அமைச்சர் சரோஜா மீது பெண் அதிகாரி காவல்துறை ஆணையரிடம் புகார்!

சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தன்னை லஞ்சம் கேட்டு மிரட்டியதாக குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி மீனாட்சி காவல்துறை ஆணையர் கரண் சின்ஹாவிடம் புகாரளித்தார்.

தர்மபுரியில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவர் மீனாட்சி. இவருக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, தன்னிடம் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியாக பதவியில் நீடிக்க வேண்டும் என்று விரும்பினால் 30 லட்சம் ரூபாய் தரவேண்டும் என்று  மிரட்டல் விடுத்தார் என மீனாட்சி கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. கடந்த 7-ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள அமைச்சரின் வீட்டில் வைத்து தான் மிரட்டப்பட்ட தாகவும், அங்கிருந்து உயிர் பிழைப்பதற்காக தப்பி வந்தேன் என்றும் அவர் குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.

இந்நிலையில் கமிஷ்னர் அலுவலகத்தில் அமைச்சர் மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் மீனாட்சி. அந்த புகார் மனுவில் “தனக்கு மிரட்டல் விடுத்து ரூ.30 லட்சம் கேட்ட அமைச்சர் சரோஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.  அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் சரோஜா என்னை வீட்டுக்கு அழைத்தார். அப்போது லஞ்சம் கொடுக்காமல் வேலை வாங்கிவிட்டாய் என கூறினார்.  சரோஜா என்னிடம் ரூ.30 லட்சம் கேட்டார். பணம் தராவிட்டால் பணி நிரந்தரம் செய்ய மாட்டோம் எனவும் சரோஜா கூறினார். சரோஜாவுடன் அவரது கணவரும் எனக்கு மிரட்டல் விடுத்தார். பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள். எந்த சூழ்நிலையிலும் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன். சரோஜா எனது தந்தையிடம் 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதற்கான வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் உள்ளன. தனக்கு பணி பாதுகாப்பு வேண்டும். உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று மீனாட்சி கூறியுள்ளார். மீனாட்சி அமைச்சர் மீது புகாரளித்ததையடுத்து இந்த புகார் மனுவை லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி விசாரிக்க காவல்துறை ஆணையர் கரண்சின்ஹா பரிந்துரை செய்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*