இன்று இலங்கை செல்கிறார் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக 2015-ஆம் ஆண்டுக்குப் பின்னர் இன்று இலங்கை செல்கிறார்.

கௌதம புத்தரின் பிறந்தநாளான ‘வேசக்’ தினத்தை முன்னிட்டு, அத்திருவிழாவின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார் பிரதமர் மோடி. மே மாதம் 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை புத்த மதம் தொடர்பான ஐ.நா சபையின் சர்வதேச மாநாடும் இலங்கையில் நடைபெறவிருக்கிறது. அதனை தொடங்கி வைக்க மோடி  இந்த இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார். இலங்கையில் நடைபெறவிருக்கும் மாநாட்டில் 100 நாடுகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். இந்தியப் பிரதமர் இலங்கையின் ‘வேசக்’ தினத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவிருப்பதை இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் சஞ்சய் பாண்டா உறுதிசெய்துள்ளார்.

மாநாட்டில் பங்கேற்ற பின்னர், தமிழர்கள் அதிகமாக வாழும் மத்திய மாகாணத்துக்கு செல்லும் மோடி, இந்தியாவின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட புதிய மருத்துவமனையை திறந்து வைக்கிறார். தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றும் வகையில் மாபெரும் பொதுகூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோரும் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்டியில் உள்ள ஆலயத்தில் வழிபாடு செய்யும் மோடி, வெள்ளிக்கிழமை இரவு டெல்லி திரும்புகிறார். அவரின் வருகையையொட்டி தலைநகர் கொழும்பு, கண்டி மற்றும் மத்திய மாகாணத்துக்குட்பட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. மோடி இந்த இலங்கை பயணத்தில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவாரா இல்லை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவாரா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*