மாட்டிறைச்சிக்கு தடை : தலைவர்கள் கண்டனம்

நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பதற்கு தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்துள்ளது. மேலும் இறைச்சிக்காக எருமை மாடு, பசு, காளை, ஒட்டகம் ஆகியவற்றை விற்பதற்கான தடை அமலுக்கு வருகிறது. விவசாயக் காரணங்களுக்காக மாடுகளை விற்க, வாங்க சட்டத்தில் புதிய விதிமுறைகளை கொண்டுவந்திருக்கிறது மத்திய அரசு. இருவர் முறையில் மாடுகளை விற்பவர்களுக்கும், வாங்கும் விவசாயிகளுக்கும்கூட அடையாளம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.. மத்திய அரசின் இந்த சட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. கேரளா மாநிலத்தில் பெருமளவு எதிர்ப்பு எழுந்து வருகிறது. கேரளாவில் நேற்று 210 இடங்களில் மாட்டிறைச்சி உணவு திருவிழா நடைபெற்றது.  மேலும் கேரளா முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசின் இந்த சட்டத்தை கேரளாவில் அமல்படுத்தப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். மேலும் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு, மத்திய அரசு இந்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென்றும் கடிதமும் எழுதியிருக்கிறார்.

இந்நிலையில் நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை என்ற மத்திய அரசின் புதிய சட்டத்துக்கு தமிழக தலைவர்களும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.

மு.க.ஸ்டாலின் (திமுக செயல் தலைவர், தமிழக எதிர்க்கட்சி தலைவர்) :
நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்பதற்கு ஒட்டுமொத்தமாக மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மிருகவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்தத் தடையின் மூலமாக மதச் சுதந்திரம், தனிமனித சுதந்திரம் நாட்டின் மதச்சார்பற்ற தன்மை, அரசியல் சட்டத்தால் அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் எல்லாவற்றையும் மறுக்கும் விதத்தில் ஒரு அறிவிக்கையை மத்திய அரசே வெளியிடுவது நல்லாட்சியின் இலக்கணம் அல்ல என்பதை மத்திய அரசுக்கு தலைமை தாங்கும் பா.ஜ.க. உணர வேண்டும்.

கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர்) :

மாட்டைக் கடித்து, ஆட்டைக் கடித்து, கடைசியில் மனிதனை கடித்தது என்ற ஒரு பழமொழி உண்டு. ஆனால் இப்பொழுது சற்று வித்தியாசப்படுத்தி மனிதனை கடித்து மாட்டைக் காப்பாற்றும் தலைகீழ் நிலைக்கு மத்தியில் உள்ள பிஜேபி தலைமையிலான அரசு நாட்டைக் கொண்டு செல்கிறது. மிருகவதை தடுப்பு என்ற பெயரால் மாட்டிறைச்சி உண்ணுவதை தடைசெய்யும் ஒரு சட்டத்தையும் மத்திய பிஜேபி அரசு கொண்டுவந்துள்ளது. நாடு முழுவதும் கால்நடை சந்தைகளில் பசு, காளை, எருமை, ஒட்டகங்களை இறைச்சிக்காக கொல்லுவதற்கு விற்கக்கூடாது. விவசாயிகள் மட்டும்தான் சந்தைகளில் கால்நடைகளை விற்கமுடியும்; சந்தைகளுக்கு கால்நடைகளைக் கொண்டுவருபவர்கள் அவற்றை இறைச்சிக்காக விற்கவில்லை என்பதற்கான உறுதிமொழி சான்றை எழுத்துப்பூர்வமாக அளிக்கவேண்டும். கால்நடைத்துறை அதிகாரிகளிடம் சான்றிதழ் பெறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் மத்தியில் உள்ள பிஜேபி அரசு தனது இந்துத்துவா கொள்கையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த முற்படுவது இந்திய அரசமைப்புச்சட்டத்திற்கு முற்றிலும் விரோத செயல்பாடேயாகும். மத்திய அரசின் மக்கள் விரோத, அடிப்படை மனித உரிமை விரோத இத்தகைய செயலைக் கண்டித்து 01.06.2017 அன்று காலை 11.00 மணிக்கு சென்னையில் ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் அறவழியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

வைகோ (மதிமுக தலைவர்) :

உலக மாட்டிறைச்சி ஏற்றுமதியில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் முன்னிலை வகிக்கிறது. இந்த நடவடிக்கையால் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இறைச்சி சந்தை பாதிக்கப்படும். எனவே புதிய அரிவிப்பினை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

திருநாவுக்கரசர் (தமிழக காங்கிரஸ் தலைவர்) :

யார் என்ன சாப்பிட வேண்டும் என்று அவரவர்தான் முடிவெடுக்க வேண்டும். மோடியும் அமித்ஷாவும் முடிவு செய்ய முடியாது. இஸ்லாமியர்கள் மற்றும் சாதாரண மக்கள் சாப்பிடும் உணவு மாட்டிறைச்சி. அது மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிக அளவில் நடைபெறுகிறது. இதனை தடுக்கும் வகையில் கொண்டு வந்துள்ள சட்டம் கண்டனத்திற்குரியது.

