தந்தை செல்வா போராட்ட வரலாறு உருவாக்கம் : தியாகு (பாகம் -3)

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மக்கள் தொகையில் அவர்களுடைய அளவு என்பது பன்னிரண்டு விழுக்காடு இந்திய தமிழர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள் வடக்கு கிழக்கு பூர்வீக தமிழர்கள் அவர்களுடைய தாயகம் அவர்கள் ஒரு தேசிய இனம் அவர்களையும் இந்த மலையக தமிழ் மக்களையும் போட்டு குளப்பி கொள்ளக்கூடாது என்பதால் அவர்கள் இந்திய தமிழர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

 

அந்த இந்திய தமிழர்களின் குடியுரிமைகள் பறிக்கப்பட்டபோது தந்தை செல்வா அவர்களும் மற்றவர்களும் இடம்பெற்ற கட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது ஆனால் நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் இயற்றப்பட்டதற்கு பிறகு தமிழ் காங்கிரஸ் எனப்படுகிற அகில இலங்கை தமிழர் காங்கிரஸ் அந்த கட்சி அதனுடைய தலைவர் பொன்னம்பலம் அவர்கள் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சராக சேர்ந்து விட்டார். இதனால் அந்த கட்சி பிளவுபட்டுத்தான் இலங்கை தமிழரசு கட்சி பிறந்தது. இந்த கட்சியை தோற்றுவித்தவர்கள் செல்வநாயகம் ஜி.எம் பி நாகநாதன் வன்னியசிங்கம் ஆகியோராவர். இவர்கள் தோற்றுவித்த அந்த கட்சி தமிழில் இலங்கை தமிழரசு கட்சி என்று அழைக்கப்பட்டாலும் அதனுடைய நோக்கம் இலங்கையில் கூட்டரசை ஏற்படுத்த வேண்டும் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் சமத்துவமான முறையில் அதிகாரபகிர்வு அடிப்படையில் ஒரு கூட்டரசை ஏற்படுத்த கட்சி நிறுவப்பட்ட நாள் 1949 டிசம்பர் 18 ஆகும். இலங்கை தமிழரசு கட்சிக்கு நான்கு முதன்மையான நோக்கங்கள் இருந்தன. இரண்டு அரசுகளோடு சிலோனில் ஒரு கூட்டாட்சி ஒன்றியத்தை ஏற்படுத்துதல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழரசும் எஞ்சிய ஏழு மாகாணங்களில் சிங்கள அரசையும் தோற்றுவித்தல். இரண்டாவதாக தமிழ் மாகாணங்களில் அரசு முன்னின்று நடத்துகிற சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்துவது. சிங்கள குடியேற்றம் என்பது அப்போதே தொடங்கிவிட்டதொன்று இலங்கையில் தமிழ் பேசும் மக்களிடையே ஒற்றுமையை வளர்த்தல் என்பது மூன்றாவது நோக்கம் தமிழ் பேசும் மக்கள் அதேபோல் மலையக தமிழர்கள் முஸ்லிம்கள் ஈழத்தமிழர்கள் இந்திய தமிழர்கள் முஸ்லிம்கள் ஆகிய மூன்று தமிழ்பேசும் மக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பது. நான்காவது நோக்கம் சிங்கள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்தை ஏற்படுத்துதல் ஆக இந்த நான்கு நோக்கங்களோடுதான் தமிழரசு கட்சி தோற்றுவிக்கப்பட்டது.
1952 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் செல்வநாயகம் தோற்றாலும் 1956 தேர்தலில் மீண்டும் அவர் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். இலங்கையினுடைய இரண்டு முக்கிய கட்சிகள் ஐக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இந்த இரண்டு கட்சிகளுமே சிங்கள பேரினவாத்தில் ஊறிய கட்சிகளாக இருந்தன. அவை கொண்டுவந்து நுழைத்த தனிச்சிங்கள சட்டம் போன்ற கொள்கைகள் நாட்டினுடைய சிறுபான்மை இனங்களுக்கு எதிரானவையாக கருதப்பட்டன. இலங்கை தமிழரசு கட்சி தமிழ் தேசியம் என்ற கொள்கை நிலையை முன்வைத்தது இது அகில இலங்கை தமிழர் காங்கிரஸ்சில் இருந்து மாறுபட்ட கொள்கையாக அமைந்தது. 1956 யூன் 5 ஆம் நாள் செல்வநாயகம் தலைமையிலான தமிழ் போராளிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிச்சிங்கள சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்திற்கு எதிரே இருக்கும் காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் செய்தார்கள் சத்தியாக்கிரக அறப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிங்கள வன்முறை கும்பல் ஒன்று காவல்துறையின் கண்முன்னாலேயே தாக்கியது இலங்கை தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜி.எம்.பி நாகநாதன் பி.எம் நவரத்தினம் ஆகியோர் ஏரியில் தூக்கிவீசப்பட்டார்கள் அவர்களது அறப்போராட்டத்திற்கு சிங்கள அரசு கொடுத்த விடை அப்போதே இதுவாகத்தான் இருந்தது. தமிழர்களுக்கு எதிரான பாகுபாடும் தமிழர்களுக்கு எதிரான கலகங்கள் வன்முறையும் வளர்ந்த நிலையில் தமிழர்களுக்கு என்று இறைமையுள்ள ஒரு தனியரசு தோற்றுவிக்க வேண்டும் என்ற கருத்து அரசியல் தலைவர்களுக்கு இடையே வளர்ந்து கொண்டே இருந்தது.
