“அதன் பெயர் சௌந்தர்யம்” -கவிதா சொர்ணவள்ளி-5

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம் 

காதலையும் சுயமரியாதையையும் பற்றித்தான் எழுத வேண்டும் என்று நினைத்தேன். இந்த வாரமும் அது எனக்கு கைகூடி வரமாட்டேன் என்கிறது .
திருமணத்திற்குப் பிறகான மற்றொரு காதல் @ கள்ளக்காதல் பற்றிய கடந்தவார கட்டுரைக்கு வந்த மறுமொழிகள் எதிர்பாராதது. # தட் கண்ணகி அவதாரத்துடன் எனை நோக்கி யாராவது பரல்களை எறிவார்களோ என்று பீதியுடன் (அப்படியும் சொல்லலாம் ) காத்திருந்தேன்.

எதிர்பார்த்ததற்கு மாறாக பெண்களிடம் இருந்துதான் ஆச்சர்யப்படும்படியான எதிர்வினைகள். பெரும்பாலானவை சற்று ஜெர்க் விடும்படியானவையும் கூட. ஆண்களும் கூட *&^%, &^%$, Bitch please என்றெல்லாம் எள்ளல் செய்யாமல் விமர்சித்திருந்தார்கள் (அவ்வளவு மரியாதையா…! 😉 )

பெரியார் திடல் புத்தக விழாவிற்குச் சென்றிருந்தபோது கட்டுரை நன்றாக இருந்தது என்று மனுஷ் சொன்னார். சுஜாதா விருதளிப்பு விழாவின்போது என்னருகில் வந்தமர்ந்த பெண் “நீங்க கவிதா சொர்ணவல்லிதான (வல்லிதான். வள்ளி இல்லை) என்று புன்னகைத்தார். எழுத்தை நேசிக்கும் (என்னுடையதை மட்டும் தவிர்த்து) என்னுடைய தம்பி ஆச்சர்யமாக இந்தக்கட்டுரை பற்றி ஒரு மணி நேரம் பேசினான். ஊரிலுள்ளவர்கள் யாராவது படித்துவிட்டு அப்பாவிடம் சொல்லிவிடுவார்களோ என்று மட்டும் பயமிருந்தது அப்படியாக எதுவும் நடக்கவில்லை. Just kidding. இருந்தாலும் கூச்சமாக இருந்தது.

“நல்ல கட்டுரை. ஆனால் வீட்டில் திட்டு விழும் என்பதால் இதற்கு மேல் எதுவும் சொல்ல மாட்டேன்” என்று ஸ்மைலிகள் இட்டபடியே ஷேர் செய்த ஆண்களை விட, “This” என்று எழுதி, கட்டுரையை பகிர்ந்த பெண்கள் (நிஜ ஐடிகள்தான் ! )நம்பமுடியாத இனிய அதிர்ச்சி.

தடைகளைக் கடப்பதில் பெண்களுக்கு நிகர் ? என்னுடைய இன்பாக்ஸில், கட்டுரையை ஷேர் செய்த நண்பர்களின் இன்பாக்ஸில் வந்திருந்த ஆதங்கங்களில், வேலிகளைக் கடந்த வெளிகளில் நிற்கும் பெண்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. உண்மையைச் சொல்வதானால், என்னால்தான் அவர்களை கைக்கொள்ளமுடியவில்லை.

நான் எழுதியது காதலைப் பற்றியது மட்டுமே. காதல் இல்லாத வனத்தில் ஆயிரம் வருடமானாலும் தனித்தே இருக்க முடியும் என்பதும், காதல் வந்துவிட்டால் அதற்கு எல்லை எதுவும் இல்லையென்பதும்தான் சொல்ல வந்தது.. ஆனால், கடந்த வாரத்தில் நான் கடக்க நேரிட்ட பெண்கள் அப்படியானவர்களாக இல்லை. மிக நேராக Shades of Grey-வை மட்டுமே அவர்கள் பேசியதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் திணறினேன்.
பெண்களின் உலகம் பிறர் கற்பனை செய்தது, செய்வது போல் இல்லை. வண்ணங்களைப் பூசி, பூக்களை வரித்து, சிறகுகளுடன் என்று வர்ணனைகளுக்குள் இல்லை. மிக மிக wild ஆக இருக்கிறது. தேவைகளின் பொருட்டுத் தீர்மானிக்கிற Wild ஆக இருக்கிறது. பாசிகள் படர்ந்து காளான் முளைவிட்டிருக்கும் ஆயிரம் வருட மரத்தின் பிசிறுகளைப் போல அத்தனை ராவாக இருக்கிறது. அத்தனை உண்மையாக இருக்கிறது. உண்மையின் வெம்மையை எதிர்கொள்ளுவதில்தான் நம் (நம்தான் ) ஆண்களின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது என்று நம்புகிறேன்.

