காஷ்மீர் :சீற்றத்தின் கற்கள் -ஃபைசுல் யாசீன் -2

நன்றி: www.frontline.in
தமிழில் :ஸ்னேகா

முதல் பாகம்
ஸ்ரீநகரின் முன்னாள் மேயரும், நேஷனல் கான்ஃபரன்ஸ் இளைஞர் அணி தலைவருமான சல்மான் அலி சாகரும் இதையே தான் சொல்கிறார். முன்னணி கட்சிகளின் இளம் தலைவர்களை விட்டுவிட்டு ஹிஸ்ப் போராளிகளை காஷ்மீரி இளைஞர்கள் வழிபடுவது, மத்திய அரசு ஆதரவு கட்சிகள் அனைத்திற்கும் பெரும் கவலைக்குரியதாக இருக்கிறது என அவர் நம்புகிறார்.

 

பாகிஸ்தானின் ஆதிக்கம் காஷ்மீரில் அதிகரிப்பதும் (போராட்ட பேரணிகளில் பாகிஸ்தான் கொடிகளின் எண்ணிக்கை ஏதேனும் குறியீடாக இருப்பின்) முன்னணி கட்சிகளின் கலக்கத்திற்கு காரணமாக இருக்கிறது. மத்திய அரசை தொல்லை செய்யவே , காஷ்மீரி இளைஞர்கள் இவ்வாறு செய்கிறார்கள் எனவும் அஹமது கூறுகிறார்.பசுக்காவலர்கள் தங்களுக்கு சாத்தியமான சூழலில் நடமாடவும், இஸ்லாமியர்கள் குறிவைக்கப்படவும் செய்து இந்திய ஜனநாயகம் எனும் திரையை வலது சாரி பாஜக அகற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது என அஹமது கூறுகிறார்.
கல்லெறிந்து போராடும் இளைஞர்கள் எல்லாம் பாகிஸ்தானின் ஏஜெண்டுகள் என்பது இந்திய ஊடகம் உண்டாக்கி வைத்திருக்கும் பிம்பம். முற்றிலும் மாறுபட்ட கதை ஒன்றை சொல்கிறார் 23 வயதான கம்ப்யூட்டர் எஞ்சினியர் இனாம் ஷா. “ ஹுரியத் தலைவர்கள் நடத்தும் போராட்டங்களில் எல்லாம் நான் பங்கெடுப்பதே இல்லை. ஒடுக்குமுறை செய்யும் படைகளினால் காஷ்மீரி ஒருவன் காயப்பட்டாலோ கொல்லப்பட்டாலோ தான் போராட்டங்களுக்கு செல்வேன்” என்கிறார்.

தென் இந்தியாவில் எஞ்சினியரிங் படித்த ஷா, தன்னுடைய நண்பர் டுஃபைல் மாட்டூ 2010 ல் போலீசாரால் கொல்லப்படும் வரை எந்த போராட்டத்திற்கும் போனதில்லை. மெஹ்பூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா, குலாம் நபி ஆசாத், சஜாத் கனி லோன் ஆகிய முன்னணி அரசியல்வாதிகள் எல்லோரையும் விமர்சிக்கும் ஷா பிரிவினைவாதிகளின் திட்டங்களையும் விமர்சிக்கவே செய்கிறார். “ ஹுரியத், பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்திக்க வேண்டும்” என்கிறார்.
இந்தியாவோடும் பாகிஸ்தானோடும் வணிகத் தொடர்புகளோடு இருக்கும் சுதந்திரமான ஒரு காஷ்மீருக்கு தான் ஷா ஆதரவளிக்கிறார். “ மோடி அரசு பெருமை பேசுவதை எல்லாம் அவர்களோடே வைத்து கொண்டு எங்களுக்கு சுதந்திரம் அளித்தால் மட்டும் போதும்” என வளர்ந்து வரும் இராணுவமயமாக்கல் தான் காஷ்மீரில் மனித உரிமை மீறல்களுக்கு காரணம் எனச் சொல்கிறார். “ ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் ஆயுதப்படை அதிகாரிகளை பார்க்க முடியும், சிறப்பாயுத சட்டத்தின் உதவியோடு அப்பாவி மக்களை கொன்று குவித்து அதிலிருந்து தப்பிக்கிறார்கள்” என்கிறார்.
காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை நிறுத்த சிறந்த வழி, புது தில்லியும் இஸ்லாமாபாத்தும் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தத்திற்கு வரும் வரை, ஆயுதப்படைகளை காஷ்மீரில் இருந்து வெளியேற்றி எல்லையில் வைப்பது தான். “ இது நடக்கும் வரை, காஷ்மீரிகளுக்கு கல்லெறிவது தவிர வேறு வழியில்லை” என்கிறார். ஆனால், உச்ச நீதிமன்றமோ மாணவர்கள் காவலர்கள் மீதும் துணை இராணுவம் மீதும் கல்லெறிவதை நிறுத்தி விட்டு பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும் எனச் சொல்கிறது.
தோக்ரா மற்றும் மொஹல் ஆட்சிக்கு எதிராகவும் காஷ்மீரில் கல்லெறியும் போராட்டம் நடந்திருக்கிறது. ஆனால், தற்போது நடக்கும் போராட்டம் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் கவலையளிக்க காரணம், காஷ்மீர் மக்கள் தொகையில் 75% பேர், 35 வயதுக்கு உட்பட்டவர்கள். 1990 களில் காஷ்மீரில் இராணுவம் உச்சத்தில் இருந்த போதும் கூட, போராட்டங்கள் பெரிய அளவில் வளர்ந்திருக்கவில்லை. 2008,2009,2010 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் தான் காஷ்மீர் பள்ளத்தாக்கில் கல்லெறிந்து போராடுவது போராட்ட வகைகளில் பிரதானமானதாக இருந்தது.
2008 ஆம் ஆண்டு முதல் கல்லெறியும் போராட்டம் மிக பிரபலமானதாக மாற, கல்லெறிந்து போராடுபவர்கள் ஒரு குழுவை அமைத்துக் கொண்டு அதற்கு “தெஹ்ரீக்-இ-சங்பாஸ்” (கல்லெறிபவர்களின் இயக்கம்)என பெயரிட்டார்கள். இதற்கு பதிலளிக்கும் விதமாக காவல்துறையினர் ஒன்பது வயது சிறுவனை கைது செய்து, அவனை தீவிர கல்லெறியும் கலகக்காரன் என முத்திரை குத்தியது. மூன்றாம் வகுப்பில் படிக்கும் அந்த சிறுவனை கடந்த மாதம் கைது செய்து, ஜம்மு அண்ட் காஷ்மீர் ஸ்டேட் ரன்பீர் பீனல் கோடின் பிரிவுகள் 147,148,149,152,427 மற்றும் 336-ன் கீழ் வழக்கு பதிவு செய்து, முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்தனர் காவல்துறையினர்.


