சிபிஐ விசாரணையில் கலாபவன் மணி வழக்கு

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் கலாபவன் மணி. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி மர்மமான முறையில் அவரது பண்ணை வீட்டில் இறந்துகிடந்தார். அவரது மரணம் குறித்து சந்தேகம் எழுந்ததால் கலாபவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர் மதுஅருந்தியதாகவும், அவரது உடலில் மெத்தில் ஆல்கஹால் அதிகளவில் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர்.

ஓராண்டாகியும் கலாபவன் மணியின் மரணம் குறித்த விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால், கலாபவன் மணியின் மனைவி, சகோதரர் உட்பட அவரது உறவினர்கள் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு அளித்தனர். மேலும் கேரள உயர் நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற்றது. கலாபவன் மரணம் தொடர்பான விசாரணையை ஒரு மாதத்திற்குள் சிபிஐ துவங்க வேண்டும் எனவும், விசாரணை அதிகாரிகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கலாபவன் மணியின் மரணம் குறித்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார். கோர்ட்டின் உத்தரவையடுத்து கலாபவனின் மரண வழக்கு சிபிஐக்கு மாறியுள்ளது. இதன் பின்னராவது அவரது மரணத்தில் உள்ள சந்தேகத்திற்கு விடை கிடைக்குமா என பார்ப்போம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*