உணவு துறை அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதிவு!

உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி காவல்துறையினரால்   வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் குமார் என்பவர் அமைச்சர் காமராஜ் தனது நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றித் தர  30 லட்சம்  ரூபாய் வாங்கி கொண்டு வீடு விவகாரத்தை முடித்து கொடுக்கவில்லை மேலும் காமராஜ் தன்னை மிரட்டுகிறார் என  தமிழக காவல்துறையிடம் புகாரளித்தார். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை 2015-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் முடித்து வைத்ததால் காமராஜ் மீது உச்ச நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  அப்போது அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அப்படி வழக்குப்பதிவு செய்யப்படவில்லையெனில் இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவளிக்கப்படும் எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்து வழக்கை மே 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பை  தொடர்ந்து அமைச்சர் காமராஜ் மீது  வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக காவல்துறையினர் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 3-ஆம் தேதி மீண்டும் இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் காமராஜ் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக நீதிபதிகள் மேலும் கூறும் போது, “தமிழக அரசு நீதிமன்றத்தை தவறாக வழி நடத்துகிறது என்று குற்றம் சாட்டினர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் காமராஜிடம் தமிழக காவல்துறையினர் உடனடியாக விசாரணை நடத்தி வரும் 8-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து மன்னார்குடி காவல்துறையினர் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*