எழுத்தாளரின் உழைப்பை திருடினாரா கங்கனா ரானாவத்?

‘பெண்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டியவர்கள் அல்ல; காதலிக்கப் பட வேண்டியவர்கள்’ – கங்கனா ரானாவத்தின் ஒவ்வொரு அசைவும் நினைவூட்டும் தத்துவம் இது. இன்று,மேலும் ஒரு சர்ச்சையை இலகுவாக விளக்கியிருக்கிறார் ‘க்வீன்’ கங்கனா.

நான்கு தினங்களுக்கு முன்னர் ‘சிம்ரன்’ படத்தின் டீசர் வெளியானது. படத்தை இயக்கியது ஹன்சல் மெஹ்தா, முன்னணி பாத்திரத்தில் நடித்தது கங்கனா ரானாவத். எழுதியது ? அங்கே தான் குழப்பம். கதையின் சாராம்சம் முற்றிலுமே என்னுடையது, அதற்கு முழு அங்கீகாரமும் கொடுக்காமல் கங்கனா ரானாவத் தட்டிப் பறிக்கிறார் என்கிறார் அபூர்வா அஸ்ரானி. படத்தின் கிரெடிட்டில் கங்கனா ரானாவத்திற்கு ‘கூடுதல் எழுத்து’ எனும் கிரெடிட் வழங்கியதே அஸ்ரானியின் கோபத்திற்கு காரணம்.

நமக்கு கங்கனாவை பற்றித் தெரியும். கடின உழைப்பு, வெளிப்படையான பேச்சு,கொட்டிக் கிடக்கும் திறமை,சர்ச்சைகளை காலடியிலிட்டு நசுக்கும் துணிச்சல்.இப்படிப்பட்ட கங்கனா ஒரு எழுத்தாளரின் உழைப்பை திருடுவாரா? இதே நேரத்தில், Shahid படத்தில் எடிட்டராக மட்டுமே நுழைந்த அபூர்வா அஸ்ரானி பின்னர் ‘எழுத்தாளர்’ கிரெடிட்டும் கேட்டார் என எழுத்தாளர் சமீர் கௌதம் சிங் தெரிவித்திருக்கிறார்.

huffingtonpost இணையதளத்திற்கு கங்கனா அளித்திருக்கும் பேட்டியின் குறுகிய வடிவம் :-

கேள்வி : சிம்ரன் படத்தை எழுதியது யார் என்பது குறித்து சிக்கலாகி இருக்கிறது. இந்த படம் தோன்றியது குறித்து சொல்லுங்கள்.

படத்தின் இயக்குநர் ஹன்சல் மெஹ்தா அமெரிக்காவில் இருந்த போது , சட்ட விதிமீறல்கள் செய்து வாழும் ஒரு பெண்ணை பற்றிய BBC  ஆவணப்படத்தை பார்த்ததாக சொன்னார். நான் அதில் முன்ணணி பாத்திரத்தில் நடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இருவரும் அதில் ஒன்றாக வேலை செய்வதாக ஏற்றுக் கொண்டோம். யார் எழுதுவது எனக் கேட்ட போது, அவருடைய எடிட்டர் அபூர்வா அஸ்ரானியுடன் எப்போதும் கலந்தாலோசிப்பதாக சொன்னார். அப்படித் தான் அபூர்வா உள்ளே வந்தார். Shahid மற்றும் Aligarh படத்தை ஏறத்தாழ இவர் தான் எழுதினார் என ஹன்சல் சொன்னார். எனக்கு அந்த படங்கள் ரொம்ப பிடிக்கும் என்பதால் நானும் ஏற்றுக் கொண்டேன்.

