தவறு செய்யும் பால் நிறுவனங்கள் இனி தப்ப முடியாது : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் ஒரு பண்ணையில் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசிய பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் பாலில் ரசாயனம் கலப்படம் செய்கின்றன என்றும் ஆவின் பால் மட்டுமே ஆரோக்கியமானது என்றும் பேசினார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாக பால் முகவர்கள் சங்கம் செயல்படுவதாகவும் தவறு செய்த பால் நிறுவனங்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படுமென்று எச்சரித்தார். மேலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில் சில தனியார் பால் நிறுவனங்கள் பாலில் ரசாயனம் கலப்படம் செய்திருப்பது உறுதியாகியிருப்பதாகவும் அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் கூறியிருந்தார். இதற்கிடையே பால் முகவர்கள் சங்கம் தலைவர் பொன்னுசாமி, பால் முகவர்கள் சங்கம் தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக அமைச்சர் நிரூபித்தால் இந்த சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகி கொள்வதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, பால் கலப்படம் குறித்து, முதல்வரிடம், அமைச்சர் விளக்கியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பாலில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜேந்திர பாலாஜிக்கு, எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சந்திப்பிற்கு பிறகு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், பாலில் கலப்படம் செய்யும் தனியார் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். விருப்பு வெறுப்பு இன்றி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார். தவறு செய்யும் நிறுவனங்கள் இனி தப்பிக்க முடியாது. பாலில் கலப்படம் செய்யும் தனியார் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்யும் பால் நிறுவனங்கள் இனிமேல் தமிழகத்தில் செயல்பட முடியாது.மக்களுக்கு தரமான பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் தவறு யார் செய்துள்ளனர் என்பது ஆய்வின் முடிவில் தெரிய வரும். சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் முடிவுகள் வந்து இருக்கின்றன. ஆவின் பாலை 4 பாக்கெட்டுகள் சோதனை செய்து உள்ளோம் அதில் கெமிக்கல் எதுவும் சேர்க்கப்படவில்லை. குழந்தைகள் உட்கொள்ளும் பாலில் கலப்படம் செய்வதை அனுமதிக்க முடியாது. என்று அவர் கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*