நீதிபதிக்கு 6 மாதம் சிறை தண்டனை!

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியான கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் தமிழகத்தை சேர்ந்த சி.எஸ்.கர்ணன். இவர் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறித்து ஊழல் குற்றசாட்டு கூறியதுடன் தலைமை நீதிபதியிடமும் புகார் தெரிவித்து கடிதம் எழுதினார். இதனால் அவர் மீது உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதன் விசாரணைக்கு அவர் ஆஜராகாததால், அவர் நீதிபதி பணியை செய்யக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 8–ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், கடந்த 4–ஆம் தேதி அவருக்கு மனநல பரிசோதனை நடத்த உத்தரவிட்டது. ஆனால், நீதிபதி கர்ணன் அதற்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டார். மேலும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குத்தான் மனநல பரிசோதனை செய்ய வேண்டும் என கூறினார்.

அதனைத் தொடர்ந்து நீதிபதி கர்ணன் நேற்று ஒரு உத்தரவை பிறப்பித்தார். அந்த உத்தரவில் தனக்கு எதிரான அவமதிப்பு வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், பி.சி.கோஸ், குரியன் ஜோசப் ஆகியோருக்கும், தன்னை நீதிபதி பணியாற்ற தடை விதித்த நீதிபதி பானுமதிக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டார். அவர் வீட்டில் அமைக்கப்பட்ட தற்காலிக நீதிமன்றத்தில் இந்த உத்தரவினை பிறப்பித்தார்.  மேலும், ஒரு வாரத்துக்குள் 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமென்றும், அபராதம் செலுத்தாவிட்டால், கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

நீதிபதி கர்ணனின் இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  நீதிமன்ற அவமதிப்பில் கர்ணன் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறி  அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.  மேலும், நீதிபதி என்பதால் சிறைதண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கே சிறை தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*