இது பற்றி Max-டம் பேசிக்கொண்டிருந்தேன். இல்லையில்லை புலம்பிக்கொண்டிருந்தேன்.. காதலில்லாம, வெறும் தேவையின் பொருட்டு மட்டுமே, எப்படி ஒருத்தனோட ஒரு இரவை அல்லது பல இரவுகளைக் கடத்த முடியும் என்று ? வெகு நேர புலம்பலுக்குப் பின் “நீ ஏன் எல்லாத்துக்கும் காதல் அப்படிங்கிற ஒரு வண்ணத்தைப் பூச முயற்சி பண்ணுற ? எல்லா உணர்வுகளுக்கும் காதல் அப்படிங்கிற கிரீடம் சூட்ட வேண்டிய அவசியமே இல்ல. காபி ஷாப்ல உக்காந்திருக்கிற ரெண்டு பேர்க்கு ஈர்ப்பு ஏற்படாதா ? இல்ல பரஸ்பர சம்மதத்தின் பேர்ல One Night stand நடக்காதா? அதுல என்ன பிரச்சனை உனக்கு… இதுக்கு ஏன் காதல் தேவை… அவ்வளவுதான். நீ எதுக்கு அதைப் பத்தி ஒபினியேட்டட்டா இருக்க என்றபோது எனக்கு குழப்பமாகத்தான் இருந்தது.

One Night stand பற்றியெல்லாம் இல்லை. ஆனால் அதற்கு கூட ஒரு சிறு ப்ரேமையாவது தேவையில்லையா? அதெல்லாம் பார்த்த நொடியில் எப்படி ஏற்படும் என்று யோசித்துக்கொண்டேயிருந்தேன்.
அப்படி ஏற்படும்தான். அத்தகைய ஒரு சந்தர்ப்பத்துக்காக நாம் காத்திருந்தோம் என்கிற கசப்பான எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் தைரியம் இருந்தால் நாம் மேலும் இதுபற்றி பேசலாம். மிகவும் பாதுகாப்பான, துரோகமிழைக்காத, எந்த சூழ்நிலையிலும் காட்டிகொடுக்காத, அதை சொல்லிக்காட்டி அவமானப்படுத்தாத ஒரு இணையை சந்திக்க வாய்ப்பு கிடைககும் தருணத்தில் நாம் நமது கூண்டை விட்டு வெளியில் வருகிறோம். அதில் திளைக்க முயல்கிறோம். ஆனால் அவ்வளவு எளிதாக கையாண்டுவிடக்கூடிய ஒன்றா என்றால் இல்லைதான். இந்த மீறலை நியாயப்படுத்த நிறைய காரணங்களை உற்பத்தி செய்யத்தொடங்குகிறோம்.

ஆனால், துணை சரியில்லை என்கிற ஒற்றைக்காரணம் மட்டுமே மற்றொருவரின் மீதான பிரியத்துக்கு காரணம் என்கிற வாதத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இப்போதும். இன்று நமக்குக் கிடைத்திருக்கிற எக்ஸ்போஷர் அப்படி. நம்முடைய அலைவரிசைக்கு ஒத்துப்போகும் ஒருவரை மட்டுமல்ல, நம்முடைய ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டிக்கு ஈடுகொடுக்கும் ஒருவர் மீதும்… எங்கோ ஒளித்துவைத்திருக்கும் ஈகோவுக்கு தீனி போடும் ஒருவர் மீதும்… என்று காதல் தன்னைக் கண்டெடுத்துக்கொண்டே இருக்கும்தான்.
தேவை ஒன்று மட்டுமே பூரணத்துவம் கொண்டது. அதன் பொருட்டே தேடல்களும் தீர்வுகளும் என்பதைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் தேவைகள் எல்லாம் தீர்ந்த ஒரு நாளில் நாம் நாமாக மிஞ்சுவதற்கு காதல் மட்டுமே கை கொடுக்கும் என்பதை என்னளவில் தீர்க்கமாக நம்புகிறேன்.

