அம்மையில் துவங்கி மோடியின் பொம்மையாக மாறிய ஒரு வருட அதிமுக ஆட்சி!

எம்.ஜி.ஆர் கூட அதிமுகவுக்கு இத்தனை பெரிய வெற்றியைக் கொடுக்க முடியவில்லை. இரண்டவது முறையாக ஜெயலலிதா தலைமையில் அதிமுக பெற்ற வெற்றி பிரமாண்டமானது.

2011 -ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவின் ஐந்து ஆண்டுகால  ஆட்சியில் மின்வெட்டு , மது ஒழிப்பு பிரச்சனைகளைத் தவிற அவருக்கு தமிழக மக்களிடம் பெரிதாக கெட்ட பெயர் எதுவும் இல்லை. அம்மா பெயரில் உருவாக்கிய திட்டங்கள் அடித்தட்டு மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஈழத்திற்காக சில,பல தீர்மானங்களை நிறைவேற்றி ஈழ ஆதர்வாளர்களின் ஆதரவை தன் வயப்படுத்திக் கொண்டவர். அந்நிய முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வருவது பற்றி கவலைப்படைவில்லை. தமிழகம் பின் தங்கி விட்டது என எதிர்க்கட்சிகள் போட்ட கூச்சலையும் அவர் கண்டு கொள்ளவில்லை.காரணம் உளவுத்துறை மூலம் அவர் எடுத்த ரிப்போர்ட்.

பெருமளவு அந்நிய முதலீடுகள் குவிக்கப்படும் போது அதனால் ஆதாயம் அடைகிறவர்களை விட பாதிக்கப்படுகிறவர்கள் அதிகம். நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கிறவர்களால் திமுகவுக்கு எழுந்த கெட்ட பெயரை அவர் கவனத்திற்கு கொண்டு சென்றார்கள். குறைந்த கூலிக்கு கிராம மக்களை வேலைக்கு அமர்த்தும் தொழில் நிறுவங்களால் அம்மக்கள் மகிழ்சியாக இல்லை மாறாக ஏதோ ஒரு வகையில் கிராமங்களைக் கைவிட்டு இடம் பெயரும் சூழலுக்கு உள்ளாகிறார்கள் என்பதை அறிந்தவர். ஒப்புக்கு முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினாரே தவிற முதலீடுகளை ஈர்க்கவில்லை.

இன்னொரு பக்கம் பத்திரப்பதிவுக்கு தடை கொண்டு வந்தார். கனிம மணல் எடுக்க தடை விதித்தார். இப்படியான அவர் செயல்கள் கிராம மக்களிடம் நல்ல பெயரை அவருக்கு சம்பாதித்துக் கொடுக்க அவர் தேர்தலின் போது நகர்த்திய முக்கிய முடிவு அபாரமானது அத்தனை தொகுதிகளிலும் இரட்டை இலை. தாமக ஜி.கே.வாசனிடம் தொகுதி தருகிறேன் இரட்டை இலையில் போட்டிட வேண்டும் என்பதுதான் அவர் வைத்த கோரிக்கை. அதற்கு யெஸ் ஆர் நோ சொல்ல முடியாத  வாசனால் போயஸ் காரனுக்குள் நுழைய முடியவில்லை.

அவரது  தேர்தல் சூத்திரம் வெற்றி பெற்றது. இரண்டாவது முறையாக பிரமாண்ட வெற்றி பெற்று முதல்வரான போதும் அரசு  கஜானா கவலைக்கிடமாக இருந்தது. ஆனால் இதை . இதனை வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என்று வர்ணித்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. நான்கே மாதங்களில்  செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதும் பன்னீர் செல்வம் வசம் பொறுப்புகள் மாறின. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்தே மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழக அரசை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதன் முதற்கட்டமாக ஜெயலலிதா தீவிரமாக எதிர்த்து வந்த உதய் மின்திட்டத்துக்கு தமிழக அரசின் ஒப்புதலை பெற்றுவிட்டது மத்திய அரசு. அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா விரைவில் மீண்டு வந்துவிடுவார் என்று அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்தார். அவரது மறைவையடுத்து அன்று நள்ளிரவே ஓ.பன்னீர் செல்வம் அவசர அவசரமாக தமிழகத்தின் இரண்டாவது முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்றதும் சென்னையை தாக்கிய வர்தா புயல் பாதிப்புகளை சரிசெய்யும் சவால் அவருக்கு வாய்த்தது.

