122 எம்.எல்.ஏக்களும் கொத்தடிமைகள் : கனகராஜ் எம்.எல்.ஏ

122 எம்.எல்.ஏக்களும் கொத்தடிமைகள் போல் இருக்கும் சூழ்நிலை இருப்பதாக சூலூர் எம்.எல்.ஏ காமராஜ் கூறியுள்ளார்.

அதிமுகவின் இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்துவதில் இழுபறி நிலவி வருகிறது. பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமென்றால் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும், சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு நிரந்தரமாக ஒதுக்க வேண்டும் ஆகிய 2 நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என கூறியுள்ளது பன்னீர் செல்வம் அணி. பேச்சுவார்த்தை நடத்த காலம் கனிந்துவிட்டது, கதவு திறந்தே இருக்கிறது எனக் கூறி பழனிசாமி ஈபிஎஸ் அணியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே பேச்சு என்கிற தங்களின் நிலைப்பாட்டில் நிலையாக உள்ளது பன்னீர் அணி. மேலும் பன்னீர் செல்வம் இன்று முதல் தமிழகம் முழுவதும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். இதனால் பழனிசாமி அணிக்கு நெருக்கடி உருவாகியுள்ளது.

இந்நிலையில் பழனிசாமிக்கு மேலும் ஒரு நெருக்கடி கொடுக்கும் விதமாக சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் பழனிசாமி தரப்பில் இருக்கும் 122 எம்.எல்.ஏக்களும் கொத்தடிமைகள் போலிருக்கிறோம் என்றும் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலையில் ஆட்சிக்கும், கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி அரசின் கவனக்குறைவே இதற்கு காரணம். எடப்பாடி அணியுடன் இணைவதற்கு பன்னீர்செல்வம் ஆர்வமாக உள்ளார். ஆனால், அவருடன் இருக்கும் பதவியில் இல்லாத சில முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள்தான் இரு அணியும் இணைவதற்கு தடையாக உள்ளனர். பன்னீர்செல்வம் அணியின் 2 கோரிக்கைகளையும் நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது. எனவே, 2 அணிகளும் விரைவில் ஒன்றுசேர்ந்து இரட்டை இலை சின்னத்தை மீட்டு எடுப்போம்.  சசிகலாவையும், தினகரனையும் எடப்பாடி அணியினர் அனைவரும் கும்பிட்டார்கள். சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்றோ கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றோ எம்.எல்.ஏ.க்களும் சொல்லவில்லை. அதேபோல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிடப்போவதாகவும் சட்டப்பேரவை உறுப்பினர்களிடமும் கேட்கவில்லை. 122 சட்டப்பேரவை உறுப்பினர்களில் நானும் ஒருவனாக அமர்ந்திருந்தேன். அப்போது எல்லாவற்றும் கையெழுத்து போட சொன்னார்கள், போட்டோம். இப்போது முதல்வர் எடப்பாடி அணி சசிகலாவையும், தினகரனையும் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்கிறார்கள். அவரவர்களுக்கு சாதகமாக ஒரு அணி அமைத்துக்கொண்டு செயல்படுகின்றனர். ஆனால், 122 சட்டப்பேரவை உறுப்பினர்களும் வேறு வழியில்லாமல் அவர்களுக்கு கொத்தடிமைகளாக இருக்கும் சூழ்நிலை தான் ஏற்பட்டுள்ளது  மத்திய அரசுடன், மாநில அரசு இணைந்து செயல்பட்டால்தான் வளர்ச்சி பணிகள் நிறைவேற்ற முடியும். அந்த வகையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துகொண்டால் நல்லதுதான் என்றார்.

ஏற்கனவே கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் அனைவரையும் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்திருக்கிறார்கள் என குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் கொத்தடிமைகளாக இருக்கிறோம் என்று கனகராஜ் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் புது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஏற்கனவே தினகரன் கைது, விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை ஆகிய விவகாரங்களுக்கு பின்னால் பாஜகதான் இருக்கிறது என்று கூறப்பட்டு வரும் நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து பாஜகவுடன் கூட்டணி வைத்தால் நல்லதுதான் என்று பேசியிருக்கிறார். ஆக இரு அணிகள் இணைந்தாலும் அதிமுக என்ற கட்சி பாஜகவின் கட்டுப்பாட்டில்தான் இயங்கப்போகிறது என்று வெளிப்படையாக தற்போது தெரிய ஆரம்பித்திருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*