ரேங்க் சிஸ்டம் ஒழிப்பு: தோல்வியை மறைக்க நாடகமா? -2

ரேங்க் சிஸ்டம் ஒழிப்பு: தோல்வியை மறைக்க நாடகமா? -1

ரேங்க் சிஸ்டத்தை ஒழித்து விட்டதாகக் கூறும் தமிழக அரசின் நடவடிக்கை மகிழ்ச்சியை கொண்டு வந்த போதிலும். அதில் மகிழ்ச்சியடைய எதுவும் இல்லை என்பதே யதார்த்தமாக இருக்கிறது.
காரணம் பள்ளிக்கல்வியை முடித்து மத்திய பட்டியலில் இருக்கும் மருத்துவக்கல்விக்குள் நுழைய இந்த ரேங்க் சிஸ்டமே பயன்படாது நீட் எனும் கத்தி தமிழக மாணவர்களின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது.

 
இன்னொரு பக்கம் இன்னார் இன்னார் இவளவு மதிப்பெண்கள் எடுத்தார்கள் என்பது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லையே தவிற தாங்கள் என்ன மதிப்பெண் எடுத்தோம் என்பதை ஒவ்வொரு மாணவர்களும் தெரிந்து கொள்வதோடு. தங்கள் பள்ளி மாணவர்கள் எவளவு மதிப்பெண் எடுத்தார்கள் என்பதை பள்ளிகளும் தெரிந்து கொள்கின்றன.
நேற்றிலிருந்து ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளும் தங்களுக்கு தெரிந்த அல்லது போட்டி பள்ளி எனக்கருதும் பள்ளிகளுக்கு தொலைபேசி செய்து உங்கள் மாணவர்கள் எடுத்த மதிப்பெண் எவளவு எனக் கேட்டு யார் முதலிடம் என்பதை தெரிந்து கொள்ளும் க்யுரியாசிட்டியையும் இந்த ரேங்க் முறை ஒழிப்பு உருவாக்கியிருக்கிறது.
தவிறவும் டாஸ்மாக் மூடிவிட்டால் கை, கால் எல்லாம் உதறல் எடுத்து எப்போது டாஸ்மாக் திறக்கும் என அதிகாலையே டாஸ்மாக் கடைகளில் தவம் கிடந்த திறந்த உடன் கட்டிங்கை வாங்கி ராவாக போடும் குடிகாரர்களைப் போல மதிப்பெண்களால் தங்களை உயர்குடி என பீத்திக் கொண்ட பெற்றோர்கள் இப்போது அப்படி ஒரு குடிகாகாரனின் நடுக்கத்தோடு நிற்கிறார்கள் பள்ளிகளின் வாசலில். இவர்கள் தங்கள் பிள்ளைகள் நல்ல மதிப்பெண்கள் பெற்று விட்டார்கள் என்பதோடு திருப்தியடைவதில்லை. முதல் மதிப்பெண் பெற்றார்களா என்பதை தெரிந்து கொள்ளவே இந்த பதட்டம்.

 
இந்த மதிப்பெண் போதைதான் சென்னையில் கிரேசில்லா என்ற மாணவியை வெற்றி பெற்றும் தற்கொலை செய்ய தூண்டியிருக்கிறது.
நிற்க,

 
இந்த ஆண்டு முந்தைய ஆண்டுகளை விட பிளஸ் டூ கேள்விகள் எளிதாக இருந்தது. தோல்வி எண்ணிக்கை குறைந்து அதிக அளவில் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெருவார்கள் என்ற கருத்து தேர்வு நடந்த போதே உலவியதை இப்போது தேர்வு முடிவுகள் மெய்ப்பித்திருக்கிறது.
தமிழக அரசு மதிப்பெண்கள் அடிப்படையில் பிரித்த கிரேட் இதுதான்.
ஏ கிரேடு : 1180 மார்க்குகளுக்கு மேல் பெற்றவர்கள் – 1171

பி கிரேடு : 1151 – 1180 மார்க் பெற்றவர்கள் – 12,283

சி கிரேடு : 1126 – 1150 மார்க் பெற்றவர்கள் – 14,806

டி கிரேடு : 1101 – 1125 மார்க் பெற்றவர்கள் – 17,750

இ கிரேடு : 1001 – 1100 மார்க் பெற்றவர்கள் – 95,906

எப் கிரேடு : 901 – 1000 மார்க் பெற்றவர்கள் – 1,36,849

ஜி கிரேடு : 801 – 900 மார்க் பெற்றவர்கள் – 1,64,489

எச் கிரேடு : 701 – 800 மார்க் பெற்றவர்கள் – 1,69,070

ஐ கிரேடு : 700 மற்றும் அதற்கு கீழ் பெற்றவர்கள் – 2,80,938
தமிழக அரசின் ரேங்க் சிஸ்டம் ஒழிப்பை சமூக வலைத்தளங்களில் புழங்கும் முக்கிய பிரமுகர்கள் எப்படி பார்க்கிறார்கள்.

