திருமுருகன் கைது: ஸ்டாலின் கடும் கண்டனம்!

ஈழத்தில் இனப்படுகொலைக்கு உள்ளான மக்களுக்கு அமைதி வழியில் அஞ்சலி செலுத்தச் சென்ற மே 17 திருமுருகன் மீது குண்டர் சட்டம் போட்டுள்ளது தமிழக அரசு. இது அனைத்து ஜனநாயக சக்திகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார் அதில்,

“  மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வரை குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து ஒவ்வொரு வருடமும் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் அனுமதிக்கப்பட்டு, அமைதியான முறையில் நடைபெற்று வந்திருக்கிறது. இதே சென்னை மாநகர காவல்துறைதான் அதற்கு உரிய பாதுகாப்புகளை வழங்கி வந்தது. ஆனால் அதிமுக அரசின் முதலமைச்சராக இருந்த திரு ஓ.பன்னீர்செல்வமும் சரி, இப்போது முதலமைச்சராக இருக்கும் திரு எடப்பாடி பழனிசாமியும் சரி மெரினா கடற்கரையை ஏதோ ஒரு கலவர பூமி போன்ற தோற்றத்தை வெளிநாட்டவருக்கும், உள்நாட்டில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் சித்தரித்து வருவது வேதனையளிக்கிறது. கடற்கரையில் அமைதியாக மக்கள் கூடுவதையும் தடுத்து வருகிறார்கள்.

அமைதியாக நடைபெறும் இது போன்ற நினைவேந்தல் நிகழ்ச்சிகளையும் அனுமதிக்க மறுத்து, குண்டர் சட்டத்தை பிரயோகம் செய்வது தமிழகத்தில் பேச்சுரிமைக்கு வாய்ப்பூட்டு போடும் நிகழ்வாகவே கருதுகிறேன். ஜனநாயக ரீதியில் சுதந்திரமாக உணர்வுகளை வெளிப்படுத்தும் இது போன்ற நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் எதிராக காவல்துறை அராஜகத்தை கட்டவிழ்த்து விடுவது கொடுமையான அதிகார துஷ்பிரயோகம்.

அதிமுக ஆட்சியில் மெரினா கடற்கரையில் அடிக்கடி 144 தடையுத்தரவு பிறப்பிக்கும் காவல்துறையின் அடாவடி போக்கு அதிர்ச்சியளிக்கிறது. அது மட்டுமின்றி மெரினா கடற்கரை முழுவதும் ஆங்காங்கே போலீஸாரை குவித்து வைத்து மக்களை பீதியில் உறைய வைப்பது அதிமுக அரசின் விநோதமான அரசு நிர்வாக நடைமுறையாக இருக்கிறது. மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசின் பினாமியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அதிமுக அரசு ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு பிறகு மெரினா கடற்கரையில் “அறிவிக்கப்படாத எமெர்ஜென்ஸியை” அடிக்கடி அமல்படுத்தி கருத்து சுதந்திரத்தின் குரல் வளையில் காலை வைத்து மிதித்திருக்கிறது.

சமீபத்தில் இலங்கை சென்ற பிரதமர் நரேந்திரமோடி ஈழத் தமிழர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அரசியல் தீர்வு பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதைப் பற்றிக் கூட எந்த கருத்தையும் சொல்லாமல் இருந்த அதிமுக அரசு இப்போது போரில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த முயன்றதற்காக திருமுருகன் காந்தி போன்றோரை குண்டர் சட்டத்தில் அடைத்திருப்பதைப் பார்த்தால் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசின் கட்டுப்பாட்டில் முதலமைச்சரும், அதிமுக அமைச்சர்களும் மட்டுமின்றி, காவல்துறை அதிகாரிகளும் வந்து விட்டதையே காட்டுகிறது. திரைமறைவில் இருந்து கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு இப்படி ஆட்டுவித்துக் கொண்டிருப்பதும், அந்த அரசை வாக்களித்த மக்களுக்கு எதிராகவே பயன்படுத்துவதும் கூட்டாட்சி தத்துவத்திற்கு முற்றிலும் விரோதமானது.

ஆகவே திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை உடனடியாக ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். ஜனநாயக உணர்வுகளை வெளிப்படுத்தும் அமைதி வழிப் போராட்டங்களை ஒடுக்க இப்படி காவல்துறையினரின் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும், காவல்துறையை தனது ஏவல் துறையாக தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்துவதை அதிமுக அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்க விரும்புகிறேன்” என்று அந்த அறிக்கையில்  கோரியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*