மதவாத கட்சிகளுக்கு அழைப்பு இல்லை : ஆர்.எஸ்.பாரதி

பாஜக ஒரு மதவாத கட்சி என்பதால் திமுக தலைவர் கருணாநிதிக்கு நடக்கவிருக்கும் வைரவிழாவுக்கு அக்கட்சியை அழைக்கவில்லை என்று திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி இந்தியாவில் மூத்த அரசியல்வாதி. அவர் தனது உடல்நிலை காரணமாக தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார். அவர் வருகிற ஜீன் 3-ஆம் தேதி தனது 94-வது பிறந்த நாளை கொண்டாடவிருக்கிறார். மேலும் அவர் சட்டமன்றத்துக்குள் காலடி எடுத்துவைத்து இந்த ஆண்டுடன் 60 ஆண்டுகள் ஆவதால் பிறந்த நாள் விழாவோடு வைரவிழாவையும் கொண்டாடுவதற்கு திமுகவினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் திமுகவினரால் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. இவ்விழாவில் கலந்து கொள்ள 7 மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்க திமுக திட்டமிட்டிருக்கிறது. திமுக எம்.பி கனிமொழி தலைவர்களை நேரில் சந்தித்து விழாவுக்கான அழைப்பிதழை கொடுத்து வருகிறார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மேற்கு வங்காள முதல்வர்  மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மற்றும் லல்லுபிரசாத், பரூக் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அவர்களும் விழாவுக்கு வருவதாக கூறியுள்ளனர். இதேபோல் டிகேஎஸ் இளங்கோவன் ஒரிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்து விழாவுக்கான அழைப்பிதழை கொடுத்தார். வைரவிழாவுக்கு பாஜக மற்றும் அதிமுகவுக்கு மட்டும் திமுக சார்பிலிருந்து அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை. விழாவுக்கு பாஜகவை அழைக்காதது மு.க.ஸ்டாலினின் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுவதாக தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருந்தார்.

இந்நிலையில், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமியை சந்தித்து விழாவுக்கான அழைப்பிதழை கொடுத்தார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைர விழாவில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சி தலைவர்கள், மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. பாரதிய ஜனதா கட்சி மதவாத கட்சி என்பதால் அதற்கு அழைப்பு இல்லை. அ.தி.மு.க.வும் அதோடு இணைந்தவர்கள்தான். அதனால் அ.தி.மு.க.வுக்கும் அழைப்பு இல்லை. மற்ற அனைத்து கட்சிகளையும் அழைத்து வருகிறோம். தமிழ்நாட்டில் உள்ள தலைவர்களுக்கு இனிமேல் தான் அழைப்பு கொடுக்க இருக்கிறோம். என்று அவர் கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*