பயிர்க்கடனை வற்புறுத்தி வாங்க கூடாது : கூட்டுறவு வங்கிகளுக்கு சுற்றறிக்கை

விவசாயிகளிடம் பயிர் கடன்களை வற்புறுத்தி வாங்கக்கூடாது என கூட்டுறவு வங்கிகளுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் ஞான சேகரன் அறிக்கை அனுப்பியுள்ளார்.

விவசாயக் கடன்களை ரத்து செய்யவேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் 40 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தினர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போன்றோர் அளித்த உறுதிமொழியை அடுத்து, விவசாயிகள் சென்னை திரும்பினர். ஆனால் அதன்பிறகு விவசாயிகளை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து விவசாயிகள் சார்பில் வருகிற 21-ஆம் தேதி டெல்லியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமியை நேற்று அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சந்தித்துப் பேசினர். அப்போது, விவசாயக் கடன்களைத் தள்ளுபடிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். நிதிச் சுமையைக் காரணம் காட்டி, இந்தக் கோரிக்கையை முதல்வர் நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே சங்கப் பதிவாளர் ஞானசேகரன், கூட்டுறவு வங்கிகளுக்கு இன்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், கூட்டுறவு வங்கிகளிலுள்ள விவசாயக் கடன்களை வற்புறுத்தி திரும்பப் பெறக்கூடாது. மறு உத்தரவு வரும் வரை கடனைத் திருப்பிக் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டாம். குறுகிய காலப் பயிர்க் கடனை மத்திய காலக் கடனாக மாற்ற வேண்டும். தகுதியுள்ள விவசாயிகளுக்கு, விவசாயக் கடன்களை விரைந்து வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*