மாட்டிறைச்சிக்கு தடை நாடு முழுவதும் அதிர்ச்சி!

நாடு முழுவதும் மாட்டிறைச்சி விற்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக மத்திய அரசாக மாறிய பிறகு பல்வேறு சர்ச்சைகளுக்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து மாட்டிறைச்சி கூடங்களுக்கும் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் பாஜக கட்சி ஆளும் மாநிலங்களில் பசுக்காவலர்கள் என்ற அமைப்பினை தொடங்கியது. அவர்கள் பசுக்களை காக்கிறோம் என்று சொல்லி மக்கள் மீது தாக்குதலை நடத்தி வருகிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் பெஹ்லுஹான் என்பவர் பசுக்காவலர்கள் தாக்கியதால் உயிரிழந்தார். டெல்லியில் ஒரு பெண் தன்னை விரட்டி வந்த பசுவை துரத்தியதற்காக தாக்கப்பட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன் மத்திய பிரதேசத்தில் ஒரு இளைஞர் பசுக்காவலர்களால் தாக்கப்பட்டார். இப்படி தொடர்ந்து நாடு முழுவதும் பாஜக ஆளும் மாநிலங்களில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சட்டீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் ஒருபடி மேலே போய் பசுவதை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுமென்று கூறினார். இதனையெல்லாம் மத்தியில் ஆளும் பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை. பசுக்களுக்காக மனிதர்களை வதைத்து மதச்சார்பற்ற நாட்டினை மத கொள்கையுள்ள நாடாக மாற்றி கொண்டிருக்கிறது மத்திய அரசு.

இந்நிலையில் நாடு முழுவதும் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. கால்நடைகள் விற்பனைக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, விவசாயிகள் மட்டும் மாடுகளை சந்தைகளில் விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சந்தைகளில் மாடுகளை விற்பனை செய்பவர்கள் எழுத்துப்பூர்வமாக இதற்கான உறுதியை அளிக்க வேண்டும். மாட்டுச் சந்தை கமிட்டியும் மாடு விற்பனை செய்வது இறைச்சிக்காக அல்ல, விவசாய தேவைக்கு தான் என்பதை உறுதி செய்ய வேண்டும். மிருக வதைக்கு எதிராக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி எருமை, பசு, ஒட்டகம், காளை உள்ளிட்டவற்றை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதிக்க முடிவு செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்நடவடிக்கை கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*