1956 ஆகஸ்ட் 19 அன்று திருகோணமலையில் நடைபெற்ற நான்காவது ஆண்டு மாநாட்டில் தமிழ் மக்களுக்கு ஒரு கூட்டாட்சி சுயாட்சி வேண்டும் என்ற ஒரு தீர்மானமும் சிங்கள தமிழ் மொழிகளுக்கிடையில் சமத்துவம் வேண்டும் என்ற தீர்மானமும் இந்திய தமிழர்களுக்கு குடியுரிமையும் வாக்குரிமையும் மீட்டளிக்கப்படல் வேண்டும் என்றும் தமிழர் நிலத்தில் சிங்கள குடியேற்றங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. 1957 ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரைக்கும் இதற்கான கால அவகாசத்தை செல்வநாயகம் சிங்கள அரசுக்கு வழங்கினார். அப்போது பிரதமராக இருந்தவர் சுதந்திர கட்சியை சேர்ந்த எஸ். டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கா இந்த காலத்திற்குள் நீங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் சட்டவெறுப்பு இயக்கம் நடத்துவோம் என்று அவர் எச்சரித்தார். இந்த கோரிக்கையை பண்டாரநாயக்கா முதலில் அலட்சியப்படுத்தினார் பின்பு அவர் இலங்கை தமிழரசு கட்சியோடு 57 ஏப்ரலில் பேச்சுவார்த்தை நடத்தி உருவான ஒப்பந்தம் தான் பண்டாரநாயக்கா செல்வநாயகம் ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தம் செல்வநாயகம் அவர்கள் சிங்கள தலைவர்களோடு செய்துகொண்ட ஒப்பந்தங்களில் முதலாவது ஒப்பந்தமாகும.; இந்த ஒப்பந்தத்தின் படி குறிப்பிட்ட சில குறைகள் உதாரணமாக வேளாண்மை குடியேற்றம் கூட்டுறவு கல்வி மின்சாரம் மீன்வளம் நலவாழ்வு வீட்டுவசதி தெழில்துறை நிலம் மேம்பாடு சாலைகள் சமூகசேவை நீர்; திட்டங்கள் ஆகிய துறைகளில் குறிப்பிட்ட அதிகாரங்களை வழங்கக்கூடிய வட்டார மன்றங்கள் அமைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது. அதேபோல் வரி விதிப்பதற்கும் கடன் பெறுவதற்குமான அதிகாரங்களும் வழங்கப்பட்டன. வட்டாரங்களை இணைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது இந்த ஒப்பந்தம் குறித்து செல்வநாயகம் முழுமனநிறைவு அடையாவிட்டாலும் ஒரு கூட்டாட்சியை நோக்கிய இடைக்கால ஏற்பாடு என்று அவர் ஏற்றுக்கொண்டார். ஆனால் ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே சிங்கள இனவாதிகள் அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள் இயல்பாகவே எதிர்கட்சியாக இருந்த ஐக்கிய தேசிய கட்சி இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக கடுமையான தீவிரமான ஒரு பிரச்சாரத்தை இனவாத இயக்கத்தை நடத்தியது. இந்த ஒப்பந்தத்தினால் நாடு பிளவுபட்டுவிடும் என்று அது அச்சுறுத்தியது. இப்போதும் கூட ஒரு கூட்டாட்சி வந்தால் இலங்கையை அது இரண்டாக பிளந்துவிடும் என்றுதான் இனவாதிகள் அச்சுறுத்துகிறார்கள் அப்போதே அது ஆரம்பிக்கப்பட்டுவிட்ட பிரச்சாரம் சிங்கள அதிகாரவர்க்கத்தினரும் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தார்கள் தமிழ் அதிகாரவர்க்கத்தினருக்கு கொடுக்கப்படுகிற சலுகை என்று இதை பார்த்தார்கள்.
இந்த நேரத்தில் தான் போக்குவரவு கழகத்தினர் வாகனங்களில் “சிறி” என்ற சிங்கள எழுத்ததை எழுத வேண்டும் என்று கட்டாயப்படுத்த தொடங்கினார்கள். யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் சிறி எதிர்ப்பு இயக்கங்களை செல்வநாயகம் தலைமை ஏற்று நடத்தினார் 58 மாச்சிலும் 58 ஏப்ரலிலும் இந்தப்பகுதிகளில் இந்த இயக்கங்கள் நடைபெற்றன. சிறி எழுத்தின்மீது செல்வநாயகம் அவர்களே தார் பூசி அழித்தார். மட்டக்களப்பில் அவர் மீது குற்றம்சாட்டி ஒருவாரகாலம் சிறையில் அடைத்துவைத்தார்கள். 58 ஏப்ரல் 9 ஆம் நாள் இந்த ஒப்பந்தத்தை அதாவது பண்டா செல்வா ஒப்பந்தத்தை எதிர்க்கும் பொருட்டு புத்த பிக்குகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் கொழும்பில் “றோஸ் மெட் பிளேஸ்” எனப்படுகிற பண்டாரநாயக்கா மாளிகையின் எதிர் புறம் இருக்கிற திடலில் ஒரு கிளற்சியை ஏற்படுத்தினார்கள். இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்கள் பண்டாரநாயக்கா என்னசெய்தார் தெரியுமா? நேராக உள்ளே சென்று செல்வநாயகத்தோடு தாம் கையெழுத்திட்ட அந்த ஒப்பந்தத்தை எடுத்துவந்து அவர்கள் முன்னாலேயே பகிரங்கமாக கிளித்துப் போட்டார் இதே கெதிதான் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பல ஒப்பந்தங்களுக்கும் ஏற்பட்டமை என்றாலும் இது தான் தொடக்கமாக அமைந்தது.