 

அதற்கான மீட்பு நடவடிக்கைகளில் பன்னீர் செல்வம் செயல்பட்டார். ஆனால் வர்தா புயலின் பாதிப்பை கணக்கிட மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு 15 நாட்கள் கழித்தே தமிழகத்திற்கு ஆய்வு செய்ய வந்தது. இதனை தமிழக அரசு வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருந்தது. வர்தா புயலுக்கு பிறகு பன்னீர் செல்வத்துக்கு அடுத்த பெரும் சவாலாக இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராடிய ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போது மத்திய அரசுடன் பன்னீர் செல்வம் பேச்சுவார்த்தை நடத்தி ஓரளவு தீர்வும் கண்டார். ஆனால் கடைசி நாள் போராட்டத்தில் போராடிய இளைஞர்கள் மீது தமிழக காவல்துறை நடத்திய தாக்குதல் பன்னீர் செல்வத்துக்கு அவப்பெயரை வாங்கி கொடுத்தது. மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில்  சில சமூக விரோதிகள் போராட்டத்தில் கலந்துவிட்டதாகவும், அவர்கள் ஒசாமா பின்லேடன் புகைப்படத்தை வைத்திருந்ததாகவும் பாஜக கட்சியை சேர்ந்தவர் போலவே பேசியதும் அவருக்கு அவப்பெயரை வாங்கி தந்தது.  அதுமட்டுமின்றி தமிழகத்தின் தலைமை செயலாளர் ராம மோகன ராவ் வீட்டிலும், தலைமை செயலகத்தில் அமைந்துள்ள அவரது அறையிலும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை பன்னீர் அரசுக்கு பெரும் கரும்புள்ளியை பெற்று தந்தது. தமிழக வரலாற்றில் தலைமை செயலகத்தில் சோதனை நடந்த போது தமிழக முதல்வராக இருந்தவர் பன்னீர் செல்வம் என்ற மோசமான முன்னுதாரணத்துக்கு அவர் ஆளானார்.

இந்நிலையில் அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுவரையில் ஒற்றுமையோடு இருந்த கட்சி கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி சசியின் நிர்பந்தத்தால்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறி பன்னீர் செல்வம் ஜெ நினைவிடத்தில் தியானம் செய்ததைத் தொடர்ந்து அதிமுக பிளவுபட்டது. அதன்பிறகு எம்.எல்.ஏக்கள் யாரும் பன்னீர் அணிக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக 122 எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்ட மோசமான சம்பவமும் இந்த அதிமுகவின் ஓராண்டு ஆட்சி காலத்தில் நடைபெற்றது. 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தும் சசிகலாவை முதல்வராக்க விரும்பாத பாஜக காலம் தாழ்த்தியது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்வதற்கு முன்பு தனது ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமியை தமிழகத்தின் முதல்வராக நியமித்து சென்றார். பழனிசாமியும் தமிழகத்தின் மூன்றாவது முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். மூன்றாவது முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பழனிசாமி அரசு தனது ஆட்சியை தக்க வைக்கவே இன்று வரை செயல்பட்டு வருகிறதேயொழிய மக்களுக்கான எந்த நல்ல திட்டத்தையும் இதுவரை செயல்படுத்தவில்லை. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் விநியோகம் செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. மேலும் அதில் தொடர்புடைய அமைச்சர்கள் பெயருள்ள பட்டியலும் கைப்பற்றப்பட்டது.  அதில் தமிழகத்துக்கு பெரும் தலைகுனிவு ஏற்படுத்தும் விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயரும் அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தது.

டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற பழனிசாமி உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்து போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். அவரது வாக்குறுதியை நம்பி விவசாயிகளும் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் அவர்களது கோரிக்கைகள் இன்றளவும் பழனிசாமி அரசால் நிறைவேற்றப்படவில்லை. மேலும் தமிழகத்தில் இதுவரை 82 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று விளக்கமளித்ததுடன் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில்  தமிழகத்தில் விவசாயிகள் யாரும் வறட்சியால் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும்  மிகப்பெரிய பொய்யை கூறியது. மேலும் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இதனால் அரசின் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தமிழகத்தில் உள்ள பெண்கள் போராடி வருகின்றனர்.  விபத்துகள், சமூக பிரச்சினைகளை கருத்தில் கொண்டு தேசிய, மாநில நெடுஞ்சாலையிலிருந்து 500 மீட்டருக்குள் உள்ள மதுபானக் கடைகளை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அகற்ற உத்தரவிட்டது. இதனால் தங்களது வருவாய் பாதிக்கப்படும் என்று மக்களின் உயிர் குடிக்கும் டாஸ்மாக் கடைகளை ஆதரித்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.  அதை நீதிபதிகள் ஏற்கவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவின் படி தமிழகத்தில் 3,500 கடைகள் மூடப்பட்டன. திருப்பூரில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய ஒரு பெண்ணை ஏடிஎஸ்பி கன்னத்தில் அறைந்தது பழனிசாமி அரசின் கரும்புள்ளிகளில் மேலும் ஒன்றாய் இணைந்தது. பழனிசாமி அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மீது தொடர் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மீது அரசு அதிகாரி ஒருவர் பகிரங்கமாக லஞ்சம் குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் சரோஜா மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. மேலும் தமிழக உணவுத் துறை அமைச்சர் மீது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பின் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைக்க வந்த வெங்கய்யா நாயுடு தலைமை செயலகத்தில் அமர்ந்து ஆலோசனை நடத்தினார். ஜெயலலிதா இருந்த காலத்தில் இதுவெல்லாம் நடக்காத காரியம். அவர் ஆலோசனை செய்தததிலிருந்தே தெரிகிறது தமிழக அரசு சுதந்திரமாக செயல்படுகிறதா இல்லை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறதா என்று. போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம், நீட் தேர்வினை ரத்து செய்யக்கோரி போராட்டம், மருத்துவ மேற்படிப்பில் இட ஒதுக்கீடு கோரி மருத்துவ மாணவர்களின் போராட்டம் என இந்த ஆட்சியில் போராட்டம் மட்டும்தான் நடைபெறுகிறது. அரசு நடைபெறவில்லை. குறிப்பாக நீட் தேர்வினை ரத்து செய்யக்கோரி தமிழக அரசிடமிருந்து எந்த சட்டவடிவமும் வரவில்லையென்று குடியரசு தலைவர் மாளிகை தெரிவித்ததிலிருந்தே தெளிவாக தெரிகிறது தமிழக அரசின் செயல்படாத தன்மை.

கடந்த ஓராண்டு ஆட்சியில் தமிழகம் மூன்று முதல்வர்களை சந்தித்தாலும் உருப்படியான திட்டங்களை தமிழகம் இன்று வரை சந்திக்கவில்லை. பன்னீர் செல்வம், பழனிசாமி ஆகியோருக்கு தங்களது கட்சியும், பதவி ஆசையும் முக்கியமாக இருக்கிறதேயொழிய தமிழக நலன் முக்கியமாக தெரியவில்லை. தமிழக அரசு மக்களிடம் நல்ல பெயர் வாங்குவதைவிட மத்தியில் ஆளும் பாஜக அரசிடம் நல்ல பெயர் வாங்குவதையே முதல் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாகத்தான் பிரதமர், அமைச்சர்கள் என அரசு உயரதிகாரிகளின் வாகனங்களிலிருந்து சிவப்பு சுழல் விளக்கை அகற்றும் திட்டம் நடைமுறைக்கு வரும் முன்னரே முதல்வர் பழனிசாமி தனது வாகனத்தில் இருந்து ஒரு முதலமைச்சராக இந்தியாவிலேயே முதன்முறையாக சிவப்பு சுழல் விளக்கை அகற்றினார். அதன் இரண்டாம் கட்ட நடவடிக்கையாக அமைச்சர்கள் யாரும் மத்திய அரசினை விமர்சிக்க வேண்டாம் என பகிரங்கமாக தெரிவித்தார். இவ்வாறு பல இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில் அதிமுக அரசு தனது ஒரு ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. இந்த ஒரு ஆண்டில் தமிழக அரசு செய்த சாதனையை பட்டியலிட்டால் ஒரு சாதனை மட்டுமே இருக்கிறது. உட்கட்சி பிரச்னை, பாஜகவின் தலையீடு போன்ற பல இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இந்த ஒரு ஆண்டை தமிழக அரசு தத்தளித்து பூர்த்தி செய்திருப்பதே அந்த சாதனை. இந்த அரசு இன்னும் 4 வருடங்கள் நகர்ந்துவிட்டால் அதுவே இந்த அரசின் பெரிய சாதனையாகும். ஆனால் கடைசி வரை தமிழக மக்களுக்காக இந்த அரசு செய்த சாதனை என்னவென்று தமிழக அரசிடம் கேட்டால் மௌனத்தை தவிர தமிழக அரசிடம் வேறு பதிலிருக்காது என்பதே நிதர்சனம்.

அம்மாவில் துவங்கி மோடியின் பொம்மையாட்சியாக  தடுமாறிக் கொண்டிருக்கிறது அதிமுக அரசு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*