ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவ பொம்மை எரிப்பு : தீபா பேரவையினர் கைது

தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தை வைக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீபா பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அப்போது சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவுக்கு பிரதமரை அழைத்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பு உறுதி செய்யப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து  தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த 26-ஆம் தேதி  ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி என்று மிகப் பெரிய தலைவர்களின் படங்களை வைத்துள்ள நிலையில் ஜெயலலிதாவின் படத்தை வைப்பது சட்டவிரோதமானது. ஊழல் குற்றவாளியின் படத்தை சட்டமன்றத்தில் வைப்பது தவறான முன்னுதாரணமாகும். ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டசபையில் வைத்தால், காவல்துறை தலைவர் அலுவலகத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பன், ஆட்டோ சங்கர் ஆகியோரின் படங்களையும் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வரும். அதை இப்போதே தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தீபா, திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு இளங்கோவன் ஊழலைப்பற்றி பேசலாமா என்று கூறியிருந்தார். மேலும் சென்னை சைதாப்பேட்டை பகுதியில் இளங்கோவனின் இக்கருத்துக்கு தீபா பேரவையினர் எதிர்ப்பு தெரிவித்து ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவரது உருவபொம்மைக்கு தீ வைத்தனர். இதனையடுத்து தீபா பேரவையினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*