விரைவில் சட்டமன்ற தேர்தல்:ஓ.பன்னீர் செல்வம்

உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னரே தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் என்று அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் தலைவர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

அதிமுகவின் இரு அணிகளும் இணையாது என்பது ஏறத்தாழ உறுதியான நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று காஞ்சிபுரத்திலிருந்து அவர் தனது பயணத்தை தொடங்கினார். காஞ்சிபுரம் மாவட்டம் கொட்டிவாக்கத்தில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியினரின் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்துக்கு  மைத்ரேயன் எம்,பி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தர்மயுத்தத்தின் முதல் கூட்டத்தினை தொடங்கியிருக்கிறோம். இந்த தர்மயுத்தத்திற்கு தமிழக மக்கள் ஆதரவு அளித்து கொண்டிருக்கிறார்கள். பேராதரவு வெட்டவெளிச்சமாக அனைத்து நிலைகளிலும் தெரிந்துகொண்டிருக்கிறது. எனினும் ஆட்சி நடத்தி வருபவர்கள் புரிந்தும், புரியாதவர்கள்போல கண்கள் திறந்திருந்தும் தூங்கியவர்களாக இருந்துகொண்டிருக்கிறார்கள். அதிமுக தொண்டர்களின் இயக்கம். ஆட்சி என்பது மக்களாட்சி. இதைத்தான் ஜெயலலிதா செயல்படுத்தி வந்தார். அந்த இயக்கத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி எத்தனையோ இன்னல்களையும், துன்பங்களையும் இழைத்து 104 பொய் வழக்குகளை போட்டார். எனினும் எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை எதற்காக தொடங்கினாரோ, அந்த கொள்கைக்கு குண்டுமணி அளவு குறைபாடு ஏற்படாமல் 18 லட்சமாக இருந்த தொண்டர்களை 1½ கோடி அளவுக்கு வளர்த்து, ராணுவ கட்டுப்பாட்டுடன் ‘மக்களால் நான், மக்களுக்காக நான்’ என ஆட்சி நடத்தினார் ஜெயலலிதா. கடந்த 5 ஆண்டுகாலமாக ஜெயலலிதா செய்த சாதனையால்தான், ஆண்ட கட்சி மீண்டும் ஆட்சி பொறுப்பு ஏற்றிருக்கிறது. ஜெயலலிதா நோய்வாய்பட்டு 75 நாள் சிகிச்சை பெற்றபோதும், மரணமடைந்துவிட்டார் என்பது தமிழகம் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களையும், அதிமுக தொண்டர்களையும் பாதித்துள்ளது. ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு விடிவுகாலம் பெற, அந்த மர்ம முடிச்சை அவிழ்க்கவேண்டும். அதற்காக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என தர்மயுத்தத்தை தொடங்கினோம். இதுதான் முதல் கோரிக்கை. இந்த இயக்கம் தொண்டர்களின் இயக்கமாக இருக்க வேண்டும். யாருடைய குடும்பத்தின் கையிலும் சிக்கக்கூடாது. இந்த இயக்கத்தை தொண்டர்கள் நடத்தவேண்டும். இந்த ஆட்சி மக்களாட்சியாக இருக்க வேண்டும். இப்போது ஆட்சி தடம் மாறியுள்ளது. அதனை நேர் வழியில் கொண்டுவருவதற்காகதான் இந்த தர்மயுத்தத்தின் முதல் பயணத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கியிருக்கிறோம். இங்கு தொடங்கியிருக்கும் எந்த நிகழ்ச்சியும் வெற்றிபெறும் என்பது வரலாறு. இன்று நடைபெறும் பினாமி ஆட்சியாளர்கள் அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்காக சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. இன்னும் சசிகலா பொதுச்செயலாளராகவும், டி.டி.வி.தினகரன் துணை பொதுச்செயலாளராகவும் இருக்கிறார்கள். மக்கள் ஏமாளிகள் அல்ல. நீங்கள் நடத்துவது நாடகம் என மக்கள் கருதுகிறார்கள். இந்த நாடகத்தில் இருந்து விடுதலை பெறவேண்டுமானால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். யாருடைய பிடியில் இருந்து ஆட்சி செய்துகொண்டிருக்கிறீர்களோ, அங்கிருந்து விடுபடவேண்டும். இதுதான் எங்கள் தர்மயுத்தத்தின் ஆதாரம். ஆனால் உங்களிடம் அணிகள் இணைப்புக்கான அறிகுறியே தெரியவில்லை. எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் ஆன்மாக்கள் நின்று இந்த இயக்கத்தை நிலைநிறுத்தும். அதற்கான காலம் கனிந்து வருகிறது. மக்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியைத்தான் மக்கள் நம்புகிறார்கள். இந்த கட்சி யாருடைய குடும்பத்துக்கும் சென்றுவிடாமல், தொண்டர்கள் யாருடைய வீட்டு வாசலுக்கும் சென்று நிற்கவேண்டிய சூழ்நிலை வரக்கூடாது. சுயநலத்தோடு இருக்கிறவர்கள் யாருக்கும் இந்த கட்சியில் இடம் இல்லை.

தற்போது இருக்கும் சூழ்நிலையில் எந்த தேர்தல் முந்தி வருகிறது, எந்த தேர்தல் பிந்தி வருகிறது என்ற நிலை இருக்கிறது. முதலில் உள்ளாட்சி தேர்தல் தான் வரும் என்று நினைத்தோம். ஆனால் சட்டமன்ற தேர்தல் தான் வர இருக்கிறது. இங்கே இருக்கும் தொண்டர்கள் அனைவரும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம் என்று பேசினார்.

உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னர் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்தான் வரும் என பன்னீர் செல்வம் இவ்வளவு உறுதியாக கூறியிருப்பதன் மூலம் பன்னீர் அணியின் பின்னால் பாஜகதான் இருக்கிறது என்பது மீண்டும் மீண்டும் உறுதியாகி கொண்டேயிருக்கிறது. எனவே பழனிசாமி ஆட்சியை கூடிய விரைவில் மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கம் கலைத்து தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்தி பன்னீர் செல்வம் மூலம் தமிழகத்தில் தான் நினைத்த காரியத்தை நடத்தி கொள்ளும் என்று கூறப்படுகிறது. மேலும் சுற்றுப்பயணத்தின் முதல் நாளே சட்டமன்ற தேர்தல்தான் வரும் என கூறி பழனிசாமி அணியுடன் இணைப்பு இனி இல்லை என சூசகமாக பன்னீர் செல்வம் எதிர் தரப்புக்கு அதிர்ச்சியளித்திருக்கிறார். பன்னீர் இந்த சுற்றுப்பயணம் முழுவதும் மேலும் பல அதிர்ச்சிகளை அளிக்கவிருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*