வைரவிழாவில் சோனியா, நிதிஷ் பங்கேற்பு : மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழா மற்றும் வைரவிழாவில் சோனியா காந்தியும், நிதிஷ் குமாரும் பங்கேற்பார்கள் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக அரசியலில் மிகப்பெரும்  சக்தியாக விளங்கி வரும் திமுக தலைவர் கருணாநிதி வருகின்ற ஜூன் 3-ஆம் தேதி தனது 94-வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். மேலும் அவர் சட்டசபையில் காலடி எடுத்து வைத்து இந்த ஆண்டுடன் 60 ஆண்டுகள் ஆவதால் வைர விழாவையும் அதனுடன் சேர்த்து பிரம்மாண்டமாக கொண்டாட திமுக கட்சி  முடிவு செய்துள்ளது. சென்னையில் நடைபெறவிருக்கும் இந்த வைரவிழா நிகழ்ச்சியில் ஏழு மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். பஞ்சாப், மேற்கு வங்கம், பீஹார், கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில முதல்வர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பிற மாநில முதல்வர்களை சந்தித்து அழைப்பிதழ் கொடுக்கும் பணியினை திமுகவினர் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில்.  ஆர்.கே.நகரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக தான் வெற்றி பெறும் என உளவுத்துறை மூலம் தெரிந்ததால் ஏதேதோ காரணங்கள் கூறி இடைத்தேர்தலை நிறுத்திவிட்டார்கள். மக்கள் ஒரே ஒரு வாக்களித்து மூன்று முதல்வர்களை பார்த்துவிட்டார்கள். தமிழகத்தில் இனி இடைத்தேர்தல் அல்ல, பொதுத்தேர்தல் தான் வரப்போகிறது , ஜூன் 3-ஆம் தேதி கருணாநிதி அரசியல் வைரவிழா நடைபெறவுள்ளது.  இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்று தெரிவித்தார். முன்னதாக திமுக எம்.பி கனிமொழி நேற்று லாலு பிரசாத் யாதவை நேரில் சந்தித்து விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கினார். இவ்விழாவினை திமுக தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*