 

தமிழ் தலைமைகளோடு செய்யக்கூடிய எந்த உடன்பாட்டையும் சிங்களவர்கள் மதிப்பதில்லை என்பது 58 ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் நாள் பண்டா செல்வா ஒப்பந்தம் கிளிக்கப்பட்டதிலிருந்து தொடங்கியது. அது இன்றுவரை தொடர்கிறது என்பது நாம் அறிந்த செய்தி. அரை நூற்றாண்டுக்கு மேல் கழிந்துவிட்டபோதிலும் சிங்களம் தான் கொடுத்த உறுதிமொழிகளை தமிழர்களுக்கு கொடுக்கிற உறுதிமொழிகளை காப்பாற்றுவது இல்லை என்பதன் தொடற்சிதான் ஐ.நா மனித உரிமை மன்றத்தில் உலகத்திற்கு சர்வதேசத்திற்கு அளித்த உறுதிமொழியை அது காப்பாற்றாமல் தள்ளிப்போடுவதிலும் காலம் கடத்துவதிலும் கைகழுவுவதிலும் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. இந்த வரலாற்றில் செல்வநாயகம் அவர்கள் மேலும் மேலும் போராடுவதற்கு இந்த ஒப்பந்த கிழிப்பு ஒரு தூண்டுதலாக அமைந்தது அடுத்து நடந்த போராட்டங்கள் மீண்டும் சிங்களவர்களோடு ஏற்பட்ட ஒப்பந்தங்கள் எப்படி இந்த ஒப்பந்தங்களும் ஒப்பந்த கிழிப்புகளும் இறுதியில் தமிழீழ கோரிக்கைக்கு வழிவகுத்தன .

தொடரும்….

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*