தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி!

திமுக தலைவர் கருணாநிதி அவரது பிறந்த நாளான ஜீன் 3-ஆம் தேதி தொண்டர்களை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலில் பெரும் தலைவராக இருப்பவர் திமுக தலைவர் மு.கருணாநிதி. அவர் வழக்கமாக தனது பிறந்தநாளின் போது தொண்டர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருப்பார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்க தமிழகம் முழுவதுமிலிருந்தும் தொண்டர்கள் வருகை தருவார்கள். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று கருணாநிதிக்கு சால்வை, புத்தகங்கள் என பல்வேறு பரிசுகள் வழங்கி வாழ்த்து சொல்வார்கள். பிற்பகல் வரை அமர்ந்திருந்து அனைத்து தொண்டர்களின் வாழ்த்துக்களையும் பொறுமையாக அவர் ஏற்றுக் கொள்வார். அவர் தற்போது வயது முதிர்வு காரணமாக உடல்நலமில்லாமல் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி கடந்த சில மாதங்களாக ஓய்வு எடுத்து வருகிறார். எனவே இந்த ஆண்டு பிறந்தநாளில் தொண்டர்களை சந்திப்பாரா? என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்தது. மருத்துவர்கள் அனுமதித்தால் நிச்சயம் கருணாநிதி  தொண்டர்களை சந்திப்பார் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில் தனது 94-வது பிறந்தநாளை வரும் ஜீன் 3-ஆம் தேதி கொண்டாடவருக்கிறார் கருணாநிதி.  அப்போது அவர் திமுக தொண்டர்களை சந்திப்பார் எனவும் இதற்கான விழா ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கருணாநிதி சட்டமன்ற உறுப்பினராகி 60 ஆண்டுகள் சட்டசபையில் பணியாற்றி இருக்கிறார். எனவே அவரது பிறந்தநாள் மற்றும்  வைரவிழா என இருபெரும் விழாவாக கொண்டாட திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து 60 வருடங்கள் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பெருமை கருணாநிதியிடம் மட்டும்தான் இருக்கிறதென்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவுக்கு இந்தியா முழுவதுமிலிருந்து பல்வேறு அரசியல் தலைவர்களையும் அழைக்க முடிவு செய்துள்ளார்கள். திமுக எம்.பி கனிமொழி  நேரில் சென்று தலைவர்களை சந்தித்து இவ்விழாவிற்கான அழைப்பிதழை கொடுத்து வருகிறார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோர் விழாவுக்கு வர ஒத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, லாலுபிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி உட்பட பல தலைவர்களை சந்திக்கவுள்ளனர். எனவே பல தலைவர்கள் இவ்விழாவிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருணாநிதியை மீண்டும் மேடையில் காண்பதற்கு திமுக தொண்டர்கள் அதீத ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும்  கருணாநிதி மீண்டும் வருவதால் தமிழக அரசியல் இனி களை கட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*