவத்தில் மனோஜ் என்பவரை கேரளாவில் இன்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 24-ஆம் தேதி காவலாளி ஓம் பகதூரை மர்ம கும்பல் கொலை செய்தது. மேலும் மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூரையும் தாக்கி விட்டு பங்களாவில் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து நீலகிரி மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் பலியானார். இதேபோல் திருச்சூரை சேர்ந்த மற்றொரு குற்றவாளியான சயானும் விபத்தில் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கனகராஜும், சயானும் அடுத்தடுத்து சாலை விபத்தில் சிக்கியது அனைவரிடத்திலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக சதீசன், திபு, சந்தோஷ், உதயகுமார் ஆகிய 4 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் திருச்சூரை சேர்ந்த விதித் ஜாய், ஜம்சீர் அலி, அமிஸ் அனூப் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த கொலை, கொள்ளைக்கு திட்டம் வகுத்து கொடுத்த ஹவாலா கும்பல் தலைவன் சாமியார் மனோஜையும் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் சில முறை போயஸ் கார்டனுக்கு சென்று வந்திருக்கிறார் என்றும் அதனை வைத்து இவர் பல பேரை ஏமாற்றியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இவ்வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த கேரள மாநிலம் சங்கனாசேரியை சேர்ந்த சாமி என்கிற மனோஜை  தனிப்படை காவல்துறையினர் கேரளாவில் இன்று கைது செய்தனர். இவருடன் சேர்ந்து மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இன்னும் ஜிஜின் என்பவர் மட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால் அவரை பிடிக்கும் பணியில் தனிப்படையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*