 
ராதிகா சுதாகர்

 
“ தனியார் பள்ளிமுறையை ஒழிக்க துப்பில்லாத அரசாங்கம்தான் தரவரிசை பட்டியலை ஒழித்துள்ளது ! எத்தனையோ திறம்மிகுந்த ஏழைப் பிள்ளைகள் அடையாளம் காணப்பட்டு உதவி வந்தது இனி இல்லாமல் போகும்.
#

 
கதிர் வேலு

 
“ ரேங்க் வெளியிடப்படாததால், ஒரு வகையில் “ஷ்ஷப்பாடா” என நிம்மதியாகத்தான் இருக்கின்றது. ஆனால் அதேசமயம் ரேங் வெளியிடப்படாததால் “நான் டாக்டராகி… சமூகத்துக்கு” எனும் குரல்களைக் கேட்க முடியவில்லை எனும் குதூகலம்தான் பரிதாபமாக இருக்கின்றது.
யாரை நோக்கி அந்தக் குதூகலம்? 17 வயது பிள்ளைகளை நோக்கியா? மாநில அளவில் முதல் சில இடங்கள் என்பது அவ்வளவு எளிதா? அதை முறையற்ற முறைகளில் ஓரிருவர் சாதித்திருந்தாலும், மற்ற அனைவருமே அதற்காக செய்த தியாகங்கள், உழைப்பு ஒன்றும் அவ்வளவு சாதாரணமானதில்லையே. அப்படியான உழைப்பைப் போட்டு வரும் ஒரு 17 வயது பிள்ளை, பாராட்டும், புகழ்ச்சியும் மிகுந்த உணர்ச்சிவயப்பட்ட சூழலில் நெகிழ்ந்திருக்கும் தருணத்தில் “நான் டாக்டருக்குப் படிச்சு, சமூகத்துக்கு சேவை செய்வேன் என்பதை” இவ்வளவு வன்மமாக அணுக வேண்டிய தேவையென்ன.
பெரிய பெரிய வாக்குறுதிகள் கொடுத்து வஞ்சிப்பவர்களோடு எண்ணற்ற சமரசங்களோடு நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கும் அதே சமூகத்தில்தானே அந்த 17 வயது பிள்ளைகளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 
#

