மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சர்ச்சை : இன்று அனைத்துக்கட்சி கூட்டம்!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சர்ச்சை குறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

மின்னணு இயந்திரத்தில் வாக்குப்பதிவு  நடக்கும்போது குறிப்பிட்ட ஒரு கட்சிக்கும், குறிப்பிட்ட சின்னத்தில் மட்டுமே வாக்குகள் அனைத்தும் பதிவாகிறது என்கிற சர்ச்சை எழுந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டதாகவும், பதிவான வாக்குகள் அனைத்தும் தாமரை சின்னத்துக்கே விழுந்ததாகவும் தேர்தலில் போட்டியிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையம் மீது புகார் கூறினர். இதனால் மீண்டும் வாக்குச் சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்த வேண்டும் எனக் கோரி அந்தக் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்படி முறைகேடுகள் நடக்கிறது என்று செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம் ஆம்ஆத்மி பயன்படுத்திய இயந்திரம் போலியானது என்றும்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது எனவும் தெரிவித்தது. மேலும் ஒருவர் யாருக்கு வாக்களித்தார் என்பதை அறிய அவருக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரத்தை இணைக்கவும் முடிவு செய்துள்ளது.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு இயந்திரம், தேர்தல் சீர்திருத்தங்கள் ஆகியவை குறித்து இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் விரிவாக விவாதிக்க இருக்கிறார்கள்.

தேர்தலில் வாக்காளருக்குப் பணம் கொடுக்கும் வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்வது பற்றியும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 7 தேசியக் கட்சிகளுக்கும், 48 மாநிலக் கட்சிகளையும் அழைத்துள்ளது தேர்தல் ஆணையம்.. தமிழகத்தில் அதிமுக இரண்டாக உடைந்து தேர்தல் ஆணையத்தில் சின்னம் முடக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் அணி சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, வேணுகோபால் எம்.பி. கலந்து கொள்கிறார்கள்.  பன்னீர் செல்வம் அணியின் சார்பாக மைத்ரேயன் எம்.பி.யும் , மனோஜ் பாண்டியனும்  கலந்து கொள்கிறார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*