முலாயம் தலைமையில் புதிய கட்சி!

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு எதிராக அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் தனிக் கட்சி தொடங்கியிருக்கிறார்.

நடந்து முடிந்த உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சமாஜ்வாதி கட்சிக்குள் அதிகாரத்தில் யார் பெரியவர் என்று அகிலேஷிற்கும், ஷிவ்பால் யாதவிற்கும் மோதல் ஏற்பட்டது. இதானல் சமாஜ்வாதி கட்சியில் பிளவு ஏற்பட்டது. தேர்தலில் போட்டியிட அகிலேஷ் யாதவ் சிபாரிசு செய்த நபர்களை மாநிலத் தலைவரும் முலாயம்சிங் யாதவின் சகோதரருமான ஷிவ் பால் யாதவ் அங்கீகரிக்காததும் பிரச்னைக்கு காரணமென்று கூறப்பட்டது இப்பிரச்னையால் கட்சியின் சின்னமும், பெயரும் யாருக்கு சொந்தமென்ற கேள்வியும் எழுந்தது. பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் அகிலேஷ் யாதவ் பக்கம் இருந்ததால் கட்சியின் பெயரும், சைக்கிள் சின்னமும் அவருக்கே வழங்கப்பட்டது. தேர்தல் நெருங்கி வந்த நிலையில் சமாஜ்வாதி கட்சிக்குள் ஏற்பட்ட இந்த விரிசல் நிச்சயம் உத்தரபிரதேச தேர்தலில் பிரதிபலிக்கும் என்று கருதப்பட்டது.இதற்கேற்றார் போல யாருக்காகவும் தாம் பிரச்சாரம் செய்யப் போவதில்லை என்று முலாயம்சிங் யாதவ் வெளிப்படையாகவே அறிவித்தார்.

இதனையடுத்து முலாயம் ஆதரவில்லாமல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் அகிலேஷ் யாதவ் போட்டியிட்டார். 403 இடங்களில் அகிலேஷ் 50க்கும் குறைவான இடங்களையே கைப்பற்றி அகிலேஷ் படுதோல்வி அடைந்தார். தேர்தல் தோல்வி சமாஜ்வாதி கட்சிக்குள் மீண்டும் பிரச்சனையை அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து கட்சிப் பொறுப்புகளை முலாயம்சிங்கிடம் ஒப்படைக்காவிட்டால் தனிக் கட்சி ஆரம்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று ஷிவ்பால் யாதவ் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் சமாஜ்வாதி செக்குலர் மோட்சா என்ற புதிய கட்சியை தொடங்குவதாக ஷிவ்பால் யாதவ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கட்சியின் தலைவராக முலாயம் சிங் யாதவ் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதனால் உத்தர பிரதேச அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் முலாயம் சிங்கின் இந்நடவடிக்கை மூலம் உத்தர பிரதேசத்தில் அகிலேஷின் அரசியல் எதிர்காலம் பாதிக்க்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*