இளைஞரின் தலை துண்டிப்பு: பின்னணி தகவல்!

இளைஞரின் தலையை துண்டித்து கடலூர் காவல் நிலையத்தில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிசாவடி காவல்நிலையத்தின் முன்பு ஒரு இளைஞரின் தலை துண்டிக்கப்பட்டு வீசி எறியப்பட்டுள்ளது. புதன் கிழமை இரவு 8 மணி அளவில் இரு நபர்கள் காவல் நிலையத்தின் முன்பு துண்டிக்கப்பட்ட தலையை வீசி எறிந்து விட்டு சென்றதை காவல்துறை சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் புதுச்சேரி பாகூரை அடுத்த குடியிருப்பு பாளையத்தை சேர்ந்த சுவேதன் என்பதும், அவரை அவரது நண்பர்களே வெட்டிப் படுகொலை செய்த அதிர்ச்சித் தகவலும் வெளியானது. கொலை செய்யப்பட்ட சுவேதனும், அவரது நண்பர்களான வினோத், சர்மா, தாஸ் ஆகிய நால்வரும் அப்பகுதில் சிறு சிறு கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சுவேதனை பிடித்து விசாரித்தனர்.
அப்போது சுவேதன் மற்ற குற்றவாளிகளை அடையாளம் காட்டினால், அவரை விட்டுவிடுவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இதனையடுத்து, வினோத், சர்மா, தாஸ் ஆகிய மூவரையும் போலீசாருக்கு சுவேதன் அடையாளம் காட்டியதாக தெரிகிறது. இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் சுவேதனை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டினர். அண்மையில் ஜாமீனில் வெளியே வந்த அவர்கள், சுவேதனை பாகூர் ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். பின்னர் அவரின் தலையை மட்டும் தனியாக வெட்டி எடுத்து கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காவல்நிலையத்தில் வீசிச்சென்றுள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பதுங்கியிருந்த வினோத், தாஸ் ஆகிய இருவரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் எப்படியும் போலீஸிடம் மாட்டிவிடுவோம் என தெரியும். அதனால் தங்களின் நண்பர்கள் உள்ள கடலூர் சிறைக்கு செல்ல கடலூர் மாவட்ட காவல்நிலையத்தில் தலையை வீசியதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் கொலைக்கு மூளையாக இருந்து திட்டம் தீட்டிய ஷர்மாவை வலைவீசி தேடி வருகின்றனர்..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*