மட்டிறைச்சி தடை சட்டத்துக்கு தடை:மதுரை நீதிமன்றம் தடை!

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்க கூடாது என்று மத்திய அரசு இயற்றிய சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 26-ஆம் தேதி மத்திய அரசு நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து சட்டம் இயற்றியது. மத்திய அரசின் இச்சட்டம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. மேலும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசின் இச்சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் மத்திய அரசின் இச்சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று அம்மாநில முதல்வர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு மாட்டிறைச்சி விருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக அரசை பொறுத்த வரையில் இதுவரையில் தெளிவான பதில் எதுவும் அளிக்கவில்லை. ஆனால் திருச்சி, கோவை, சென்னை போன்ற இடங்களில் போரட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையை சேர்ந்த செல்வகோமதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல மனுவை இன்று தாக்கல் செய்தார். அதில் உணவு மனிதனின் அடிப்படை உரிமை எனவும் அவரவர் சாப்பிடும் உணவைத் தெரிவு செய்துகொள்வது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை. அதில் அரசு தலையிட முடியாது அதனால் இதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. இவ்வழக்கு இன்று காலை விசாரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இவ்வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் இவ்வழக்கை நீதிபதிகள் முரளிதரன் மற்றும் கார்த்திகேயன் விசாரித்தனர். அப்போது மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதை தடை செய்யும் உத்தரவுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தனர். மேலும் மாடு வெட்டுவதை முறைப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது எனவும் மத்திய அரசு இன்னும் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*