இப்படியாக இந்த வார கட்டுரை முடிவடையும் நேரத்தில்தான் நிவேதா என்கிற 47 வயதான பெண்ணின் காதலும், கொலையும் நிகழ்ந்தேறியுள்ளது. இரண்டு பேரைக் காதலித்ததால் நடத்தை கெட்டவராக ஆகிவிட்ட நிவேதாவின் உடலை வாங்கிக்கொள்ள அவரது வயது வந்த குழந்தைகள் மறுத்துவிட்டதாகவும், பின்பு போலீசின் கட்டாயம் காரணமாக உடலை வாங்கி யாருமற்றவராகச் சென்னையிலேயே அவரைத் தகனம் செய்ததாகவும் பத்திரிக்கைகள் கட்டம் கட்டி எழுதுகின்றன.

திருமணத்திற்குப்பின் வரும் காதலை கொச்சைப்படுத்தி திருப்திப்பட்டுகொள்பவர்கள் ‘கள்ளக்காதல்ல இருந்தா இப்படிதான் சாவு வரும் என்று…’ புதிய உற்சாகத்துடன் ஆங்காங்கே அறிவுரை ஆற்றுகிறார்கள்..
விவாகரத்தான நிவேதாவை ஆறு வருடங்களாகக் காதலித்த இளையராஜா என்பவருக்கு ஒரு வருடம் முன்னால் வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்திருப்பதாகப் படிக்கும்போது ஆச்சர்யமே மிஞ்சுகிறது. ஒரு துணை தேவையிருந்தபோது நிவேதாவையே திருமணம் செய்ய இளையராஜாவை தடுத்தது ஏது ? வயதா ? நிவேதாவின் வயது வந்த பிள்ளைகளா ? சமூகமா ? அப்பா அம்மாவா ?
“காதலிப்பதற்கோ, கலவி கொள்வதற்கோ….dash…..படுப்பதற்கோ இந்தச் சமூகமோ, வயதோ, பிள்ளைகளோ, அப்பா அம்மாவோ தடையாக இருக்கவில்லை இளையராஜாவுக்கு. கமிட்மென்ட் என்று வரும்போது இவையெல்லாம் பூதாகரமாக இருந்திருக்க வேண்டும். இது எல்லாம் assumptions மட்டுமே. ஆனால் இப்படி இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.

திருமணத்திற்குப் பின்னும் நிவேதாவைக் கட்டுப்படுத்த என்ன அதிகாரம் இளையராஜாவுக்கு இருந்தது என்று தெரியவில்லை. அதற்குப் பெயர் காதல் இல்லை. எச்சைத்தனம். தன் கஸ்டடியில் இருக்கும் பெண் வேறு எங்கும் சென்றுவிடக் கூடாது என்கிற எச்சைத்தனம் மட்டுமே. அந்த கஸ்டடியை மீறி மற்றொரு காதலுக்குத் தயாராகும்போது அதை இளையராஜாவால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை இல்லையா? பெண்ணை தன்னுடைய பொருளாக மட்டுமே கருது மனப்பான்மை. இது ஆண்களுக்கு மட்டுமான பிரச்சினையில்லை. பெண்களும் தங்கள் துணைகளை தங்களுடைய பொருட்களாக மட்டுமே பார்க்கிறார்கள் என்பதும் உண்மைதான். யாராவது பறித்து விடுவார்களோ… யாரும் கொண்டுபோய்விடுவார்களோ என்ற அளவில் பொருளை பத்திரப்படுத்தும் ஆவேசங்களையும் பல கொலைகளாக, பொய் புகார்களாக என்று பல வடிவில் கடக்கிறோம்தான்.
நிவேதாவை கொலையும் கூட, அதை திட்டமிட்ட கொலையாக நிறுவ நான் தயாரில்லைதான். ஆனால் கணநேர ஆவேசமென்றாலும் அது கொலையே. இப்போது இளையராஜா தானும் தற்கொலை செய்துகொண்டுவிட்டார். இதற்குதான் இத்தனை பாடுகளா ?

பின், விவாகரத்தாகி தனிமையில் இருக்கிற நிவேதா யாரோ ஒருவரை விரும்புவது, உறவில் இருப்பது எப்படி கள்ளக்காதலாக ஆகும் ? அது காதல் மட்டும்தானே. காதல் மட்டும்தான். ஆனால் இந்த ‘புறம்பேசுகிற’ சமூகம் அதை ஏற்றுக்கொள்ளாது என்பது “நிவேதா கள்ளக்காதல்” என்ற அறிவுரைப் பதிவுகளின் வழியாக முகத்தில் அறைகிறது. இந்த சமூக விலக்கம்தான் நிவேதாவின் உடலை வாங்க மறுக்கும் அழுத்தத்தை அவரது குழந்தைகள் மீது தன்னிச்சையாக திணிக்கிறது.

