மனிதனை வதைக்கும் ‘மாட்டுச் சட்டம்’ சொல்வது என்ன?

நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து புதிய விதிமுறைகளை அறிவித்திருக்கிறது சுற்றுச்சூழல் அமைச்சகம். மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. கால்நடைகளை வாங்கும் எவரும் விவசாயத் தேவைகளுக்காக மட்டுமே கால்நடைகளை வாங்குவதாகவும், மாட்டிறைச்சிக்காக வாங்கவில்லை எனவும் உறுதியளிக்க வேண்டும் என புதுச்சட்டம் வலியுறுத்துகிறது.

மேலும், விலங்கு சந்தைகளில் கால்நடைகள் தொடர்பான நடவடிக்கைகளில் பெருமளவிலான பதிவேடுகளையும், ஆவண வேலைகளையும் கூட்டியிருக்கிறது புதிய அறிக்கை.தாசில்தார் அலுவலகம், முதன்மை கால்நடை அதிகாரி உட்பட ஐந்து நபர்களிடம் விற்பனை நிரூபணங்களை கொடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது இந்த புதிய விதி.

மாடுகளை வெட்டுவதற்கு நேரடி தடை விதிக்கப்படவில்லை என்றாலும், மாட்டிறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதன் மீது பெரும் தாக்கத்தை புதிய விதிமுறைகள் ஏற்படுத்தும். விலங்கு சந்தைகளில் விவசாயத் தேவைகளுக்காக மட்டுமே கால்நடைகளை விற்க வேண்டும் என்கிறது இப்புதிய விதி. கால்நடை என இங்கே குறிப்பிடப்படுவது – காளைகள்,எருதுகள்,இளங்காளைகள்,பசுக்கள், கன்றுகள், ஒட்டகங்கள், எருமைகள்.

pc: chalukyan G

புதிய விதிகளில் ஒரு பகுதி : –
22. கால்நடைகள் விற்பது தொடர்பான கட்டுப்பாடுகள் .

விலங்கு சந்தை கமிட்டியின் உறுப்பினர் செயலாளர் உறுதி செய்ய வேண்டியவை –

a ) இளம் விலங்கை சந்தைக்கு கொண்டுவரக் கூடாது.

b ) கால்நடையின் உரிமையாளரோ அல்லது அவருடைய அதிகாரப்பூர்வமான முகவரோ கையொப்பமிட்ட எழுத்து வடிவிலான ஒப்பந்த ஆவணம் இல்லாமல் கால்நடைகளை  சந்தைக்கு கொண்டுவரக் கூடாது.

i ) புகைப்பட அடையாள நிரூபணத்துடன், உரிமையாளரின் பெயரும் முகவரியும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

ii ) கால்நடைகளின் அடையாளம் குறித்த விபரங்களை வழங்க வேண்டும்.

iii ) இறைச்சிக்காக வெட்ட விற்கும் நோக்கில் கால்நடைகளை சந்தைக்கு கொண்டு வரவில்லை என குறிப்பிட வேண்டும்.

c) விலங்கு சந்தை கமிட்டிக்கு சமர்பிக்கப்பட்ட ஆவணங்களை சமர்பிக்கப்பட்ட தேதியில் இருந்து ஆறு மாத காலத்திற்கு கமிட்டி தக்க வைத்துக் கொள்ளும் மற்றும் ஆறு மாத காலத்தின் எந்தப் சமயத்திலும்,மேற்பார்வையாளர் ஒருவரின் கோரிக்கைக்கு இணங்க ஆவணங்கள் அவர் முன் சமர்பிக்கப்படலாம் மேலும் அவற்றின் பிரதியோ அல்லது ஆவணத்தின் பகுதி ஒன்றோ எடுக்கப்படலாம்.

d) விலங்கு சந்தையில் விலங்கு ஒன்று விற்கப்பட்டு அது சந்தையில் இருந்து வெளியேற்றப்படும் முன்னர், விலங்கு சந்தை கமிட்டி –

i) விலங்குகள் மற்றும் மக்களின் அடிப்படை வசதிகளுக்காக செலவிடும் நோக்கில், மாவட்ட விலங்கு சந்தை மேற்பார்வை கமிட்டியின் நிர்ணயப்படி, ஒவ்வொரு விலங்கிற்கும் உண்டான செலவை பெற்றுக் கொள்ள வேண்டும்.

