பேச்சுவார்த்தைக்கு பின் சசிகலாவை நீக்க முடிவு செய்யலாம் : எம்.எல்.ஏ குணசேகரன்

ஓ.பன்னீர் செல்வம் அணி பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறது என்றும் பேச்சுவார்த்தைக்கு பின் சசிகலாவை நீக்க முடிவு செய்யலாம் என்றும் திருப்பூர் எம்.எல்.ஏ குணசேகரன் கூறியுள்ளார்.

அதிமுகவின் இரு அணிகளும் இணையாது என்பது ஏறத்தாழ உறுதியாகியிருக்கிறது. இதனால் பன்னீர் செல்வம் தனது பலத்தை நிரூபிக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். பழனிசாமி தரப்பு பன்னீர் அணியினை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்து கொண்டிருக்கிறது. ஆனால் சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கினால்தான் பேச்சுவார்த்தை என்பதில் உறுதியாக இருக்கின்றனர் பன்னீர் செல்வம் அணியினர். பழனிசாமி தரப்பும் ஏனோ சசிகலா குடும்பத்தை அதிகாரப்பூர்வமாக நீக்குவதற்கு தயக்கம் காட்டி வருகிறது. இதனால் இணைப்பு நடவடிக்கையும் இழுபறியிலேயே நீடித்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் திருப்பூர் கே.ஜி.எஸ். பள்ளியில் கட்டப்பட்ட புதிய கலையரங்கு திறப்பு விழா இன்று நடந்தது. இதை எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. குணசேகரன் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

விரைவில் தேர்தல் வரும். இதில் ஜெயித்து விடலாம் என்று ஓ.பி.எஸ். அணியினர் பகல் கனவு காண்கிறார்கள். அது நடக்காது. அவர்கள் இரவில் ஓய் வெடுக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு தனி செல்வாக்கு யாருக்கும் கிடையாது. அ.தி.மு.க. என்ற கட்சிக்கு மட்டுமே செல்வாக்கு உள்ளது. இதை பன்னீர் செல்வம் அணியினர் புரிந்து கொள்ள வேண்டும். பொதுச்செயலாளர் சசிகலாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். முதலில் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இணைய வேண்டும். அதன்பிறகு இரு அணிகளும் இணைந்து பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை நீக்க முடிவு செய்யலாம். ஆனால் அதற்கு முன்பு நீக்க முடியாது. முதலில் பன்னீர் அணியினர் பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் தன்னிச்சையாக முடிவு எடுக்க வேண்டும். உடன் இருப்பவர்களின் பேச்சை கேட்க கூடாது. வருகிற உள்ளாட்சி தேர்தலில் எடப்பாடி அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. என்று அவர் கூறினார்.

திருப்பூர் தொகுதி எம்.எல்.ஏ குணசேகரன் அரசு அதிகாரிகள் தனது தொகுதி பணிகளில் மெத்தனம் காட்டுவதாக உண்ணாவிரதம் இருந்தவர்.  பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு உள்ளாட்சி தேர்தலில் எடப்பாடி அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். இதன் மூலம் இரு அணிகளும்  இணைவதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என்பதை குணசேகரன் சூசகமாக சொல்கிறாரோ என்ற சந்தேகம் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. மேலும் சசிகலாவின் நீக்கம் குறித்து பழனிசாமி தரப்பினர் இதுவரை வாய் திறக்காத நிலையில் பகிரங்கமாக பேச்சுவார்த்தைக்கு பின் சசிகலாவை நீக்க முடிவு செய்யலாம் என்று குணசேகரன் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*