கேள்வி : அபூர்வா பதிவு செய்த கதைக்கும் இப்போது திரைப்படமாகியிருக்கும் கதைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

போதை பழக்கத்திற்கு ஆளாகியிருக்கும் ஒருவர் பற்றிய டார்க்-த்ரில்லர் கதை அபூர்வாவினுடையது. Wolf of Wall Street பாணியில் பங்கு சந்தை குறித்தும் இருந்தது. நான் தான் நாம் முப்பது கோடி ரூபாய்க்கு படம் பண்ணுகிறோம், குறைந்தபட்சம் அறுபது கோடி ரூபாயாவது வசூல் செய்ய வேண்டும். இப்படிப்பட்ட படம் செய்தால் பெரிய அளவிலான பார்வையாளர்களை அது ஈர்க்காது என்றேன். ஹன்சல் என்னிடம் அபூர்வாவிடம் பேசி திரைக்கதையை எளிதாக்கும்படி சொன்னார்.

ஒன்றை தெளிவாக கேட்டுக் கொள்ளுங்கள்: நடிப்புக் கலைஞர்கள் எல்லோரும் பணம் சார்ந்து இயங்குபவர்கள் தான். கடைகளில் ரிப்பன் வெட்டுவதற்கு கூட சிலர் பனம் வாங்குவார்கள். எனக்கு நடிப்பதற்கு காசு கிடைக்கும் போது, என்னுடைய க்ரியேட்டிவ் எழுத்து ஐடியாக்களை பிறருக்கு கொடுக்க நான் ஒன்றும் உயிரை விடவில்லை. நடிகர்களுக்கு எப்போதுமே திரைக்கதை பிரமாதமாக இருக்கவேண்டும். அப்படி இல்லாத போது, நீங்கள் தான் அதை சரி செய்ய வேண்டும். அபூர்வாவோடு கலந்தாலோசிக்கும் போதே இவர் நான் எதிர்பார்த்த எழுத்தாளர் இல்லை என்பதை புரிந்து கொண்டேன். இதற்கு முன் இவர் செய்த வேலை குறித்து விசாரித்த போது அதை எதையுமே அவர் செய்யவில்லை என்பதை கண்டுபிடித்தேன்.

கேள்வி : உங்களுக்கு அந்த கதை ரொம்ப பிடித்ததாக அவர் சொன்னாரே…..

… கதையை கேட்டு நான் துள்ளி குதித்ததாகவும் சொல்கிறார்கள். இன்று ‘சிம்ரன்’ விவாகரத்தான ஒரு பெண்ணின் கதை என்றால், அதை அறிமுகப்படுத்தியது நான். படத்தில் பெண்ணியம் இருக்கிறது என்றால், அதை சேர்த்தது நான். படத்தில் தந்தை – மகள் டிராக் ஒன்று, காதல் டிராக் ஒன்று – எல்லாவற்றையும் இணைத்தது நான். Rangoon படத்திற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த வேளையில் தான் அத்தனையையும் செய்தேன். படப்பிடிப்பு தளத்தில் வசனங்களை எழுதுவதாக ஹன்சலிடம் சொன்னேன்.

கேள்வி : படப்பிடிப்பு முடிந்த போது இயக்குநர் ஹன்சல் மெஹ்தா உங்களுக்கு கிரெடிட் வழங்கும் அளவிற்கு உங்களுடைய பங்கு இருந்தது என நினைத்தாரா?

நிச்சயமாக. நான் இன்னொருவரின் வேலையை நான் திருட விரும்பவில்லை. அதே நேரத்தில் நான் போட்டிருக்கும் உழைப்பிற்கு எனக்கு அங்கீகாரமும் வேண்டும். ‘துணை எழுத்தாளர்’ ஒரு ஆப்ஷனாக இல்லாததால், ‘கூடுதல் எழுத்து – கூடுதல் வசனத்திற்கு’ ஓகே சொன்னேன். கதையின் அடிப்படை ப்ளூப்ரிண்ட் அபூர்வாவினுடையது, அதற்கு அவருக்கு கிரெடிட் கொடுக்கப்பட்டிருக்கிறது வேறென்ன வேண்டும் என புரியவில்லை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*