பாஜகவை எப்படி அழைப்போம் : மு.க.ஸ்டாலின்

திராவிட இயக்கங்களை அழிப்போம் என்று கூறிவரும் பாஜக தலைவர்களை திராவிட முன்னேற்ற கழக தலைவர் கருணாநிதியின் வைரவிழாவுக்கு எப்படி அழைப்போம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி வருகிற ஜீன் 3-ஆம் தேதி தனது 94-வது பிறந்த நாளை கொண்டாடவிருக்கிறார். மேலும் அவர் சட்டமன்றத்துக்குள் நுழைந்து இந்த ஆண்டுடன் 60 ஆண்டுகள் ஆகின்றன. தொடர்ந்து 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருவது திமுக தலைவர் கருணாநிதி மட்டுமே. அவரது சட்டமன்ற பணி வைரவிழாவை அவரது பிறந்த நாளுடன் கொண்டாடுவதற்கு திமுகவினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் திமுகவினரால் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. இவ்விழாவில் கலந்து கொள்ள 7 மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்க திமுக திட்டமிட்டிருக்கிறது. திமுக எம்.பி கனிமொழி தலைவர்களை நேரில் சந்தித்து விழாவுக்கான அழைப்பிதழை கொடுத்து வருகிறார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மேற்கு வங்காள முதல்வர்  மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மற்றும் லல்லுபிரசாத், பரூக் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அவர்களும் விழாவுக்கு வருவதாக கூறியுள்ளனர். வைரவிழாவுக்கு பாஜக மற்றும் அதிமுக கட்சிகளை மட்டும் திமுக அழைக்கவில்லை. விழாவுக்கு பாஜகவை அழைக்காதது மு.க.ஸ்டாலினின் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுவதாக தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருந்தார்.

இந்நிலையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூரில் குளம் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழாவுக்கு ஏன் எங்களை அழைக்கவில்லை என்று பாஜக தலைவர்கள் கேட்க அவர்களுக்கு அருகதை இல்லை. அவர்களை நான் மட்டம்தட்டி பேசவில்லை. திராவிட இயக்கங்களை அழிப்பதே எங்கள் முதல் வேலை என்று அவர்கள் கூறிவருகிறார்கள். திராவிட இயக்கங்களை அழிப்பதையே முதல் வேலையாக கொண்டிருப்பவர்களை நாங்கள் வைரவிழாவுக்கு அழைத்து மேடையில் அமரவைத்து அவர்களுக்கு தர்ம சங்கடமான சூழ்நிலையினை உருவாக்கி தர விரும்பவில்லை. அமைச்சர்களின் ஊழல் குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் பலமுறை முறையிட்டும் பலனில்லை. மக்கள் பிரச்னைகளுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுப்பதைவிட ஊழல், லஞ்சம் ஆகியவைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறது என்று பேசினார். கடந்த போகி பண்டிகையில் திராவிட இயக்கங்களை தமிழக மக்கள் தீயிலிட்டு கொளுத்த வேண்டுமென்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*