திருமுருகன் மீது குண்டர் சட்டம் பின்னணி!

2009 போரின் முடிவுக்கு பின்னர் தமிழ் தேசியக் குழுக்களை அச்சுறுத்தலாக உளவுத்துறை கணித்த போதிலும் 2011 -ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெருமளவு போராட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்ட போராட்டங்களாக நடந்தன.
இன்னொரு பக்கம் தமிழகத்தில் கடந்த ஓரு ஆண்டாகவே வெவ்வேறு கோரிக்கைகளுக்காக கொந்தளிப்பான நிலையை அடைந்த வண்ணம் இருந்தது. மது ஒழிப்பு, டாஸ்மாக் கடைகளை மூடுதல் என பல விதமான போராட்டங்களை மக்கள் தன்னெழுச்சியுடன் நடத்திய போதிலும் அவைகளுக்கு தீர்வு இல்லை.

 
தமிழகத்தில் நிலவும் தமிழுணர்வு, கலாச்சார ரீதியாக எழும் கேள்விகள் உள்ளிட்ட பல விவகாரங்கள் தொலைக்காட்சிகளில் விவாதம் ஆகும் போதும் தமிழர்களின் தரப்பில் பேசுகிறவர்கள் பிராமணர்களுடன் குறிப்பாக பாஜகவுடன் கருத்து மோதல்களில் ஈடுபடும் இயற்கையான முரண்பாடு எழுந்தது.
ஒரு விவாதத்தில் திருமுருகனை வன்முறையாளர்களாக சித்தரித்தனர். அதற்கு காரணம் ஜல்லிக்கட்டு போராட்டம். ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது போலீசாருக்கும் ஆளும் அரசுக்கும் மாபெரும் அச்சுறுத்தலாக இருந்தது. அப்போது பன்னீர்செல்வம் முதல்வராக இருந்ததால் அவர் மீதும் மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொடுத்தது அந்த போராட்டம். பல்லாயிரம் கோடி செலவிட்டு கார்ப்பரேட் பி.ஆர் ஏஜென்சிகள் மூலம் ஊதி உருவாக்கப்பட்ட மோடி பிம்பம் உடைந்து விழுந்தது மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில்தான். அந்த போராட்டத்தின் தாக்கம் இந்தியா முழுக்க பிரதிபலித்தது உத்திரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் அகிலேஷ் யாதவ் கட்சியினரும், காங்கிரஸ், மாயாவதி கட்சியினரும் மோடியை விமர்சித்ததில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை சுட்டிக்காட்டினார்கள். மோடியின் பிம்பம் தமிழகத்தில் சிதைந்து விட்டது என்று போஸ்டர், விடியோக்கள் என உத்திரபிரதேச மக்களிடம் பரப்பினார்கள்.

 
பல லட்சம் மக்களின் பேராதரவுடன் அப்போரட்டம் நடந்து முடிய அரசு அப்போராட்டத்தை பெரிய அச்சுறுத்தலாகப் பார்த்தது பெரிய அரசியல் கட்சிகளின் ஆதரவோ, பங்கீடோ இன்றி தென்னெழுச்சியாக கட்டுக்கோப்புடன் வன்முறைக்கிடமின்றி முடிந்த போராட்டம் அரசியல் ரீதியாக அச்சுறுத்த அந்த போராட்டத்தின் முடிவில் மிகப்பெரிய வன்முறையை கட்டவிழ்த்து விட்டது காவல்துறை.

 
ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்த பின்னர் போலீசார் சென்னை மெரீனாவில் எஞ்சியிருந்தவர்களை சுற்றி வளைத்த செய்தி பரவியதும் தென்னெழுச்சியாக தமிழகத்தை மக்கள் முடக்கியதுதான் புரட்சிகரமான நகர்வு அதை போலீசார் எதிர்பார்க்கவில்லை. எங்கு பார்த்தாலும் மறியல் போராட்டம் என்ற நிலையில் ஒரு நரவேட்டையை துவங்கியது காவல்துறை.

 
பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம், வீடுகள், அட்டோக்கள், வாகனங்களுக்கு தீ என மொத்த சென்னையையும் மதுரை, கோவை என போராட்டம் நடந்த சகல இடங்களையும் நாசக்காடாக்கியது பன்னீர் செல்வத்தின் போலீஸ். மிகப்பெரிய அவமானத்தைச் சந்தித்து பொது மக்களிடம் அவப்பெயரை சம்பாதித்த தமிழக காவல்துறை. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறைக்கு காரணமானவர்கள் என சிலரை கைது செய்ய திட்டமிட்டது. அது மக்கள அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் சிலர் குறிப்பாக கோவன், இன்னொருவர் மே 17 திருமுருகன் ஆனால் அப்போது மொத்த குற்றச்சாட்டுகளும் போலீசின் மீது குவிந்ததால் தற்காத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்ட போலீஸ் திருமுருகனை வேட்டையாடும் சூழலுக்காக காத்திருந்தது.

 
இதற்கிடையில் ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னர் பன்னீர்செல்வத்தை தன் கட்டுக்குள் கொண்டு வந்த மத்தியில் ஆளும் பாஜக சசிகலா அதிகாரத்திற்கு வர முயன்ற போது அவரையும் அடுத்து தினகரனையும் சிறைக்கு அனுப்பி விட்டு எடப்பாடி பழனிசாமியை தன் கைக்குள் எடுத்துக் கொண்டிருக்கிறது.
இந்த சில மாதங்களில் மறைமுகமாக அல்ல நேரடியாக பாஜக ஆட்சி செய்கிறது. அதன் முகவர்களாக ஆளுநர், தலைமைச் செயலாளர், சில, பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகளை அச்சுறுத்தி அதிகாரிகளை வைத்து பாஜக தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது.

 
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த வன்முறைகள் தொடர்பாக விசாரணைக் கமிஷனில் ஆஜராகி ஆவணங்கள் தாக்கல் செய்தார். ஊழல் மின்சாரம் என்ற ஆவணப்படத்தை திருமுருகனின் தந்தையார் காந்தி வெளியிட்டார். இந்த ஊழல் மின்சாரம் ஆவணப்படம் தமிழக மின் துறையில் பரிதாப நிலையை வெளியிட்டமிட்டுக் காட்டியது.
கூடுதலாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அடைந்த அவமானத்தை துடைக்கவும், மேலும் இது போன்று எவரும் போராடக் கூடாது என்ற உள்நோக்கத்திலுமே குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இது பாஜகவை திருப்திபடுத்த எடப்பாடி பழனிசாமி அரசு எடுத்த நடவடிக்கை அல்ல. நேரடியாக பாஜகவே தலையிட்டு எடுத்த நடவடிக்கை.

 
ஆள்வது அதிமுக அரசு ஆனால் அரசு இயந்திரத்தை இயக்குவது பாஜக. குடை சாய்ந்து குப்புற விழுந்து கிடக்கும் இந்த ஆட்சியின் அவலங்களை மக்கள் ஆங்காங்கே பேசுவதும், சில இடங்களில் வன்முறையாக அது வெளிப்படுவதும் அவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தும் நிலையில் ஒட்டு மொத்தமாக தமிழகத்தின் எதிர்ப்புக் குரலை நசுக்க நினைக்கிறது ஆளும் அரசு. அதன் ஒரு வெளிப்படையான அச்சுறுத்தல் தான் திருமுருகன் காந்தி கைது!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*