போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் மீண்டும் இன்று பேச்சுவார்த்தை!

வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருக்கும் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் மீண்டும் இன்று பேச்சுவார்த்தை தொடங்கியது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் 1 லட்சத்து 43 ஆயிரம் ஊழியர்களுக்கு 13-வது  ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்குதல், போக்குவரத்து இழப்பை அரசு ஏற்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து நிர்வாகத்துடன் தொழிற்சங்கத்தினர் நடத்திய 4 கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில்  முடிந்ததைத் தொடர்ந்து போக்குவரத்து தொழிற்சங்கம் வரும் மே மாதம் 15 -ஆம் தேதி முதல் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை காலவரையின்றி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். இவர்களின் கோரிக்கை குறித்து  போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில், ‘ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான நிலுவை தொகை மொத்தமாக வழங்க முடியாது. படிப்படியாக வழங்க ஏற்பாடு செய்யப்படும்’ என கூறினார். ஆனால், அதைப் போக்குவரத்து தொழிலாளர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

இதைத்தொடர்ந்து, போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை தனி துணை ஆணையர் யாசின் பேகம் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பேச்சுவார்த்தை தொலைவியில் முடிந்ததைத் தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை தனி துணை ஆணையர் யாசின் பேகம் கூறுகையில், “போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினால், பல லட்சம் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் எனவும் எனவே இதனைக் கருத்தில்கொண்டு வேலைநிறுத்த போராட்டத்தை தவிர்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொழிற்சங்க நிர்வாகிகள், நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகவும், இதிலும் உடன்பாடு ஏற்படாவிட்டால் திட்டமிட்டபடி 15-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கும் என அறிவித்தனர்.

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் மாநிலம் முழுவதும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றத் தமிழக அரசு முயற்சித்து வருகிறது. ஏற்கனவே தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கைக்கப்பட்டு வரும் இந்தச் சூழலில் போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை ஏற்காமல் அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் அது அதிமுக அரசிற்கு பெரும் பின்னடைவாக அமைந்து விடும். எனவே, இன்றைய பேச்சுவார்த்தையில் தமிழக அரசு உரிய முடிவையே மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*