ஈவிகேஎஸ் இளங்கோவன் (காங்கிரஸ்) :

மாட்டிறைச்சிக்கு தடை விதித்திருப்பது தனி மனித உரிமையை பறிப்பதாகும். சர்வாதிகார மன்னர்கள் கூட தனிமனித உணவு முறையில் தலையிட்டது இல்லை. மத்திய அரசு இதனை உடனடியாக திரும்ப பெறவேண்டும்.

தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்) :

பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் செயல்படும் கிரிமினல் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களை மிரட்டிப் பணம் பறிப்பது, அவர்களைப் படுகொலை செய்வது என வெறியாட்டம் நடத்திவருகின்றனர். ‘பசு பாதுகாப்பு என்ற பெயரில் கிரிமினல்கள் பகல்வேடம் போடுகிறார்கள்’ எனப் பிரதமர் நரேந்திர மோடியே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் குற்றம்சாட்டிப் பேசினார். இப்போது அவரது அரசு போட்டுள்ள ஆணை அந்தக் கிரிமினல்களுக்கு லைசென்ஸ் வழங்குவதைப்போல இருக்கிறது. தற்போது பாஜக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் காரணமாக மாட்டை விற்பவரும், அதை வாங்குகிறவரும் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்குவதற்கும், கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புகொண்ட சொத்துகளை வாங்குவதற்கும் விற்பதற்கும்கூட இந்த அளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என்பதைப் பார்க்கும்போது இந்த அரசின் ஆணை எந்த அளவுக்குக் கேலிக்கூத்தாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். இந்நிலையில் மாடுகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் மத்திய அரசு தடை விதித்து வெளியிட்டுள்ள அறிவிக்கையை அடுத்து ஜூன் 2-ம் தேதி தமிழகம் முழுதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

விஜயகாந்த் (தேமுதிக கட்சி தலைவர்) :

மத்திய அரசு 1960-ம் ஆண்டு இயற்றப்பட்ட மிருகவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கால்நடைகளை இறைச்சிக்காக விற்பது, வாங்குவது போன்றவற்றுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து, ‘மிருகவதைத் தடுப்பு (கால்நடை சந்தை ஒழுங்குமுறை) விதிகள் 2017’ என்ற பெயரால் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவில் பல மொழி பேசக்கூடிய மக்களும், பல மதத்தை சார்ந்தவர்களும் இருக்கிறார்கள். ஒவ்வொறு மதத்தை சார்ந்தவர்களுக்கும் தனித்தனி பண்பாடு, கலாச்சாரம், உணவு முறைகளும் உண்டு. அதை தடுக்கும் வகையில் மத்திய அரசு, மாடு, ஒட்டகம் போன்ற விலங்குகளின் இறைச்சி உண்ணுவதற்கும், சந்தை விற்பனைக்கும், வாங்குவதற்கும், தடை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இது தனி மனித சுதந்திரத்தை பாதிக்கக்கூடிய செயலாகும். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபொழுது ஆடு, மாடு போன்றவை கோவில்களில் உயிர் பலியிடுவதற்கு தடை என்று ஒரு சட்டம் கொண்டுவந்தார், அதற்கு மக்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பு உண்டானதன் விளைவாக, அந்த சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற்றார் என்பதை நினைவு படுத்துகிறேன்

ராமதாஸ் (பாமக நிறுவனர்) :

இந்தியாவில் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை விதித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இது எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் குறுகிய நோக்கத்துடன் எடுக்கப்பட்ட தவறான முடிவாகும். விவசாயிகளின் விவசாயிகளின் நலனை மிகக்கடுமையாக பாதிக்கக்கூடிய மத்திய அரசின் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். இறைச்சிக்காக மாடுகள் கொல்லப்படுவதை தடுக்க நினைப்பது இயற்கை சம நிலையை பாதித்து விடும். எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மாட்டிறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதை தடை செய்யும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் புதிய விதிகளை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்) :

கால்நடைகளை வைத்து அரசியல் நடத்துவதன் மூலம் மக்களிடம் பிளவை உருவாக்கி அரசியல் ஆதாயம் பெற்றுக் கொண்டிருக்கும் பாஜக, இந்திய நாடு முழுவதும் கால்நடை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் இந்த கட்டுப்பாடுகள் மிகக் கடுமையாக விவசாயிகளை பாதிக்கும். மத்திய அரசின் இந்த சட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாகக் கண்டிப்பதோடு இந்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறது. இந்திய விவசாயிகளுக்கு மிகக்கடுமையான நஷ்டத்தையும், சமூக பதட்டத்தையும் , பொருளாதார இழப்புகளையும் உருவாக்கும் இந்த சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டுமென அனைத்து ஜனநாயக இயக்கங்களும் குரல் கொடுக்க முன்வர வேண்டும்,

