சுருட்டுச் சாமியாரும் கொலை செய்யப்பட்ட நிவேதிதாவும்!

சுருட்டுச் சாமியாரை நீங்கள் மறந்திருக்கக் கூடும். 2008 -ஆம் ஆண்டில் நம் மொத்த அச்சு ஊடகங்களுக்கும் கள்ளக்காதல் கதைகளை எழுத தீனி கொடுத்தவர் இவர்தான்.
பழனிசாமி எனும் பெயரில் மடிப்பாக்கம் அருகே ஆஸ்ரமம் வைத்திருந்தவருக்கு ஏற்கனவே இரு மனைவிகள். மூன்றாவதாக திவ்யா என்ற மருத்துவ மாணவியும் அவரோடு பழக நம் ஊடகங்கள் அவருக்கு வைத்த பெயர் சுருட்டு சாமியார்.
அவர் மது அருந்திக் கொண்டே சுருட்டு பிடித்துக் கொண்டே செக்ஸ் வைத்துக் கொள்வார் என்று பக்கம் பக்கமாக எழுதி தீர்த்தார்கள் ஏதோ பக்கத்தில் இருந்து விளக்கு பிடித்தவர்கள் போல,
போலீஸ் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தார்கள். மாணவியை மீட்டு விடுதியில் வைத்தார்கள். ஊடகங்களும் சுருட்டு சாமியாரை மறந்து விட சில மாதம் கழித்து வெளியில் வந்தவருக்காக காத்திருந்தார் திவ்யா. வந்த ஒரு சில நாட்களில் திவ்யாவும் சுருட்டு சாமியாரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்கள்.
இப்போது நிவேதிதா என்ற பெண்ணின் வாழ்க்கை கதையை கள்ளக்காதல் என எழுதி வருகிறது ஊடகங்கள்.
நிவேதிதாவுக்கு 47 வயது கணவனை விவகாரத்து செய்தவர். அல்லது கணவனால் கைவிடப்பட்டவர் இளையராஜா என்பவரோடு பழகுகிறார். இளையராஜா இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள அதை தடுக்காத நிவேதிதா ஒதுங்கிச் சென்றிருக்கிறார். கணபதி என்கிற புதிய நபருடன் பழகியிருக்கிறார். இதை விரும்பாத இளையராஜா காரை ஏற்றி கொலை செய்திருக்கிறார் நிவேதிதாவை.
இப்போது நிவேதிதாவின் உடலை அவரது பிள்ளைகளே வாங்க மறுத்திருக்கிறார்கள். திருமணத்திற்கு பின்னர் பெண்ணுக்கு காதலே வரக்கூடாது என்ற எண்ணமும் அதுவும் 47 வயதில் காதலா என்ற கூச்சமுமே அந்தக் குழந்தைகளை அம்மாவின் உடலை வாங்க விடாமல் புறத்தூண்டல் காரணமாக தடுத்திருக்கும்.
நிவேதிதாவின் உடலை சுயமாக வாங்க மறுக்கும் சூழல் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. சாதி ரீதியான அழுத்தங்களோ அல்லது வேறு அழுத்தங்களோ கவுரம் எனும் பெயரில் பிள்ளைகள் மீது சுமத்தப்பட்டிருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

இந்த பிரச்சனை தொடர்பாக கவிஞர் மாலதி மைத்ரி தன் முகநூலில் பதிந்த கருத்து அரசியல் ரீதியாக இதை பளிச்சென உணர்த்துகிறது நமக்கு அவருடைய பதிவு இதுதான்.

//

பல பெண்களுடன் உறவு கொள்பவன் காதல் மன்னன். செத்தால் கல்யாண சாவு.

துணையிழந்ததும் வேறு ஆணை தேடுபவள் வேசி. செத்தால் அனாதை பிணம்.

செந்தில்கள் மல்லிகாவையும் கோபிகாவையும் தங்கள் மனைவியிடம் முன்னாள் காதலிகளாக அறிமுகப்படுத்த முடியும்.

மல்லிகாவும் கோபிகாவும் செந்தில்களை தங்கள் கணவனிடம் கூட படித்த மாணவனாகத்தான் அறிமுகப்படுத்த முடியும்.

#சமூகநீதி

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*