வைரவிழா அழைப்பிதழ் கருணாநிதிக்கு நேரில் வழங்கப்பட்டது!

திமுக தலைவர் கருணாநிதிக்கு எடுக்கப்படும் வைரவிழாவுக்கான அழைப்பிதழை கருணாநிதியிடம் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் நேரில் வழங்கினர்.

திமுக கட்சியின் தலைவர் கருணாநிதி வருகிற ஜீன் 3-ஆம் தேதி தனது 94-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவர் கடந்த 1957-ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் முதன்முறையாக வென்று சட்டமன்ற உறுப்பினரானார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தல்களில் அவர் தொடர்ச்சியாக வென்று தொடர்ந்து 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இதனால் இந்த ஆண்டுடன் அவர் சட்டமன்றத்துக்குள் நுழைந்து 60 ஆண்டுகள் நிறைவடைவதால் அவருக்கு வைரவிழாவும் எடுக்கப்படுகிறது. இந்த விழா வரும் ஜீன் மாதம் 3-ஆம் தேதி     சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மாலை 5 மணிக்கு திமுக சார்பில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படவுள்ளது.  இதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜம்மு – காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், திரிணாமூல் காங்கிரஸ் மாநிலங்களவை குழு தலைவர் டெரிக் ஓபராயன், புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட தேசிய தலைவர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். மேலும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரளா முதல்வர் பினராயி விஜயன் போன்றோரும் இவ்விழாவில் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது. இவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வைரவிழாவுக்கான அழைப்பிதழை திமுக தலைவர் கருணாநிதியிடம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், திமுக கட்சியின் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் துரை முருகனும் செவ்வாய் கிழமை மாலை நேரில் சென்று வழங்கினர். கருணாநிதிக்கு அழைப்பிதழ் வழங்கும் புகைப்படமும் திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. கருணாநிதியின் தற்போதைய புகைப்படம் வெளியாகியிருப்பதால் திமுக தொண்டர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் கருணாநிதியின் தற்போதைய உடல் நிலையினை பொறுத்தவரையில் அவர் இவ்விழாவில் கலந்து கொள்வது சந்தேகம் என்றே கூறப்படுகிறது. அதே நேரத்தில் மருத்துவர்கள் அனுமதித்தால் கருணாநிதி விழாவில் கலந்து கொள்வார் என்று ஸ்டாலின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கருணாநிதிக்கு எடுக்கப்படும் சட்டமன்ற வைரவிழாவாக இது இருந்தாலும் எதிர்வரும் குடியரசு தலைவர் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை சந்திக்கும் விதமாக பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்கும் விழாவாகவும் இருக்கலாம் என கருதப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*