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்) :

மனித உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்துள்ள அரசியல் அமைப்பு சட்ட பாதுகாப்பு வளையம் உடைத்து நொறுக்கப்படுகிறது. என்ன சாப்பிட வேண்டும்? என்ன பேச வேண்டும்? என்ன எழுத வேண்டும்? எப்படி சிந்திக்க வேண்டும் என எல்லாவற்றையும் ‘இந்துத்துவா’ சக்திகளே தீர்மானிக்கும் ஏதேச் சதிகார உச்சத்திற்கு மோடி அரசு சென்றிருக்கிறது. மோடி அரசின் மக்கள் விரோதச்செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், மாவட்ட, வட்ட, ஒன்றிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறு கட்சி அமைப்புகளையும், ஜனநாயக சக்திகளையும் கேட்டுக்கொள்கிறது.

ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி தலைவர்) :

மத்திய அரசின் ஆணை, சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் தலித்களுக்கு எதிராக மட்டுமல்ல நாட்டில் வாழக்கூடிய பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என இந்தியாவில் மாட்டிறைச் சியை உண்ணக்கூடிய ஒட்டு மொத்த இந்தியர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள ஆணையாகவே மனித நேய மக்கள் கட்சி கருதுகிறது. மத்திய பா.ஜ.க அரசின் இந்த அறிவிப்பாணையை மனித நேய மக்கள்கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தத் தடையானது நாட்டு மக்களின் உணவுப் பழக்கத்தில் தலையிடுவது மட்டுமல்லாமல் நாட்டிற்கு மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தும் எனவும், மாட்டிறைச்சி தடை போன்ற ஆணைகளால் நாட்டின் மதச்சார்பின்மைக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும், மத நல்லிணக்கத்திற்கும் ஊறுவிளைவிக்கும். எனவே மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாகத் திரும்ப பெறவேண்டும் என்றும், தமிழக அரசு இந்தத் தடை ஆணையை அமல்படுத்த முடியாது என அறிவித்து அதில் உறுதியாக இருக்க வேண்டும் எனவும், மதச்சார்பற்ற அனைத்துக்கட்சிகளும் ஓரணியில் நின்று மோடி அரசின் இந்தப்பாசிச ஆணையை எதிர்த்துக் களமாட வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா கட்சி தலைவர்)

நாடு முழுவதும் உள்ள பல்வேறு இன மக்கள் பல்வேறு விதமான உணவுப் பழக்கவழக்கங்களை கொண்டுள்ளனர். பல்வேறு மாநிலத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களில் பலர் மாட்டிறைச்சியையும் தங்களின் உணவுப் பழக்கத்தில் பயன்படுத்தி வருகிறார்கள்.இவ்வாறு மக்கள் தொன்றுதொட்டு கடைப்பிடித்து வரும் உணவுப்பழக்கங்களில் கட்டுப்பாடு விதிக்கும் வகையில் மத்தியில் ஆளும் அரசு புதிய தடையை விதித்திருக்கிறது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதாவது இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகம் போன்றவற்றை பயன்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு தடை விதித்துள்ளது. இது ஏற்புடையதல்ல. காரணம் இத்தடை தனி மனித அடிப்படை உரிமையைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இனாயத்துல்லாஹ் (அகில இந்திய தேசிய லீக் கட்சி தலைவர்) :

ஜனநாயக நாட்டில் தனி மனித சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இது போன்ற உத்தரவுகளை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். இல்லையென்றால் பா.ஜ.க.விற்கு அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தலித், இஸ்லாமிய மக்கள் மட்டுமில்லாது அனைத்து தரப்பு மக்களும் மரண அடி கொடுப்பார்கள்.

தி.வேல்முருகன் (தமிழர் வாழ்வுரிமை கட்சி) :

மக்கள் என்ன உணவை உண்ணவேண்டும் என்பதையும் நானே தீர்மானிப்பேன் என இறைச்சிக்காக மாடுகள் விற்பதையே தடை செய்து பிரதமர் மோடி சட்டம் இயற்றியுள்ளார். மாநில உரிமைகள் மீதான அப்பட்டமான இந்த தலையீடு கண்டிக்கத்தக்கது.

கிருஷ்ணசாமி (புதிய தமிழகம் கட்சித் தலைவர்) :

மாட்டிறைச்சியில் தேவையற்ற கொழுப்பு உள்ளது; அதனால் அதை தவிர்க்க வேண்டும். மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை பிறப்பித்து உத்தரவிட்டதை வரவேற்கிறேன்.

தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கிருஷ்ணசாமி மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*