காஷ்மீர் :சீற்றத்தின் கற்கள் -ஃபைசுல் யாசீன் -1

நன்றி: www.frontline.in
தமிழில் :ஸ்னேகா
21 வயதான அஃப்ஷான் அஷிகிற்கு, இந்திய கால்பந்து குழுவில் விளையாட வேண்டும் என்பது கனவு. ஸ்ரீநகரில் இருக்கும் அரசு பெண்கள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ மாணவி அஃப்ஷான் அஷிக். தினமும் மாலை ஸ்ரீநகர் விருந்தினர் வரவேற்பு மையத்திற்கு வெளியே இருக்கும் மைதானத்த்தில் இந்தியவின் ஜெர்சி அணிந்து கால்பந்து விளையாடிக் கொண்டும், பயிற்சி செய்து கொண்டும் இருப்பார். ஜம்மு காஷ்மீரில் கால்பந்தில் சிறக்கும் சில இஸ்லாமிய பெண்களில் இவரும் ஒருவர். காஷ்மீரில் பெண்கள் கால்பந்து கற்றுக் கொள்ள அஷிக்கை கால்பந்து பயிற்றுனராக மாநில அரசாங்கம் அமர்த்தியது. இதனால், ஏப்ரல் மாதம் அவர் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் மீதும், பாராளுமன்ற படைகள் மீது கல்லெறிந்த போது, ஜம்மு காஷ்மீரில் இருந்தவர்களும், வெளியிலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களும் அதிர்ந்து போனார்கள்.
இந்தியாவின் கையில் இருந்து காஷ்மீர் நழுவிக் கொண்டிருக்கிறது என முன்னால் மத்திய அமைச்சர் ப சிதம்பரமும், முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவும் சொன்னது சரியாகவே பொருந்திப் போகத் தொடங்கியது. இந்திய காலபந்தாட்ட வீரர் ஆக வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த ஒருவர், திடீரென வேறு அணிக்கு மாறி, மத்திய அரசுக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் செய்யும், கல்லெறிந்து போராடும் நூற்றுக்கணக்கான இளைஞர்களோடு இணைந்திருக்கிறார். “ ஆமாம் நான் காவலர்கள் மீது கல்லெறிந்தேன், ஆமாம், எனக்கு தேசிய அளவில் விளையாட வேண்டும்” என்கிறார் ஸ்ரீநகரின் பெமினா பகுதியை சேர்ந்த அஃப்ஷான் அஷிக். “ எஸ்.பி மேல்நிலைப்பள்ளியின் மாணவர்கள் சமாதானமான முறையில் போராடிக் கொண்டிருந்தார்கள், அப்போது காவல்துறையினர் அவர்கள் மீது காரணமே இல்லாமல் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். நானும், வேறு 10 மாணவிகளும் பிரதாப் பார்க் அருகே இருக்கும் சிட்டி செண்டருக்கு போன போது, என்னுடைய தகப்பன் வயது இருக்கும் ஒரு காவலர் எங்களை கெட்ட வார்த்தைகள் பேசினார், எங்களில் ஒரு மாணவியை அந்த பகுதியை கடந்ததற்காக அறைந்தார்”.


போலீசார் தன் தோழியை அடிப்பதை பார்த்த அஷிக், அவருடன் விவாதித்திருக்கிறார். “ என்னிடம் எந்த ஆயுதங்களும் இல்லாததால், அந்த ஒடுக்குமுறையான காவலர் மீது கல்லெறிய முடிவு செய்தேன்” எனும் அஷிக், தான் வழக்கமாக கல்லெறிந்து போராடுபவர் கிடையாது என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.
கல்லுக்கு பதிலாக துப்பாக்கி எட்டும் தொலைவில் இருந்தால், அதை கையில் எடுப்பீர்களா எனும் கேள்விக்கு ‘இளைஞர்களை விளையாட்டில் ஈடுபடுத்தவும் ஊக்கபடுத்தவுமே நான் விரும்புகிறேன், பச்சிளம் குழந்தைகளும் இளைஞர்களும் கொல்லப்படுவது தான் பலரும் ஆயுதமேந்த காரணம்’ என பதிலளிக்கிறார். “ இந்திய அரசு காஷ்மீரில் செய்யும் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆண்கள் மட்டும் போராடுவர்கள், கல்லெறிவார்கள், இப்போது பெண்களும் களமிறங்குகிறார்கள்” என அஃப்ஷான் அஷிக் கூறுகிறார். காஷ்மீரி போராளிகள் குறித்து கவலைப்படுவதாக கூறும் அஷிக், போராளிகள் துப்பாக்கி சூட்டில் பிடிபட்டதாக கேட்கும் போதெல்லாம் அவர்களுக்காக ஜெபம் செய்கிறாராம். “ அவர்களும் யாரோ ஒருவரின் குழந்தைகள், யாரோ ஒருவரின் சகோதரர்கள். காஷ்மீரி போராளிகள் தீவிரவாதிகள் அல்ல, அவர்கள் கண்மூடித்தனமான வன்முறையில் ஈடுபடுவது இல்லை, அவர்கள் தங்களுடைய விடுதலைக்காக போராடுகிறார்கள்” என்கிறார்.
முன்னணி அரசியல்வாதிகள் அத்தனை பேரையும் விமர்சிக்கும் அஷிக், முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி நினைத்தால் காஷ்மீர் கொலைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியும் என்கிறார். 2010 ஆம் ஆண்டு ஒமர் அப்துல்ல அரசும் அதை செய்திருக்க முடியும். “ எதிர் கட்சியாக இருக்கும் போது மக்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்” எனும் அஷிக், “நான் கல்லெறியும் போராட்டத்தில் ஈடுபட்டதால் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கெடுக்க எனக்கு அனுமதி அளிக்க அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்கிறார்கள்” என்கிறார். அனைத்து கட்சி ஹூரியத் அமைப்பின் தலைவரான சையத் அலி கிலானிக்கு அறிவுரையாக “ காஷ்மீரில் இருக்கும் அத்தனை பேரும் அவர் (கிலானி) சொல்வதை கேட்கிறார்கள். இளைஞர்களை வன்முறையில்லாத போராட்டத்தில் மட்டுமே பங்கு கொள்ளச் செய்ய வேண்டியது அவருடைய பொறுப்பு. ஆனால் பாதுகாப்பு ஏஜென்சிகள் தூண்டாத வரை இளைஞர்கள் வன்முறை இல்லாமல் தான் போராடுகிறார்கள்” என்கிறார். இராணுவத்திற்கு இருக்கும் இரண்டு முகங்கள் குறித்து பேசும் அஷிக், “ 2014 வெள்ளத்தின் போது மக்களை காப்பாற்றிய ஒரு முகமும், குடிமக்களையும் கொன்று, குழந்தைகளை அடித்து, பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யும் ஒரு முகமும் இராணுவத்திற்கு இருக்கிறது” என்கிறார். இந்தியாவின் மீதிப்பகுதிகளில் இருக்கும் மக்கள் பற்றி பேசுகையில், தனிப்பட்ட உரையாடல்களில் “நல்லவர்களாக” இருக்கிறார்கள், ஆனால் சமூக வலைதளங்களில் காஷ்மீரிகளுக்கு எதிராக எழுதுகிறார்கள் என்கிறார்.


