மதுக்கடைக்கு காவல்-பெண்கள் மீது தடியடி!

தமிழகத்தில் முக்கிய இடங்களில் மற்றும் சாலையோரங்களில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டதை அடுத்து தமிழகத்தின் குடிமக்களுக்கு மதுக்கடை தட்டுப்பாடு உண்டானது. இதனால் ரேஷன் கடையில் நிற்பது போல குடிமக்கள் நெடும் வரிசையில் நின்று சரக்கு வாங்கி குடித்து சங்கடங்களைத் தொலைத்து சந்தோசப்பட்டு வந்தனர்.
 
இந்நிலையில் குடிகாரர்கள் மதுக்கடைகளுக்கு வெளியே காத்திருந்து சரக்கு வாங்குவது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாக இருந்தது. பின்னர் குடிகாரர்களுக்கு மொத்தமாக ஆப்பு வைக்கும் வகையில் மீதமுள்ள மதுக்கடைகளையும் மூடக்கோரி பெண்கள் போராட்டம் செய்யத் துவங்கினர்.
 
இதனையடுத்து போராட்டம் பெரிதாகி மதுக்கடைகளை சூழ்ந்து அவற்றை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்த தமிழக அரசு தற்பொழுது மதுக்கடை எதிர்ப்பாளர்களின் கோரிக்கையின் பேரில் முக்கியமான இடங்களில் திருமுல்லைவாயல் உள்ளிட்ட 41 இடங்களில் மதுக்கடைகளை நேற்று மூடியது தமிழக அரசு. மேலும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தான் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.  
 
இந்நிலையில் இன்று ஆம்பூரில் மதுக்கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. அழிஞ்சிகுப்பம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் அடித்து இழுத்துச் சென்றனர். மேலும் காவல் வாகனத்திற்கு  தீ வைக்கப்பட்டதால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. மதுவை ஒழித்துவிட்டால் பாவம் வருமானத்திற்கு அரசாங்கமும் அரசியல்வாதிகளும் என்ன செய்வார்கள்? பாதிக்கப்படுவது சாதாரண மக்கள் தானே. 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*