ii) விலங்குகள் விவசாயத் தேவைகளுக்காக மட்டும் தான் வாங்கப்படுகின்றன, இறைச்சிக்காக வெட்ட வாங்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

iii) வாங்கியவரின் பெயர் மற்றும் முகவரியை பதிவு செய்து, அவருடைய அடையாள அட்டையை நிரூபணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

iv) வாங்கியவர் விவசாயிதான் என்பதை அது தொடர்பான வருவாய் ஆவணங்களை வைத்து சரி பார்க்க வேண்டும்.

v) விலங்கை வாங்கிய தேதியில் இருந்து ஆறு மாத காலத்திற்கு விலங்கை விற்கப்போவதில்லை என வாங்கியவர் ஒரு ஒப்பந்த ஆவணத்தை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் விலங்கின் போக்குவரத்து தொடர்பாக இச்சட்டத்தின் விதிகளையோ அல்லது நடப்பு காலத்தில் அமலில் இருக்கும் வேறு சட்டத்தின் விதிகளையோ பின்பற்ற வேண்டும்.

vi ) இப்படியான பதிவுகளை விற்பனை தேதியில் இருந்து ஆறு மாத காலத்திற்கு தக்க வைக்க வேண்டும்.

vii ) குறிப்பிட்ட ஆறு மாத காலத்தின் எந்தப் சமயத்திலும்,மேற்பார்வையாளர் ஒருவரின் கோரிக்கைக்கு இணங்க ஆவணங்கள் அவர்முன் சமர்பிக்கப்பட வேண்டும் மேலும் அவற்றின் பிரதியோ அல்லது ஆவணத்தின் பகுதி ஒன்றோ எடுக்கப்பட அனுமதிக்க வேண்டும்.

e) கால்நடையை வாங்கியவர் –

i ) இறைச்சிக்காக வெட்ட விலங்குகளை விற்க கூடாது.

ii ) நாட்டின் கால்நடை பாதுகாப்பு சட்டங்களை பின்பற்ற வேண்டும்.

iii) எந்த மத தேவைகளுக்காகவும் விலங்குகளை பலியிடக் கூடாது.

iv) நாட்டின் கால்நடை பாதுகாப்பு சட்டங்களின்படி அனுமதியின்றி கால்நடைகளை நாட்டிற்கு வெளியே இருக்கும் நபருக்கு விற்க கூடாது.

f) கால்நடை ஒன்று விற்கப்பட்டு அது சந்தையைவிட்டு வெளியேறும் முன்னர், விற்பனை நிரூபணம் ஐந்து பிரதிகளாக வழங்கப்பட வேண்டும், அதில் முதல் பிரதி வாங்கியவரிடம் கொடுக்கப்பட வேண்டும், இரண்டாம் பிரதி விற்பனையாளரிடம் கொடுக்கப்பட வேண்டும், மூன்றாம் பிரதி வாங்கியரின் வசிப்பு பகுதியில் இருக்கு தாசில்தால் அலுவலகத்திற்கு கொடுக்கப்பட வேண்டும், நான்காம் பிரதி வாங்கியவரின் மாவட்டத்தில் இருக்கும் முதன்மை கால்நடை அதிகாரிக்கு கொடுக்கப்பட வேண்டும் மற்றும் கடைசி பிரதி விலங்கு சந்தை கமிட்டியின் பதிவில் வைக்கப்பட வேண்டும்.

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் கோரிக்கையினால் சட்டத்தில் புதிய விதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. வடகிழக்கு மற்றும் கேரளாவை தவிர பெரும்பாலான மாநிலங்களில் பசுவை இறைச்சிக்காக வெட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது, ஆனால் எருமை போன்ற விலங்குகள் வெட்டப்படுவது சாதாரணமானதாகவே இருக்கிறது.

நன்றி: scroll.in

தமிழாக்கம்: ஸ்நேகா

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*