ஒரு நோட்டு புத்தகத்தில் சமீபத்தில் நடந்த காஷ்மீரி கொலைகள் குறித்த செய்திகளயும், புகைப்படங்களையும் ஒட்டி வைத்திருக்கிறார் அஃப்ஷான் அஷிக். “ ஒரு இளைஞன் கொல்லப்பட்டால், ஒரு வன்முறையின் சுழற்சியில் மேலும் 10 இளைஞர்கள் கொல்லப்படுவர்” என உடைந்த குரலில் சொல்கிறார். “ கொல்லப்பட்ட, காயப்பட்ட குழந்தைகளை நினைத்துக் கொள்கிறேன்”. காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எல்லாம் மாநில காவல்துறை தான் காரணம் என்கிறார் அஷிக். காஷ்மீரிக்களை எப்படி கொடூரமாக தாக்குவது என்பதை காவல்துறை தான் இராணுவத்திற்கும், துணை இராணுவ படைகளுக்கும் கற்றுக் கொடுத்தது. பெண்களும் கல்லெறியும் போராட்டத்தில் பங்கெடுக்க துவங்கியதால், காஷ்மீரில் பெண் காவலர்களை அதிகரிக்க இந்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர காஷ்மீர் அரசு காஷ்மீரிக்களை ஈடுபடுத்தி பேச்சுவார்த்தை நடத்தாமல் இருப்பதும்,பாதுகாப்பு அமைப்புகளின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளும், இளைஞர்களின் கல்லெறியும் போராட்டத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், முக்கிய காரணமாக இருப்பது, பிரச்சினையின் தொடக்கம் எவ்வளவு தெளிவாக இருந்தும் அதை புது தில்லி புரிந்து கொள்ளாமல் இருப்பது.
“ காஷ்மீரிக்களின் சுய-தீர்மான உரிமை மறுக்கப்படுவது தான் காஷ்மீரில் இருக்கும் அத்தனை பிரச்சினைக்கும் காரணம் என்பதை இந்தியா புரிந்து கொள்வது கஷ்டமா?” என்கிறார் ஸ்ரீநகரின் நொவாட்டா பகுதியை சேர்ந்த ரூஃப் அஹமது,27. பெரும்பாலான கல்லெறியும் போராட்டங்கள் இங்கு தான் நடைபெறுகிறது. வணிகம் படித்த அஹமது, காஷ்மீரி இளைஞர்களின் கையில் இரண்டு வழிகள் மட்டுமே இருக்கிறது :கையில் துப்பாக்கி எடுப்பது அல்லது கல் எடுப்பது. “எங்களில் சிறந்தவர்கள் துப்பாக்கி தூக்குவார்கள், என்னைப் போன்ற பலவீனமானவர்கள் கல் எடுப்பார்கள்” என்கிறார். மேலும், கல் எறிபவர்கள் பலரும் துப்பாக்கி தூக்க தயாராக இருந்தாலுமே, 1990 களில் கிடைத்தது போல தற்போது காஷ்மீரில் துப்பாக்கி கிடைப்பதில்லை என்பது அஹமதின் கருத்து. “புர்ஹான் வானி, ஸாகீர் மூசா போன்றவர்கள் எங்களுடைய ஹீரோக்கள், முன் மாதிரிகள்” என கடந்த வருடம் கொல்லப்பட்ட ஹிஸ்ப்-உல்-முஜஹிதீன் போராளியை குறிப்பிட்டு சொல்கிறார்.

 

http://www.frontline.in/cover-story/stones-of-fury/article9687753.ece?homepage=true


கட்டுரையாளர் குறிப்பு: ஃபைசுல் யாசீன் ‘ரைசிங் காஷ்மீர்’-ன் அரசியல் ஆசிரியர்.

தொடரும்

2 Trackbacks / Pingbacks

  1. காஷ்மீர் :சீற்றத்தின் கற்கள் -ஃபைசுல் யாசீன் -2
  2. காஷ்மீர் ரமலான் கால துயரங்கள்!

Leave a Reply

Your email address will not be published.


*