அமர் சிங் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படிக்கும் 20 வயது அஹமது வானி, ஸ்ரீநகரின் ராஜ்பாஹ்ஹில் வசிப்பவர், “ எங்களுக்கும் கல்லெறிய வேண்டாம் தான், ஆனால், திருப்பி அடிக்க எங்களுக்கு வேறெந்த வழியும் இல்லாத கட்டாயத்தினால் தான் இப்படி செய்கிறோம்” என்கிறார். பாதுகாப்பு படைகள் செய்யும் அட்டூழியங்கள் தான் இளைஞர்களை கல்லெறிய செய்கிறது என்கிறார். “ நான், துப்பாக்கி எடுக்கக் கூடாது என்பதை மிகத் தெளிவாக முடிவு செய்திருக்கிறேன், ஏனெனில் துப்பாக்கி நிச்சயமாக தீர்வு இல்லை” எனும் வானி இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே நல்ல நாடு என்கிறார். இஸ்லாமிய நாடு வேண்டும் என்பது அவருடைய கருத்தல்ல என அப்படி ஒரு போலி பிம்பத்தை உருவாக்கிய ஊடகத்தை குறை சொல்கிறார்.

 
சமாதானத்தையும், சமரசத்தையும் வலியுறுத்தும் வானி, காஷ்மீர் பிரச்சைனை தீர்க்க கூடியது என்றே உணர்கிறார். ஆனால், இந்திய அரசு அது குறித்து நேர்மையாக இயங்கவில்லை, “ அவர்கள் நேர்மையாக இருந்தால், இளைஞர்கள் அவர்கள் மீது கல்லெறிவார்களா?” எனக் கேள்வி எழுப்புகிறார்.

 
கல்லெறிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தும் இதையே சொல்லியிருக்கிறார்.இருப்பினும், போராளிகளை காக்கும் நோக்கோடு, துப்பாக்கி சூடு தளங்களில், இளைஞர்கள் போராட்டம் நடத்துவதை நிறுத்தவில்லை.
“ புரட்சி வளர்க்க கிளர்ச்சி தேவை” என்கிறார் அரசு பெண்கள் கல்லூரியில் முதலாண்டு பி.எஸ் சி படிக்கும் மரியம் மஜீத். “ நாம் எல்லோரும் கிளர்ச்சிக்காரர்களாக இருக்க வேண்டும்”. கல்லெறிவதை காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வாக அல்லாமல், அரசின் “ஒடுக்குமுறை தந்திரங்களுக்கு” எதிரான பொதுக் கோபத்தின் வெளியீடாகவே பார்க்கிறார். புர்ஹான் வானியின் மரணத்தை தன் வாழ்வின் திருப்புமுனையாக பார்க்கிறார் மரியம் மஜீத். “புர்ஹான் கொல்லப்பட்டது நாங்கள் யார் என்பதை எங்களுக்கு உணர்த்தியது”.“முஹமது மஹ்போல் பட், அஷ்ஃபக் மஜீத் எல்லாம் ஒரு காலத்தின் ஹீரோக்கள் என்றால், புர்ஹான் வானி என் காலத்தின் ஹீரோ”. “காஷ்மீர் இயக்கத்தை” முன் நகர்த்திச் செல்ல காஷ்மீர் பெண்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது என மரியம் மஜீத் நம்புகிறார். ஒவ்வொரு பெண்ணும் அச்சத்தை துறந்து ராணி லஷ்மி பாய் ஆக வேண்டும்.“ இமாம் ஹுசைனின் சகோதரி கர்பாலாவில் முக்கிய பங்காற்றும் போது, காஷ்மீரி பெண்கள் ஏன் காஷ்மீரின் விடுதலையில் முக்கிய பங்காற்ற முடியாது?” என்பது மரியமின் கேள்வி.

 

http://www.frontline.in/cover-story/stones-of-fury/article9687753.ece?homepage=true
கட்டுரையாளர் குறிப்பு: ஃபைசுல் யாசீன் ‘ரைசிங் காஷ்மீர்’-ன் அரசியல் ஆசிரியர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*