இரு அணிகளும் விரைவில் இணையும் : தம்பித்துரை

அதிமுகவின் இரு அணிகளும் எப்போது வேண்டுமானாலும் இணைவது சாத்தியமான ஒன்றுதான் என மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்துள்ளார்.

அதிமுக கட்சியின் இரு அணிகளும் இணையுமா? இணையாதா? என்ற கேள்வி தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இரு அணியினரும் மாற்றி மாற்றி தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். அதிமுகவின் இரு அணிகளும் இப்படி தொடர்ந்து இணைப்பு நடவடிக்கையை இழுபறியில் வைக்காமல் விரைவில் ஒரு முடிவை அறிவிக்க வேண்டுமென்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது.

இந்நிலையில் இரு அணிகளின் இணைப்பு நடவடிக்கை குறித்து பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக.வின் இரு அணிகளுக்கிடையே சுமூகமாக பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இரு அணிகளும் எப்போது வேண்டுமானாலும் இணைவது சாத்தியமான ஒன்று தான். எந்த தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்கும் வலிமையுடன் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை கட்சித் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதன்படி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செயல்படுவார்கள். நீட் தேர்வை ஆரம்பத்தில் இருந்தே அ.தி.மு.க. எதிர்த்து வருகிறது. நீட் தேர்வு வருவதற்கு அ.தி.மு.க. காரணம் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, அந்த கூட்டணி ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தது. அப்போதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. எனவே நீட் தேர்வு வந்ததற்கு காங்கிரஸ் – தி.மு.க.தான் காரணமாகும். என்று கூறினார்.

இரு அணிகளும் எப்போது வேண்டுமானாலும் இணைவது சாத்தியமான ஒன்றுதான் என தம்பிதுரை கூறினாலும் சசிகலா குடும்பம் எப்போது அதிகாரப்பூர்வமாக நீக்கப்படுகிறதோ அப்போதுதான் பேச்சுவார்த்தை என்பதில் பன்னீர் தரப்பு உறுதியாக இருக்கிறது. உண்மையில் இரு அணியினரும் இணைந்து இரட்டை இலையை மீட்க வேண்டுமென்றால் இப்படி தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதைவிட அதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென்பதுதான் பரவலான கருத்தாக இருந்து வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*