 
எம்.எம். அப்துல்லா
ரேங்க் பட்டியல் இந்த ஆண்டு முதல் வெளியிடப்படாது என அரசு (?) அறிவித்துள்ளது. மகிழ்ச்சி. நாமக்கல் பிராய்லர் டைப் பள்ளிகளின் மீதான நேரடியான தாக்குதல் இது!
இனி மாணவர்களின் ராங்க் வெளியிடப்படாது என்ற அறிவிப்பால் அதை வைத்து விளம்பரம் செய்த வித்யாவிகாஸ், எஸ்.ஆர்.வி டைப் பள்ளிகளின் மீதான மோகம் பெற்றோருக்கு இயல்பாகவே குறைந்து போகும்.
செரி.. அரசுப் பள்ளியில் போய் படித்தாலாவது ரேங்க் கிடைக்குமா என்றால் அதுவும் இல்லை. அரசுப் பள்ளியில் படித்தால் நீட்டில் தேற முடியாது என்ற கற்பிதம் வேறு பெற்றோரை பயமுறுத்தும்.
அப்ப இந்த ரேங்க் பிடித்தம் பெற்றோருக்கு ஒரே வழி “அகில இந்திய ரேங்க்/ டாப்பர்” மட்டுமே. எனவே AIEEE, PITS PILANI, AIIMS நோக்கி தள்ளப்படுவார்கள். இதற்காக பிள்ளைகளை இனி சி.பி.எஸ்.சி பள்ளிகள் , கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுவார்கள்.
அந்தப் பள்ளிகளில் தமிழ் இருக்காது.. என்னாகும்?? Create a bunch of youngsters with no passion for Tamil as a language. தமிழ் மீது ஆர்வமும், அக்கறையும் அற்ற ஒரு தலைமுறை உருவாகியே தீரும்.
மத்திய பா.ஜ.க அரசு திட்டமிட்டு அடிக்கிறது. மாநில அதிமுக அரசு துரோகத்திற்கு துணை போகிறது. சுபம்.
#
உலக அளவில் உள்ள கிரேடு முறை பற்றி மாலதியின் குறிப்பும் முக்கியமானது
மாலதி மைத்ரி
கிரேடு முறை
மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் கல்வித்தரத்தை அளவிடுவது தவறு. மதிப்பெண்களின் நுண்ணிய வேறுபாடுகள் தவிர்த்து குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் தரப்படுத்தலே மேன்மையான முறை.
உலகளவில் பள்ளிக்கல்வித் தரத்தில் முன்னணியில் உள்ள ஐரோப்பிய நாடுகளில் பின்லாந்து 10 சதவித வித்தியாசத்துக்கு ஒரு கிரேடு அளிக்கிறது. பிரான்ஸ் 20 சதவீதத்திற்கு ஒரு கிரேடு முறையை பின்பற்றுகிறது. இவைகள் 5 தரவரிசை கிரேடுக்குள் மொத்த மாணவர்களின் மதிப்பெண்களையும் அடக்கிவிடுகின்றன.
தமிழகம் 1.5 சதவீத வித்தியாசத்தில் மாணவர்களின் மதிப்பெண்களை தரம் பிரிப்பது அதிக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் பாரபட்சமான முறையாகும்.
அமெரிக்க பள்ளிக்கல்வி நிறுவனங்கள் 4, 5.11, 13 என்று பலதரப்பட்ட தரவரிசை கிரேடுகளை விதவிதமாக பின்பற்றுகின்றன.
மெக்காலோ கல்வித் திட்டத்தை பின்பற்றும் தமிழகம் தனது எஜமான் இங்கிலாந்து 10 சதவீத கிரேடு முறையைக்கூட பின்பற்றாமல் பள்ளிக்கல்வி தரத்தில் மிக மோசமாக பின்தங்கியுள்ள அமெரிக்காவின் 2 சதவீத 3 சதவீத வித்தியாச கிரேடு முறையை தமிழகத்தில் அறிமுகப்படுத்தும் அரசியல் மீண்டும் அடிமைகளை மட்டுமே உருவாக்கும் அரசியல்.
தற்போது தமிழகம் அறிமுகப்படுத்தியுள்ள கிரேடு முறை மாணவரின் நலனுக்கான கிரேடு முறை அல்ல.

#பிரான்ஸ்
16–20: very good (très bien: TB)
14–15.9: good (bien: B)
12–13.9: satisfactory (assez bien: AB)
10–11.9: correct (passable; not an official grade)
0–9.9: fail (insuffisant)
#இங்கிலாந்து
A – 80%
B – 70%
C – 60%
D – 50%
E – 40%
#அமெரிக்கா
A+ 100%
A 93%-99%
A- 90%-92%
B+ 87%-89%
B 83%-86%
B- 80%-82%
C+ 77%-79%
C 73%-76%
C- 70%-72%
D+ 67%-69%
D 63%-66%
D- 60%-62%
F 0%-59%
#தமிழ்நாடு
1181 -1200 – A
1151 – 1180 – B
1126 – 1150 – C
1101 – 1125 – D
1001 – 1100 – E
901 – 1000 – f
801 – 900 – G
701 – 800 – H
– 700 – I
– 699 – No Grade
#
ரேங்க் முறை ஒழிப்பு தமிழ் வழிக்கல்விக்கு ஆபத்து என்கிற பார்வையை முன் வைக்கிறார் பூங்குழலி அவரது பதிவு.
“ +2 தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்கள் பட்டியல் இனி அறிவிக்கப்பட மாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. ராங்க் முறையில் எனக்கு உடன்பாடு இல்லை தான். ஆனால் இந்த அறிவிப்பு உள் நோக்கம் கொண்டது என்றே நான் நினைக்கிறேன். தமிழக அரசு ராங்க் பட்டியலில் தமிழை முதல் மொழிப்பாடமாக எடுத்தவர்கள் மட்டுமே இடம் பெற முடியும். ராங்க் பட்டியலில் இடம் பிடிப்பது ஒரு பள்ளியின் வியாபாரத்திற்கு தேவையான ஒன்று. அதற்காகவே தமிழை இந்த தனியார் பள்ளிகள் முதல் மொழிப்பாடமாக வைத்திருந்தன. இனி அது இல்லையெனில் தமிழின் இடத்தை, எளிதாக மதிப்பெண் பெறக் கூடிய மொழிப்பாடங்களான இந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்சு போன்றவை பிடித்து விடும். அதற்கான வாசலை திறந்து விடவே இந்த அறிவிப்பு வழிவகுக்கும் என நினைக்கிறேன்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*