கலாச்சார மாற்றங்களை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அத நடைமுறைப்படுத்த மனது தயாராக இல்லை. பிரான்ஸ் அதிபர் தன்னை விட 30 வயது அதிகமான பெண்ணை திருமணம் கொண்டிருப்பதை புல்லரித்து கொண்டாடுகிறோம். உள்ளூரில் ஒரு பெண் அப்படியான உறவிற்குள் சென்றாலோ, அல்லது அந்த உறவில் கொடூரமாக நடத்தப்பட்டாலோ “கள்ளக்காதல்னா இப்படிதான் ஆகும்” என்று முடிவெழுதி புதைத்துவிடுகிறோம்.
காதல் என்றால் என்ன என்பதையே முற்றிலும் தவறாக புரிந்துகொண்டிருக்கும், அதன்படியே வாழ்ந்துகொண்டிருக்கும் சமூகத்தின் விளைவுகள்தான் இவையெல்லாம்.
புரிந்துகொள்வதும் விட்டுகொடுப்பதுமே இங்கு காதலாக சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கிறது. விட்டுகொடுப்பதென்பது தேவ சாகசம் போலப் பதியவைக்கப்பட்டுள்ளது. காதல் புளித்துப் போன நாட்களில் அதுவே “நான் உனக்காக என்னை மாத்திக்கிட்டேன்… விட்டுக்கொடுத்தேன்… என்கிட்டே இப்ப எதுவுமே இல்ல… ஆனா நீ நீயா எப்பவும்போல சந்தோஷமா இருக்க…” எனும் புகார்களாக வெடித்து, சமயத்தில் கொலைகளாகவும் மாறுகின்றன. ஆமாம்தானே ?

ஆனால் அதுவல்ல காதல். அப்படியல்ல காதல். சின்ட்ரெல்லா கதைகளல்ல நிஜக்காதல்கள். ‘They lived happily ever after…’ என்று என்ட் கார்ட் எழுதுவதற்கு.
காதல், தன் துணையைப் புரிந்துகொள்ளவைக்கும். சேர்த்து அணைத்துகொள்ளச்செய்யும். தேவைப்படின் விலகியும் நிற்கும். பிரிகிற தருணங்கள் வலி என்றாலும் நல்லதொரு வாழ்க்கைக்காக வாழ்த்தும். மறுபடி பார்க்க நேருகிற தருணத்தில் குதூகலிக்கவும் செய்யும். இப்படியான வாழ்கை எனக்கும் இருந்திருக்கிறது. அதனால்தான் திட்டமாக இதைச் சொல்லமுடிகிறது.

இதெல்லாம்தான் காதலின் சௌந்தர்யங்கள் என்று சொல்லி இந்தக் கட்டுரையை முடித்தால் மிக க்ளிஷேவாக இருக்கும். ‘அரைத்த மாவு’ ‘புளித்த ஒயின்’ என்று கூக்குரலிட்டு எழுதினாலும் நிஜ வாழ்வில் இன்னமும் அனைவராலும் நடைமுறைப்படுத்திட இயலாத ஒன்றாக திகழும் இவையெல்லாம்தான் காதலின் சௌந்தர்யங்கள்.

இறுதியாக மீண்டும் ஒருமுறை “பெண்களைப் பற்றிய, பெண்களின் வாழ்வைப் பற்றிய உண்மையின் வெம்மையை எதிர்கொள்ளுவதில்தான் நம் ஆண்களின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது’’ என்பதை அழுத்தமாக சொல்கிறேன்.

(சுயநலம் மட்டுமேயான நிவேதாவின் குழந்தைகளைப்பற்றி, Single Mother-களிடம் வளரும் குழந்தைகளைப் பற்றி ஒருநாள் விரிவாகப் பேசவேண்டும் என்று நினைக்கிறேன். சந்தர்ப்பம் வாய்க்கும்போது நிச்சயம் பேசுவோம்… )
தொடரும்…

 

2 Comments

  1. // (வல்லிதான். வள்ளி இல்லை) //
    அப்புறம் ஏன் முகப்பில் வள்ளி?
    “அதன் பெயர் சௌந்தர்யம்” -கவிதா சொர்ணவள்ளி-5”

  2. “தேவைப்படின் விலகியும் நிற்கும்”
    என்பதை ஏற்றுக் கொள்ளும் போது விட்டுக் கொடுத்தலை ஏன் ஏற்றுக் கொள்ள மாட்டேன் கிறீர்கள்?

Leave a Reply

Your email address will not be published.


*