கூடுதலாக 305 இடங்கள் : அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு!

எம்.டி, எம்.எஸ், படிப்புகளுக்கு கூடுதலாக 305 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கும் சேர்த்து கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு எம்.டி. மற்றும் எம்.எஸ் போன்ற மேல் படிப்புகளில் 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த இட ஒதுக்கீட்டை இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்வதாக அறிவித்தது. இதனை எதிர்த்து மருத்துவர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று இதில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு கிடையாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நாளை தொடங்கவிருக்கிறது. இதற்கான கலந்தாய்வு அட்டவணையை மருத்துவ கல்வி இயக்கம் வெளியிட்டுள்ளது. முதல் நாளான நாளை சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை மறுநாள் அரசு கல்லூரிகளிலுள்ள இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு மே 9 முதல் 11 ஆம் தேதி வரை நடக்கிறது. மே 11 ஆம் தேதி எம்.டி.எஸ் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. எம்.டி, எம்.எஸ், படிப்புகளுக்கு கூடுதலாக 305 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கும் சேர்த்து கலந்தாய்வு நடத்தப்படும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*