சுந்தர் மிரட்டலுக்கு தனுஷின் விளக்கம்

‘கபாலி’ படத்திற்கு பிறகு ரஜினியை வைத்து ரஞ்சித் மீண்டும் இயக்கவுள்ளார். இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படம் மும்பையில் உள்ள தாராவி பகுதியை மையப்படுத்தி தயாராகவுள்ளதாகவும், மும்பையின் நிழலுலக தாதா ஹாஜி மஸ்தான் வாழ்கையைத் தழுவி எடுக்கபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், மும்பை தாதா ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் ரஜினிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அந்தக் கடிதத்தில், “என்னுடைய வளர்ப்புத் தந்தை, ஹாஜி மஸ்தான் ‘பாரதிய மைனாரிட்டி சுரக்‌ஷா மஹாசங்’ என்ற கட்சியை நிறுவியவர். இயக்குநர் ரஞ்சித், உங்களை வைத்து எடுக்கிற படத்தில் என்னுடைய தந்தையை மும்பையின் கள்ளக் கடத்தல் தலைவனாகவும், நிழலுலக தாதாவாகவும் சித்தரித்துக் காட்ட உள்ளதாக பத்திரிகைகளில் படித்தேன். இது வேண்டாத வேலை. என் தந்தை மீது குற்றச் செயலுக்காக எந்த கோர்ட்டும் தண்டனை அளிக்கவில்லை. தேவையில்லாமல் என் தந்தை பெயரை நீங்கள் இழிவாக சித்தரித்து படத்தில் காட்சிப்படுத்தினால், அதன் பின்விளைவுகளை சந்திக்க வேண்டிவரும்” என்று கூறியுள்ளார். ஹாஜியின் வாழ்க்கை வரலாறு பற்றி எடுப்பதில் சுந்தருக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அதில் தன் தந்தை தவறாக சித்தரிக்கப்படுவதை விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக தனுஷ் விளக்கம் அளித்துள்ளார். அதில், “பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படமானது ஹாஜி மஸ்தான் கதையல்ல, அந்தக் கதை யாருடைய வாழ்க்கை வரலாற்றையும் கொண்டு உருவாக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*