ரஜினியை பாஜகவுக்கு அழைக்கவில்லை : அமித்ஷா மறுப்பு

நடிகர் ரஜினியை பாஜகவுக்கு வரும்படி அழைப்பு விடுக்கவில்லை என்று பாஜக கட்சியின் தேசியதலைவர் அமித்ஷா மறுப்பு தெரிவித்துள்ளார்,

10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு நடிகர் ரஜினி சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் வைத்து தனது ரசிகர்களை சமீபத்தில் சந்தித்தார். அப்போது போர் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று அரசியல் பிரவேசம் குறித்து அவர் சூசகமாக தனது முடிவைத் தெரிவித்தார். ரஜினியின் இந்த அரசியல் பிரவேசப் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் சரிசமமாக எழுந்துள்ள நிலையில், ரஜினி பா.ஜ.க.வுக்கு வரவேண்டும் என்று அக்கட்சியின் தமிழகத் தலைவர்கள் வெளிப்படையாகவே அழைப்புவிடுத்தனர். மேலும் தெலுங்கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமித்ஷா ரஜினி அரசியலுக்கு வந்தால் மனதார வரவேற்பேன் எனவும் ரஜினி பாஜகவில் இணைய விரும்பினால் அதனை முழு மனதோடு வரவேற்போம் என்றும் கூறியிருந்தார். இதுதொடர்பாக ஊடகங்களில் செய்தியும் வெளியானது.

இந்நிலையில், ரஜினிகாந்த் பா.ஜ.க.வுக்கு வரும்படி அழைப்பு விடுக்கவில்லை என்று அமித் ஷா கூறியுள்ளார்.  இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ரஜினிகாந்த் அரசியலுக்கு வர விரும்பினால் அவரை வரவேற்பேன் என்றுதான் கூறினேன். இதில், ‘அரசியல்’ என்ற வார்த்தையைத் தான் பயன்படுத்தினேன், பாஜக என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதும், வராததும் அவருடைய விருப்பம். முடிவு அவர் கையில் உள்ளது” என்றார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*