குரல் மாதிரியை பதிவு செய்ய மறுத்த டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் டிடிவி தினகரன் மற்றும் சுகேஷிடம் குரல் மாதிரி சோதனை நடத்த டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திர சேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி, டெல்லியில் ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கடந்த ஏப்ரல் மாதம் 16-ம் தேதி கைது செய்தனர். முன்பணமாக கொடுக்கப்பட்ட ரூ.10 கோடியில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை சுகேஷிடம் இருந்து டெல்லி போலீஸார் பறிமுதல் செய்தனர். சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து டிடிவி தினகரனையும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் ஏப்ரல் 25-ம் தேதி டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். லஞ்ச பணத்தை பரிமாற்றம் செய்ய ஹவாலா தரகராக செயல்பட்ட நரேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 4 பேரும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது குறித்து டிடிவி தினகரனும், சுகேஷும் பலமுறை செல்போனில் பேசியுள்ளனர். இந்த உரையாடலை போலீஸார் பதிவு செய்து வைத்துள்ளனர்.

பதிவு செய்யப்பட்டுள்ள குரல்கள் இவர்கள் இருவருடையதுதான் என்பதை நிரூபிக்க, இருவருக்கும் குரல் மாதிரி சோதனை நடத்துவது அவசியமாகும். எனவே, டிடிவி தினகரன் மற்றும் சுகேஷிடம் குரல் மாதிரி சோதனை நடத்த அனுமதி கொடுக்கும்படி, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 10-ம் தேதி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது. அதைத் தொடர்ந்து டிடிவி.தினகரன், சுகேஷ் ஆகியோரிடம் குரல் மாதிரி சோதனை நடத்த அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே, டிடிவி தினகரன், அவரது நண்பர் ஜனார்த்தனன் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை நேற்று பரிசீலித்த டெல்லி மாவட்ட நீதிமன்றம், இந்த மனுக்கள் மீதான விசாரணை வருகிற 22-ம் தேதி நடக்கும் என்று அறிவித்துள்ளது.

தற்போது இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் டிடிவி தினகரன் உட்பட ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பாபு என்ற ஹவாலா ஏஜென்டையும் டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். அவரை அரசு தரப்பு சாட்சியாக மாற்ற போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் தனது குரல் மாதிரியை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார். ஏனெனில் குற்றவியல் சட்டத்தில் குரல் மாதிரியை பதிவு செய்ய எந்த விதிகளும் இல்லை என டிடிவி தரப்பில் தெரிவித்துள்ளனர்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*