மத்திய அரசின் தூய்மைத் திட்டத்தில் பங்கேற்காத மே.வங்கம்!

திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மேற்கு வங்காளம், மத்திய அரசு நடத்திய தூய்மை ஆய்வில் பங்கு கொள்ளவில்லை. இந்த ‘ஸ்வச் சுர்வெக்‌ஷான்’ மதிப்பாய்வின் முடிவுகள் நேற்று ( மே 4) வெளியாயின.
“மேற்கு வங்காளத்தில் ஆய்வில் பங்கேற்கதக்க அறுபது நகரங்கள் இருக்கின்றன. இருப்பினும், அவர்கள் பங்கேற்கவில்லை” என மத்திய நகர மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேற்கு வங்காளத்தின் நகர மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர், “ மமதா பானர்ஜி ‘நிர்மல் பாங்ளா’ எனும் தூய்மை திட்டத்தை துவக்கியிருக்கும் போதும், இந்த ஆய்வில் பங்கேற்பதில் ஒரு அர்த்தமும் இல்லை” என பதிலளித்திருக்கிறார். கடந்த மாதம் நடந்த நிதி ஆயோக் கூட்டத்திலும் மமதா பானர்ஜி பங்கேற்கவில்லை.
மத்திய அரசால் ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த ஆய்வில் 500 நகரங்கள் பங்கேற்றன. இதன் முடிவு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவால் வெளியிடப்பட்டது. மத்திய பிரதேசத்தில் இருக்கும் இண்டோர் நகர் தூய்மையான நகரம் எனவும், உத்திர பிரதேசத்தில் இருக்கும் கோண்டா மிக அசுத்தமான நகரம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*