விஜயகாந்த் சாதித்ததையாவது சாதிப்பாரா ரஜினி?

தமிழக அரசியல் வரலாற்றில் திரைப்பட நடிகர்கள் அரசியல்வாதியாக மாறுவது நம் மக்களுக்கு பழகிப்போன விசயம். ஆனால், அப்படி அரசியல்வாதியாக மாறிய எத்தனை பேர் மக்கள் மனதில் இடம்பிடித்து வெற்றி பெற்றுள்ளார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் என தொடரும் இந்தப் பட்டியலின் இறுதியில் இப்போது ரஜினிகாந்த் வந்து நிற்கிறார்.

தமிழ் திரைப்படத் துறையில் பரபரப்பான கதாநாயகனாக இயங்கி வந்தவர் விஜயகாந்த். ரஜினிகாந்த் அளவுக்கு துளியும் குறைவில்லாத ரசிகர்கள் அவருக்கு தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ‘புரட்சி கலைஞர்’ என செல்லமாக அழைக்கப்பட்ட விஜயகாந்த் அரசியலுக்கு வர அவரது ரசிகர்கள்தான் காரணம். விஜயகாந்த் சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரம், 1993ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தினர் சுயேட்சையாக நின்று பலர் வெற்றிபெற்றனர். இதன் காரணமாகவே விஜயகாந்த்தின் நாட்டம் அரசியல் பக்கம் திரும்பியது. அரசியலில் இறங்கப்போவதாக அவ்வப்போது கூறி வந்தார். அவர் நடிக்கும் படங்களில் அரசியல்வாதிகளை சாடும் வசனங்களும், மக்கள் முன்னேற்றம் குறித்த வசனங்களும் இடம்பெறத் துவங்கின. தொடர்ந்து அவர் நடிக்கும் படங்களில் எல்லாம் அனல் பறக்கும் அரசியல் வசனம்தான். தன் அரசியல் பிரவேசத்துக்கான பாதையை மெல்ல மெல்ல அமைத்து வந்த விஜயகாந்த், 2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் ‘விருத்தாச்சலம்’ தொகுதியில் நின்று வெற்றி பெற்று தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக பொறுப்பேற்றார். இந்த தேர்தலில் மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட இவரது வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.

அதன்பிறகு 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், இதில் இரிஷிவந்தியம் தொகுதியிலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அவரது கட்சிக்கு எதிர்கட்சித் தகுதி கிடைத்தது. 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் இருந்தார். இன்று வரையிலும் விஜயகாந்த் பல விமர்சனங்களை சந்தித்திருந்தாலும் அவரது கட்சிக்கு என்று மக்கள் மனதில் தனியிடம் உண்டு. தனக்கான அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து அதில் தெளிவாக பயணித்து எதிர்கட்சித் தலைவராக அமரும் அளவு அவரது அரசியல் அனுபவம் இருந்திருக்கிறது.

விஜயகாந்த் அரசியலில் நுழையும் முன்பு அவரது ரசிகர்களை சந்தித்து தன் விருப்பத்தை கூறினார். அன்று விஜயகாந்த்துக்கு வந்த கூட்டம் அளப்பரியது. இவரது அரசியல் அனுபவத்தை நாம் ரஜினியுடன் ஒப்பிட்டு பார்த்தால், ரஜினிக்கு அரசியல் அனுபவம் மிகவும் குறைவு. நேற்று (மே 15, 2017) ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ரஜினி தனது அரசியல் வருகைக்கு அடித்தளமாக அமைத்துக் கொண்டார். ரஜினியின் ரசிகர்கள் அவரை அரசியலுக்கு வரச் சொல்லுவதும், அவர் அரசியல் எனக்கு வேண்டாம் என மறுப்பதும் 30 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கூத்து. அரசியல் வருகை பற்றி கேட்கும்போது கள்ள மௌனம் சாதிக்கும் ரஜினி, நேத்து கடவுள் என்ன நினைக்கிறாரோ அதான் நடக்குமென பட்டும் படாமல் பேசியிருக்கிறார்.

 

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் ரஜினியின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. தமிழக பாஜகவினர் மட்டுமல்லாது இந்திய அளவில் பாஜகவினர் ரஜினியை தங்களுக்கான நேரடி அரசியல் பிரதிநிதியாக களமிறக்க விரும்புகிறார்கள். இதற்கு பல வழிகளில் முயன்று வருகிறார்கள். ரஜினிக்கு விருது வழங்கியது ரஜினியின் மகளுக்கு ஐநாவில் நல்லெண்ண தூதர் பதவி உள்ளிட்ட பல பதவிகளும் வழங்கப்பட்டதோடு, புதுச்சேரி ஆளுநர் கிரண்பேட்டியை வைத்து லதா ரஜினிகாந்த் மூலம் ரஜினியை பாஜகவுக்கு சாதகமாக களமிரக்கும் முயற்சிகளும் நடந்தது.

 

சென்னை ராஜ்பவனில் லதா ரஜினியைச் சந்தித்த கிரண் பேடி ரஜினியை புதுச்சேரி தூய்மைத் திட்டத்தின் நல்லெண்ணத் தூதராக செயல்படும் படி அழைப்பு விடுத்தார். அது மோடியின் ‘ஸ்வச் பாரத்’ திட்டத்தில் நேரடியாக பங்கேற்பது போன்றதுதான். அதேபோல் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்கி தனது ‘2.0’ திரைப்படத்தையும் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே தயார் செய்ய ஒப்புக்கொண்டார் ரஜினிகாந்த். பாஜகவின் ஆதரவு முகத்தோடு அரசியலுக்கு வருவது தொடர்பாக சில ஒழுங்குமுறைகளைச் செய்தாக வேண்டிய நிலையில், இப்போது அதற்கான சூழல் கனிந்திருப்பதாக நினைக்கிறார் ரஜினி.

 

ஆனால் அவரது நேற்றைய ரசிகர் சந்திப்பே தோல்வியில் முடிந்திருக்கிறது. விஜயகாந்துக்கு வந்த கூட்டத்தில் பாதிகூட ரஜினியின் ரசிகர் சந்திப்புக்கு வரவில்லை என்பதே உண்மை. ரஜினிகாந்தை விட அரசியல் அனுபவம் அதிகமாக இருக்கும் விஜயகாந்த், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி அரசியல் பிரவேசம் செய்யும்போது ரசிகர் கூட்டத்தை நம்பி அரசியலில் இறங்காதீர்கள் என்று கூறினார். அதே நிலைதான் ரஜினிக்கும், அரசியல் அனுபவமின்றி ரசிகர் கூட்டத்தை நம்பி அரசியலில் இறங்கினால் அவர் தமிழகத்தின் சிரஞ்சீவியாக வாய்ப்புள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*